Monday, June 24, 2019

ஓசைகள்



ஜெ,


வெண்முரசில் வரும் வர்ணனைகளை பெரும்பாலும் அவசரமாக வாசித்துக்கடந்துசெல்வதுதான் என் வழக்கம். ஆனால் கொஞ்சநாள் கழித்து அவ்வப்போது எடுத்து வாசித்துப் பார்ப்பேன். பலவரிகள் என்னை கொந்தளிக்க வைத்துள்ளன. வெறும் வர்ணனைகள் அவை. ஆனால் அவற்றை நான் பல கோணங்களில் புரிந்துகொள்வேன்

வெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடிந்தபின்னரும் ராண்டமாக பழைய நாவல்களின் அத்தியாயங்களை வாசிப்பது என் வழக்கம். அவ்வாறு நான் வாசித்த பகுதி இது

“ஓசைகளில் உள்ளது பருப்பொருட்களின் ஆன்மாவாக அமைந்துள்ள தெய்வம் என்பது யவனச்சிற்பிகளின் எண்ணம். ஆகவே ஓசைகளை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அங்கு பேசும் ஒலி எதுவும் இடைநாழிக்கு வராது. அவை மேலே குவைமாடத்தில் முட்டி அங்குள்ள சிறு துளைகள் வழியாக வெளியே அனுப்பப்பட்டுவிடும். இந்த மாளிகைகளில் குவைமாடங்களுக்கு விளக்கிடும்பொருட்டு ஏறுபவர்கள் அங்கு பெருமுரசின் ஓசை போல் முழக்கம் நிறைந்திருப்பதை கேட்பார்கள். ஆனால் அவைக்கூடத்தில் ஒவ்வொருவரும் பிறிதொருவரிடம் பேசுவது தெளிவாக கேட்கும்” 


இதிலுள்ள அர்த்தம் அன்று ஒன்று . இன்றைக்கு இன்னொன்று. அன்று அந்த மண்டபம் எவ்வளவு ஆன்மா இல்லாதது என்பதையே நான் புரிந்துகொண்டேன். ஆன்மாவை உறிஞ்சி வெளியேதள்ளும் மண்டபம் அது. இன்றைக்கு குருசேத்திரத்தில் எல்லா பொருட்களும் ஓசையை இழந்துவிட்டிருக்கின்றன. திரும்பத்திரும்ப ஓசையே இல்லை என்ற வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது


பாஸ்கர்