அன்பின் ஆசிரியருக்கு,
வெண்முரசில் சில சந்தேகங்கள்:
1. மூத்தவர் என்றழைப்பது வயதால் தரப்படுவதென்றே புரிந்து கொண்டிருக்கிறேன், ஆனால் அங்கரின் புதல்வன் விருஷஷேனரை :பிரதிவிந்தியனும், யௌதேயனும் மட்டுமில்லாமல் உப கௌரவன் லக்ஷ்மணனும் அவரை மூத்தவரென்றே அழைக்கிறாரே (கிருஷ்ணையின் மண நிகழ்வில்) ஏன்? கர்ணனின் துணைவிகள் கருவுற்றிருக்கும் போதே இளம் பாலகன் அல்லவா லக்ஷ்மணன்.
2. அஸ்வத்தாமர் ஏன் மணம் புரியவில்லை? பதினெட்டாம் நாள் போருக்குப் பின் இரவில் அவர் நிகழ்த்தப் போகும் நெறி மீறல்களுக்கு முன் அவரைப் பற்றிய தனி அத்தியாயங்களை நீங்கள் பகிரக்கூடும், அதில் அதற்கான விடையும் இருக்கலாம் என்றாலும், துரோணர் அவர் மேல் கொண்ட அன்பை அறிந்திருந்தோம். தன் பெயர் மைந்தரை, தன் குலமகளையும் காண அவர் விழைந்திருப்பார் அல்லவா? அதை அரிய ஆவல்.
3. மஹாபாரதத்தின் பிற மூலங்களில் எஞ்சியிருக்கும் கர்ணனின் புதல்வனாக விருஷகேதுவைச் சொல்கிறார்கள், ஆனால் வெண்முரசில் பிரசேனன் இருக்கிறார். ஆனால் வெண்முரசையே முதன்மைப் பிரதியாக நான் கொள்வதால் இது சிக்கலாகத் தோன்றவில்லை.
வெண்முரசை விஷுவலாகவும் அவ்வப்பொழுது எனக்குள் நிகழ்த்திக் கொள்வதுண்டு.
குந்தி தேவி - சோனியா காந்தி
இளைய யாதவர் - மாதவன் (அந்த புன்னகை ததும்பும் முகம்)
பிதாமகர் (வயதான) - சத்யராஜ்
இவ்வாறாக. விரைவில் தீயின் எடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
நன்றி
சிவா
மூத்தவர்
என வயதின் அடிப்படையிலேயே அழைக்கப்படுகிறது. ஆனால் குலமுறைப்படி மூத்தவரின்
மைந்தரும் மூத்தவர் என அழைக்கப்படுவதுண்டு
அஸ்வத்தாமனின்
மனைவி பற்றி மகாபாரதம் எதையும் சொல்லவில்லை. அவன் பிரம்மசாரி என்றும் சொல்லவில்லை.
அவனுக்கு மனைவியும் மைந்தரும் இருந்தனர் என்பது நாட்டார் மகாபாரதக் கதை
மகாபாரத
வடிவங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ளதே இங்கே பின்பற்றப்படுகிறது. சிலசமயம் இன்னொரு
வடிவில் உள்ளது வேறு ஒருவகையில் சொல்லப்பட்டிருக்கும்
ஜெ