அன்புள்ள ஜெ,
அர்ஜுனனும் கர்ணனும் செய்யும்போர் ஒரு பெரிய உருவகமாகவே வந்தது.
வெண்முரசு முழுக்க எப்படியெல்லாம் போர் மாறிமாறி வந்திருக்கிறது என்பதை தனியாகத்தான்
ஆராயவேண்டும். ஆரம்பநாவல்களில் மிகவும் யதார்த்தமாக போர் காட்டப்பட்டது. இப்போது உருவகமாக
ஆகிவிட்டது. அதற்காகவே இந்த நாவல்கள் வெவெவெறு கதைசொல்லிகளால் சொல்லப்பட்டவை போல் உள்ளன
என நினைக்கிறேன். கதைசொல்லிகள் வந்ததுமே அஸ்திரங்களின் இயல்புகள் மாறிவிட்டன. அவை வெடிகுண்டுகளாக
முதலில் இருந்தன. இப்போது கதிரியக்கம் போலவே தோன்றுகின்றன. விளைவுகளும் அணுகுண்டு வெடிப்பதைப்போல்
தெரிகின்றன.
இந்த அஸ்திரப்போரில் கர்ணன் ஜாக்ரத் ஸ்வப்னம் சுசுப்தி துரியம்
ஆகிய நான்கிலிருந்தும் அம்பை எடுத்து அர்ஜுனனை தாக்குகிறான். நான்கையும் எப்படி எதிர்கொள்வது
என்று கிருஷ்ணன் சொல்லிக்காட்டுகிறார். துரிய அம்பில் அர்ஜுனன் தன்னை கர்ணனாக கர்ணனின்
துரியத்தின் உள்ளே காண்கிறான். கர்ணனாக நின்று அர்ஜுனனின் மகன்களைக் கொல்கிறான். அது
அர்ஜுனனாக நின்று அவன் கர்ணனின் மகன்களைக்கொல்வதாக மாறிவிடுகிறது. இந்த சிக்கலான தலைகீழ்மாற்றத்தை கூர்ந்து வாசிக்கவேண்டியிருக்கிறது.
அதோடு ஆழ்மனசில் இவர்க்ள் எப்படி ஒருவரொடு ஒருவர் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என்பதைக்
காட்டுகிறது. ஓர் உருவகமாக ஆழமாக வாசிக்கவேண்டிய பகுதி அது
ஜெயராமன்