Friday, June 21, 2019

வெண்முரசு வாசிப்புமூத்தவருக்கு,

சில மாதங்களுக்கு முன் தற்செயலாக வெண்முரசை வாசிக்க நேர்ந்தது;  தங்களது புனைவுகளை வாசித்திருந்தாலும் வெண்முரசை வாசித்தறிந்திருக்கவில்லை. தற்செயல் தான். நான் வாசிக்க நேர்ந்த பகுதி அங்கரின் குருஷேத்ர வருகை. அவ்வளவுதான், தீப்பற்றிக்கொண்டுவிட்டது. முதலில் பின்னிருந்து முன்னால் சென்றேன்; பின்னர் முதலிலிருந்து மீண்டும். பின்னர் மீண்டும் மீண்டும் என முடிவிலாமல் சென்று கொண்டே இருக்கிறது வாசிப்பு. நடுவில் அன்றைய பகுதிக்கு இரவு காத்திருப்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாத உணர்வு. உங்களின் அகத்தை வெண்முரசின் வழி பின் தொடர்கிறேனா எனும் தன் நாற்களமாடலே ஒவ்வொரு புதிய அத்தியாயமும் எனக்களிக்கும் பேருவகைக்குக் காரணமென்றறிகிறேன். இருமுறை (ஆம் இருமுறை!!) அதில் உங்களை அறிந்துவிட்டேன் என்பதே வெண்முரசு வாசகனின் வெற்றி.

இன்றைய தேதியில்; உங்களுக்குப் பின் வெண்முரசை முறைமைப்படி நினைவில் வைத்திருக்கும் ஆள் நான் எனும் தருக்கு எனக்குண்டு. இதில் திளைக்கும் ஒவ்வொருவருக்கும் வர வேண்டிய உணர்வல்லவா அது  :) 

ஆம் அங்கர் களம்பட்டார். இருட்கனி வீழ்ந்தது. அவரின் இன்மை என்னை சோர்விலாழ்த்துகிறது. உங்களுக்கும் அவரே முதன்மை ஆதர்சம் என்பதை வெண்முரசைத் தொடரும் எவரும் அறிய இயலும். பின்னர் பூரிசிரவசும் தங்களால் சிறப்புற வடிவமைக்கப் பட்டிருந்தார். மலைமகனுக்கு, வியாசராலும் அளிக்கப்படாத மகுடமாகவே அதிருந்தது. கதாபாத்திரங்களுள் இப்பொழுது செல்ல தயங்குகிறேன்; அது ஒரு கடல். விரிவாகவே பேச வேண்டும். 

சில மாதங்களாகவே மனம் அங்கரே அழகரே என்று அரற்றிக்கொண்டு தானிருக்கிறது. தங்களால். கிட்டத்தட்ட அங்கரையும் மஹாபாரதத்தையும் மறு உருவாக்கமே செய்துள்ளீர்கள். துச்சாதனர் மீது பெரு இரக்கம் கொள்ள இயலுமென்பதே ஒரு சான்று. வெய்யோனில் வரும், கௌரவர்களின் நகைச்சுவைப் பகுதி இன்னுமொரு உச்சம். அவர்களின் உண்டாட்டில் வரும் உரையாடல்கள் வயிற்றைப் பதம் பார்க்கும் ரகம். சான்றுக்கு ஒன்று; கௌரவ இளவல் சித்ரகுண்டலர், பிண்டகர் எனும் அசுரகுல இளவரசியை சிறையெடுத்து வரச் செல்ல அவள் அவரை சிறை எடுத்துச் செல்வது. பின்னர் அவளைத் திருப்பி அனுப்ப நூல்களில் ஏதுமிடமுண்டா என ஆராய்வதென; "வெய்யோன்" வெண்முரசின் உச்சகட்ட அக வெளிப்பாடு. அங்கரை விரும்பும் ஆசிரியனல்லவா தாங்கள்.

ஆம்; இருட்கனி வீழ்ந்தது. அங்கரில்லாத வெண்முரசு. மீண்டும் அங்கரை இளமையிலிருந்து படிக்க தடையேதும் இல்லையல்லவா? என்னயே மறந்து எங்கேனும் அங்கர் எனும் வார்த்தையை தவற விட்டிருக்கும் இடம் வெண்முரசில் மிச்சமிருக்கக் கூடும். அதைத் தேடி மீண்டுமொருமுறை செல்கிறேன். இனி ஏனையோர் அங்கரை நினைவுரும் தருணங்களல்லவா அவரளித்த கொடைகளின் எச்சங்கள். காத்திருக்கிறேன். காத்திருப்போம். ஜூலை வரை என்பது நீண்ட இடைவேளை தான். தங்களுக்கு இந்த இடைவெளி தேவையாய் இருக்கக்கூடும்.

வெண்முரசினால் நான் பெற்றதென்ன என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்தவண்ணமே இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் துணை வரும் உணர்வுகளைப் பெற்றிருக்கிறேன்.

வணக்கம்,
சிவா.