Sunday, June 23, 2019

அனலோன்


ஜெ,

நான் இப்போதுதான் பன்னிரு படைக்களம் படித்துக்கொண்டிருக்கிறேன் அதை நிறுத்தி நிறுத்தித்தான் என்னால் வாசிக்க முடிகிறது. அதன் உள்ளர்த்தங்கள் பல பிடிகிடைக்கவில்லை. ஆனால் கூடவே கார்கடலில் தொடங்கி இப்போது வந்துகொண்டிருக்கும் வெண்முரசையும் வாசிக்கிறேன். அது பழைய அத்தியாயங்களில் பல புதிய அர்த்தங்களை எனக்கு அளிக்கிறது

உதாரணமாக பன்னிரு படைக்களம் அமைந்த களத்தின்மேல் பாலாழி கடையும் ஓவியம் உள்ளது. அதை இப்படி வெண்முரசு வர்ணிக்கிறது.


வாசுகியின் செவ்விழிகள் எரிந்த பெருந்தலை முக்கண்ணன் அருகே வாய்திறந்திருந்தது.  அவனருகே சற்று அஞ்சியவனாக அவன் துணை நின்றிருந்தான். வாசுகியின் உடலின் முதல்வளைவை இந்திரன் பற்றியிருந்தான். முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான்.  உச்சகட்ட விசையுடன் உடல் திமிறிய தேவர்கள் பெரும்பரப்பென அவ்வரைவட்டத்தை நிறைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே கருவண்ணக் கோல நெளிவுபோல வாசுகியின் உடல் புகுந்து வளைந்து வந்தது. மறுபக்கம் கருநீலநிற உடல் கொண்ட அசுரர்கள் வளைந்து தங்களுக்குள் புகுந்து கரந்து எழுந்து நிறைந்த வாசுகியின் வாலை பற்றியிருந்தனர். குவைக்கூரை முகடின் மையக்குமிழி மேரு மலையெனத் தெரிந்தது.

இந்த காட்சியை அப்படியே குருஷேத்திரத்துடன் நான் ஒப்பிட்டுக்கொண்டேன். குருஷேத்திரத்தைத்தான் ஸிம்பாலிக்காக அந்த ஓவியம் காட்டுகிறது. முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான் என்ற வரி எனக்கு 17 ஆம் நாள் போரில் கடைசி அழிவை நெருப்பு நிகழ்த்துவதைத்தான் குறிப்பிடுவது போல் இருந்தது

இதையெல்லாம் கணக்கிட்டு நீங்கள் எழுதமுடியாது. ஆனால் இதெல்லாம் உங்கள் மனதுக்குள் இருந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்

ஜெயராஜ்