ஜெ
வெண்முரசில் சில இடங்கள் முன்னரே உணர்த்தப்பட்டு மிகவும் பிந்தித்தான் முழுவடிவில் வெளிவரும். இந்த வரிகளை வாசிக்கையில் இதன் கவிதை மட்டும்தான் எனக்குப் பிடிகிடைத்தது
ஓங்கி தாழ்த்தப்படும் வாளில் எஞ்சுவதென்ன? பெரும்பாறை உருண்டு வந்து மூடிய விதையில் காத்திருப்பதென்ன? முதிர்ந்த நாகம் தன் நஞ்சை அருமணியாக்கும் விந்தைதான் என்ன? இக்களத்தில் நிகழ்ந்தவை கோடி. நிகழக் காத்திருந்தவை கோடி கோடி. சூதரே, நிகழாது எஞ்சியவை முடிவிலாக் கோடி. எங்குள்ளன அவை? எவ்வண்ணம் எழுந்து வரும் அவை? புவிமேல் முளைக்காத புல்விதைகள் கோடிகளின்கோடி அல்லவா? அவற்றை ஆளும் தெய்வங்கள் எதற்கு பணிக்கப்பட்டிருக்கின்றன?
ஆனால் அதன்பின் வரும் அத்தியாயங்களில் வருவது வேறு. அஸ்வத்தாமன் சிகண்டி இருவருமே சிலரை எஞ்சவிடுகிறார்கள். அந்த நஞ்சு எழுந்து அவர்களை அழிக்கிறது. அவர்கள் அந்த நஞ்சை ஏன் விட்டுவைத்தார்கள்? அதுதான் ஊழா? முளைக்காத புல்விதைகளின் கோடிகோடி தெய்வங்கள் விதியின் விளையாட்டில் வகிக்கும் இடம்தான் என்ன?
ராமச்சந்திரன்