அன்புள்ள ஜெ
இருட்கனியில் துரியோதனன் உள்ளத்தை உருக்கும் தன்மையுடன்
இருக்கிறான். துச்சாதனனை இழந்ததுமே அவன் பாதி செத்துவிட்டான். கர்ணனை இழந்ததும் அவன்
எஞ்சிய உயிரும் போய்விட்டது. இன்னும் ஒருநாள் உயிருடன் இருக்கப்போகிறான். அவன் உள்ளத்தில்
என்ன ஓடிக்கொண்டிருந்தது? அதைச் சொல்லாமல் வெறுமே நோக்கிக்கொண்டிருந்தான் என்று சொல்லி
விட்டுவிட்டதேகூட சிறப்பான அமைப்புதான் என தோன்றுகிறது. சொல்லி முடிக்கமுடியுமா என்ன?
அவனுடைய அந்த மௌனம் ஆரம்பம் முதலே வருகிறது. துச்சாதனன்
இறந்தபோதும் அவன் உள்ளடங்கித்தான் செல்கிறான். கர்ணனை கடைசியாக சந்தித்து போருக்குச்
செல்லும்போதும்கூட பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. அவனுடைய உள்ளம் அப்படிப்பட்டது.மௌனமானது.
ஆழமானது. இந்த மாபெரும் காவியத்தின் உண்மையான கதைநாயகன் துச்சாதனன்தானோ என தோன்றிவிடுகிறது
செந்தில்குமார்