Saturday, June 22, 2019

எரியின் எடை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

தீ கண்ணால் காணத்தக்கது, தொடுகையால் சுடும் என்று உணரத்தக்கது. காதால் கேட்கத்தக்கதல்ல கேட்கும் ஓசை காற்றினுடையது தீயினுடையதல்ல  நாவினால் சுவையறியத்தக்கதல்ல.  மூக்கின் நுகரும் மணம் தீயினுடையதல்ல எரிபடும் பொருளினது அது.

தீயின் எடை என்ன? எரிக்கப்படும் முன்னர் பொருளை எடை பார்த்து எரிந்தபின் சாம்பலை எடை பார்த்து அதை முன்னதில் கழித்து அதுதான் தீயின் எடை என்றால்? அபத்தம். தீயினால் காற்றினுள் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டவற்றின் எடையை எந்த கணக்கில் கொண்டுவருவது? திடமானவற்றை எல்லாம் வாயுவாக்கிவிடுவது தீ.  பொருளல்ல நிகழ்வு. ஓரேடியாக அப்படி சொல்லிவிடமுடியுமா? இருமுனைகளில் பொருள் இருக்க இடையே இல்லை என்று.

தீயின் எடை என்ன?

உண்பதும் சுவாசிப்பதும் என இரண்டு மட்டுமே செய்யும் உயிர்களை ஒத்தது தீ.  ஆனால் தனக்கென நிலைத்த உருவொன்றில்லாதது.  தோன்றி மறைவது.  பொருளில் உறைவது காற்றில் கரைவது.  பிற அனைத்து உயிர்களாலும் அஞ்சப்படுவது.  தான் உண்ணும் பொருளின் மீது நின்று தோன்றுவது.  மிகச்சிறியது முதல் பேருரு சூரியன் வரை உருக்கொள்வது.  அது பாறைகளை ஆவியாக்கவல்லது.

தீதான் பொருள் தீதான் நிகழ்வு தீதான் உயிர்.  பாருங்களேன் இந்த மொழியில் கெட்டது “தீமை“யாம் நல்லது “நன்மை“யாம் (ஏதோ “நன்மை“ தண்ணீர் என்பது போல).  நீரிலும் தீதானே இருக்கிறது? அஞ்சுவதெல்லாம் கெட்டது.  ஆனாலும் நியாயம் இருக்கிறது.  அது நம்மைத் தின்றுவிடும் என்ற அச்சம் ஆதிவிலங்கு மனிதவேடம் கொள்ளும் முன்னமே ஆழதில் குறித்துக்கொண்டுவிட்ட ஒன்றல்லவா?

எப்போதும் சவால்தான் வெண்முரசு எனினும் அது வாசிப்பவரையும் உயர்த்திவிட கூடியதல்லவா ? தீயின் எடை காண காத்திருக்கிறேன்.

அன்புடன்
விக்ரம்
கோவை