Saturday, June 22, 2019

வெண்முரசு வாசிப்பு-2



இன்றைய உங்கள் பொதுப்பதிவான மாயாவிலாசத்தில் வந்த ஒரு பகுதி கீழே;



///ஆஸ்திரேலியாவில் பெரிய புல்வெளிகளில் மின்கம்பியால் வேலியிட்டு முதல்தலைமுறை பசுக்களை வளர்ப்பார்கள். பசுக்களின் உள்ளுணர்வில் மின்கம்பிவேலி பதிந்தபின் மின்சாரத்தை நிறுத்திவிடலாம். பலதலைமுறைக் காலம் அவை அந்த கம்பியை மீறிச்செல்ல முயலாது.//

இந்த அறிதலை நீங்கள் வெண்முரசில் பதிவு செய்யத் தவறவில்லை. காந்தார நாட்டில்  ஒட்டக வளர்ப்பிற்காக இதே முறைமையை கடை பிடிப்பதாக சொல்லும் ஒரு உரையாடல் வரும்; சுற்றிலும் சுண்ணத்தை தூவி எல்லைக்கோடிடுவது. அதை மீறும் குட்டிகளுக்கு கடும் தண்டனை அளிப்பதன் வழியாக அவற்றின் தலைமுறை தோரும் அதைக் கடத்துதல்.

வெண்முரசில் நான் கண்ணீர் விட்ட தருணங்களையும் வாய்விட்டு உரக்க நகைத்த தருணங்களையும், மெய்சிலிர்க்கும் இடங்களையும் தனித் தனியாகவே தொகுத்து வருகிறேன்.

உச்சகட்ட விம்மல் வெளிப்படுவது,

அங்கரின் முடிசூட்டு விழாவில் அதிரதர் நுழைந்து பேசுமிடம்.

திருதராஷ்டிரர் தன் ஆணவமழிந்து பிதாமகரைப் பணியுமிடம்; "ஞானமில்லாத குருடன் பிதாமகரே"

தந்தையிடம் அடி வாங்கி படுத்திருக்கும் மூத்த கௌரவரையும், துச்சாதனனையும் காண பாண்டவர்களை இளைய யாதவர் அழைத்துச் செல்லுமிடமிடத்தில் நிகழும் உணர்வெழுச்சி.

துரோணர், தன் மனைவி கிருபியையும் அஸ்வத்தாமாவையும் பிதாமகர் பீஷ்மர் அஸ்தினிபுரிக்கு அழைத்து வந்த  முறை குறித்துச் சொல்லுமிடம்

பூரிசிரவஸ்  யாமாவைச் சந்திக்குமிடங்கள் என கணக்கிலடங்காமல் செல்லும்.

 

நகைச்சுவயின் உச்சமென்று கீழ்வரும் வரிகளை தயங்காமல் குறிப்பிடுவேன்;

***பாரதத்தை முன்னோர் கைத்தவறுதலாக ஐம்பத்தாறுநாடுகளாக உடைப்பதற்கு முன்னால் கங்கையும் சிந்துவும் ஒழுகிய தொல்நிலத்தை முற்றாக ஆண்டுவந்தார் ஸ்வேதகி. அன்றெல்லாம் இங்கேபெரும்பாலான நிலங்களில் மானுடர் இல்லை. இருந்தவர்களுக்கு அரசர் என்றால் என்னவென்றும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவரால் மிகச்சிறப்பாக நாடாள முடிந்தது. அவர் அரசு விரிந்துகொண்டேஇருந்தது. அவர் எந்நிலத்தை நோக்கி அது தன் நாடு என கைசுட்டிச் சொல்கிறாரோ அது அவர் நாடாகியது. அச்செய்தியை அங்கே வாழ்ந்த மக்களுக்கு அறிவிப்பது பேரிடராக முடியும் என ஸ்வேதகி முன்னர்நிகழ்ந்தவற்றிலிருந்து அறிந்திருந்தார்***

உங்களிடம் இப்படி நாணிலாமல் வெண்முரசு குறித்து பேசிக் கொண்டிருப்பது எல்லை மீறலே என்றாலும் தாங்கள் இதை எளிதாகவே கையாளுவீர்கள் என்னும் மனத் தெளிவும் கொண்டே இருக்கிறேன்.

என்றேனும் ஒருநாள் உங்களை நேரில் சந்திக்கும் பேறு பெற்றால் நான் வெண்முரசில் பெற்றது என்ன என்பதை உங்களிடம் தெரிவிப்பேன்.

நன்றி மூத்தவரே
சிவா.