Friday, June 7, 2019

கர்ணனை சல்யர் கைவிட்டாரா?



இனிய ஜெயம்

அருணாசலம் மகராஜன் அவர்களின் எதிர்வினை கண்டேன். நான் சுட்டியது சல்யர் எனும் நாணயத்தின் ஒரு பக்கம். மகராஜன் சுட்டுவது அதே நாணயத்தின் மறு பக்கம்.ஒரே ஒரு பக்கம் கொண்ட நாணயம் என்ற ஒன்று உண்டா என்ன?

//சல்யர் வாழ்த்தாமல் செல்வதை அவனை அவர் கைவிட்டார் எனக் கூறலாமா? அப்படியென்றால் இதுவரையிலும் அவன் உயிருடன் இருக்க ஒவ்வொரு வாசலாக தேடித் தேடி முட்டி அலைந்ததெல்லாம் வீண் என்றும், வெற்று ஆணவம் என்றும் ஆகி விடாதா?//

  இந்த வினாவுக்கு வெண் முரசு பல முறை விடை தந்திருக்கிறது. சல்யரின் அந்த நிலையும் உண்மையே.கர்ணனை கைவிட்டு விலகும் இந்த நிலையும் உண்மையே.

மிக எளிய கேள்வி எனக்குள் கேட்டுக் கொள்கிறேன். விரும்பித் தலை கொடுக்க அம்பு நோக்கி என் மைந்தன் செல்கிறான். நான் சொன்ன எதையும் அவன் செவி கொள்ள வில்லை .நான் என்ன செய்வேன்?  எனது இறுதி முயற்சியாக என் மைந்தன் மார்பை துளைக்க வரும் அம்புக்கு என்னை கேடயமாக்கி நிற்ப்பேன்.

கர்ணனின் அம்பு பட்டு பார்த்தன் வீழ்கிறான்.அடுத்த அம்பு பாரத்தை நோக்கி நானேருகிறது. நீலன் தன்னையே கேடயமாக்கி அதன் முன் நிற்கிறான். நண்பன் மட்டும்தானா அப்படி இருப்பன்?
எந்த தந்தையும் அதைத்தான் செய்வான். திருதாவோ, ப்ருகத்காயாரோ எவர் எனினும்.

இங்கே சல்யர் என்ன சொல்கிறார் ''உன்னைக் கொலைக் களத்துக்கு அழைத்துச் சென்றவன் என்ற பழி எனக்கு வேண்டாம்'' .இந்த நிலை எதைக் காட்டுகிறது. ப்ருகத்காயர் ஆயுளுக்கும் தான் என்ன வாழ்வை வாழ்ந்தாரோ.. அந்த வாழ்வை ஒரு அரை நாள் வாழ்ந்து விட்டு, தந்தை வாழ்வை முடித்துக் கொண்டு மீண்டும் சல்யராக சல்யனின் வாழ்க்கைக்குள் மீள்கிறார். தந்தையாக தேரோட்டினார். சல்யராக இறங்கிச் செல்கிறார்.

முன்பு ஒரு போர் சூழல் தன்னுடன் இணைந்து எதிரிகளுடன் சமர் புரிந்த புரவி எதிரியிகளின் எல்லைக்குள் காயம்பட்டு சிக்கிக் கொள்கிறது. தனது இலக்கு வென்றபின்னும் கர்ணன் என்ன செய்கிறான்? எல்லை கடந்து சென்று புரவியை மீட்டு மீள்கிறான்.  அவன் கர்ணன்.

இங்கே ஒரு போர் சூழல். மைந்தனை போர் சூழலில் நிறுத்தி விட்டு, பழி வேண்டாம் என இவர் விலகிச் செல்கிறார்.இவர் சல்யர்.

இதற்குப் பெயர்தான் கைவிடுவது. அதை நாவல் எங்கும் மழுப்பவே இல்லை.தெளிவாகவே சித்தரிக்கிறது.

கடலூர் சீனு