அன்பின் ஆசான் ஜெ அவர்களுக்கு, வணக்கம்.
தீயானது எத்தனை ஆபத்தானது என்றாலும் அத்தனை சுவாரசியமானதும் கூட. எத்தனை அளப்பரிய ஆற்றலை பெற்றிருந்தும் சிறு பேழையுள் அமைந்துள்ள நம் மூளையைப்போல. அலைந்தும் அசைந்தும் ஆடுவதால்தான் அந்த ஆடல்வல்லானின் கரங்களிலும் சென்று அமைந்தது போலும்.
நிலையழிப்பவன் மட்டுமல்ல நிலையழிபவனும் தான். அறிவியலில் ஒரு கனசதுர மீட்டர் தீயின் எடை சுமாராக 300கிராம் என பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறேன். ஆனால் அம்முதற் பெருந் தோற்றமாகிய அனல்பெருந்தூணின் எடையை யாரறிவார். சுயம்பறிவாகிய அதுவே அறியுமோ என்னவோ.. தீ.. ஆம் அவன் பெருந் தீனிக்காரன்தான், ஆனாலும் வளியையே மிகுதியாய் உண்டெழுவதால் அத்தனை எடைகுறைவு போலும்.
தங்கள் வெண்முரசை தினமோதும் மாணவன் நான். தங்கள் படைப்பை அணுகி அறிவதால் தங்களையும் நன்கறிவேன் என்ற கர்வம் எனக்குண்டு. எப்படியும் படுகளத்தை ஒட்டிய தலைப்பே வரக்கூடுமென ஊகித்தேன். என் கர்வம் பங்கமடைந்தாலும் இன்னும் தருக்கிச்சொல்வேன் எனது சகாக்களிடம்... சிலர் வெண்முரசு அவ்வளவுதான் என்றார்கள். பலர் வழமைக்கு மாறாக அடுத்த நாவல் சில மாதங்களுக்கு தள்ளிப்போகும் என்றார்கள்... ஆனால் நீங்கள் எத்தகைய சூழலிலும் தன்னறத்தை கைவிடாதவர் என... ஜூலை 1க்கான எனது தவம் தொடங்கியது இன்றுமுதல். இதற்கிடையில் "சொல்வளர் காடு" மூன்றாவது முறை படித்துமுடிக்க எண்ணி எடுத்துவைத்துள்ளேன் என் தன்னறத்தை பேண இந்த 12 நாளில். தாங்கள் இவ்வளவு விரைவில் மீண்டது மிக்க அகமகிழவளிக்கிறது. மீண்டும் வணக்கங்கள்..
சு.நரேந்திரன்