இனிய ஜெயம்
இரவெல்லாம் துயில் மறந்து, மொட்டை மாடியில் மெல்லிய சாரல் மழையில் தனித்துக் கிடந்தது விழித்திருந்தேன். கதிரவனின் முதல் ஒளியைக் கண்ட பின்பே, கர்ணனின் பிரிவு அளித்த கரிப்பே அற்ற துயர் தாள இயலா உணர்வில் இருந்தது வெளிவந்தேன்.
மொத்தப் போர்நிலமும் மற்றொரு காண்டவ வனமாக எரிந்துகொண்டிருக்க, இதே உணர்வில், நண்பனின் சிதையருகே நின்றெரியும் தனியனாக துரியன். மண்ணில் மானுடர் அடைய இயன்ற ஒரே பெரும் பேரான கர்ணனின் நட்பை அடைந்தவன். அதை இழந்த்தவன். மிச்சமே இன்றி அந்த நட்பின் இறுதித் துளி வரை அனுபவித்த முழுமையில் எழுந்த புன்னகை சூடி நிற்பவன்.
ஒன்றென வெந்து தணிந்து தனது சாம்பல் வழியே தனது மைந்தனை சத்ரியன் ஆக்கி விட்டனர் விடுவித்துவிட்டனர் கர்ண தம்பதியர். தனது ஆசிரியர் பொருட்டு, எடுத்த அம்பினை தழைத்த கர்ணன், அது கொண்டு உயிர் விடும் எல்லை வரை செல்கிறான். இதோ பரசுராமர் அவனுக்கென ஒரு யாகம் நிகழ்த்துகிறார். எந்த மாணவனுக்கு இப்பேறு அமையும்.?
வியாசனுக்கு சொல்லுண்டு கர்ணனின் மாண்பை எழுதிக் காட்டிவிட்டான். துரியன் வசம் என்ன உண்டு? தனியே நின்று எரிந்துகொண்டிருக்கிறான். கர்ணன் இல்லாத இக் களத்தில் தனியே நிற்கும் இன்றைய துரியனின் சித்திரம், வெண்முரசு சித்தரித்த தனிமைகளியே தலையாயது.
கடலூர் சீனு