அன்புள்ள ஜெ
மழைப்பாடலில் குந்திதேவி பெண்புலி
குட்டிகளுக்கு வேட்டையைச் சொல்லிக்கொடுப்பதுபோல அதிகாரத்தைச் சொல்லிக்கொடுக்கிறாள்.
“மக்கள் என்றால் யார்? இங்குள்ள மானுடத்திரள். எளிய உலகியல் ஆசைகளாலும் அச்சங்களாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள். அவர்களுக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். இங்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை நீதிகளையும் நாம் அடித்து உடைத்து ஆட்சியைக் கைப்பற்றி ஐந்துவருடம் அவர்கள் மகிழும் ஆட்சியை அளித்தால் நம்மை நீதிமான்கள் என்பார்கள். கணவன் திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனை பெண்களை நீ அறிந்திருக்கிறாய்? அதைப்போலத்தான் மக்களும். மன்னர்களை படைகொண்டுசென்று பக்கத்து நாடுகளை சூறையாடச்செய்யும் பெரும் விசை எது? மக்களின் ஆசைதான். அப்படி கொன்று குவித்து சூறையாடிக் கொண்டுவந்து மக்களுக்குக் கொடுப்பவனையே மக்கள் மாமன்னன் என்று புகழ்கிறார்கள் என்றுதான் நீ கற்ற நூல்களும் சொல்லியிருக்கும்.”
என்று மக்களை அவள் மிகச்சரியாகவே
வரையறை செய்து சொல்கிறாள். அதை வாசிக்கும்போது திகைப்பாக இருந்தது. உண்மைதானே, ஒரு
சொல்கூட பொய்யில்லையே என்று நினைத்தேன். இன்றைக்கு உலகையே ஊழலால் சூறையாடிவிட்டு ஓட்டுக்கு
இரண்டாயிரம் பணம் கொடுத்தால் மக்கள் தர்மவான் என்று கொண்டாடுகிறார்கள்.
என்று வந்த வரிகளை மிகக்கசப்பானவை
என்றாலும் லௌகீக உண்மைகள் என்றுதான் நினைத்துக்கொண்டேன்
எம்.நாராயணன்