Tuesday, August 18, 2020

சந்தனு

 


இனிய ஜெயம் 


மீண்டும் உரையாடலுக்கு ஒரு ரவிவர்மா ஓவியம். சந்தனுவை நீங்கிச்செல்லும் கங்காதேவி. 
ஷண்முகவேல்ன் சந்தனு வுக்கும் வர்மாவின் சந்தனுவுக்கும் உள்ள வேறுபாடு. 

மேலை மரபில் செவ்வியல் ஓவியங்களை ரசிக்க அடிப்படை பயிற்சியில் எவ்எவற்றில் கவனம் குவிக்க வேண்டும் என்ற வரிசை உண்டு.

1. அடிப்படை கோடுகள். 

2. கோடுகளின் வழியே வடிவங்களுக்கும் உருவங்களுக்கும். 

3. வடிவங்களும் உருவங்களும் சட்டகத்தில் எங்கெங்கே அமைகின்றன எனும் பிளேஸ்மென்ட்.

4. அடிப்படை வண்ணம் மற்றும் வண்ணங்களின் பேதம்.

5.ஒளியையும் நிழலையும் கொண்டு களத்தில் அண்மை சேய்மை நிலையை, பொருளில் உருவத்தில் வடிவப் பரிமாண நிலையை காட்டும் பீல்ட் ஆப் டெப்த். 

6. கல்லுக்கும், மலருக்கும், மரத்துக்கும், குழந்தையின் கன்னத்தும் இடையே உள்ள சரும வேறுபாடு நிலையில் அதில் ஒளி இருள் படுவது போன்ற  பேதம் அதன் நுண்மைகளை கையாளும் டெக்ஸ்சர்.

7. ஒத்திசைவு மற்றும் பாவம் இணைந்த காம்போசிஷன். 

பார்வையாளன்   தனது ஓவியக் கலா அனுபவத்தை இந்த அலகுகளின் கூட்டிணைவின் வழியேதான் எய்துகிறான். 

இந்த அடிப்படை சட்டகம் வழியே வர்மாவின் ஓவியத்தை காண்போம். மேற்சொன்ன அனைத்தும் தொழில்நுட்பமாக அவரது ஓவியத்தில் இருப்பினும் அது எங்கே கலையாகாமல் போகிறது? 

அந்த ஓவியம் எதை பேசுகிறதோ அந்த மையத்தை பின்தள்ளி வெறும் எக்ஸிபிஷனிஷம் வகையில் நின்றுவிடுகிறது வர்மாவின் ஓவியம். சந்தனுவின் உடைகள், உடல் தெரியும் கங்காதேவியின் ஸீத்ரூ சேலை. அவளது மற்றும் சந்தனுவின் பாவனை எல்லாமே போலித்தனமான உணர்வின் வெளிப்பாடாக மட்டுமே நிரிக்கிறது.


மொத்தத்தில் அந்த ஓவியத்தில் இருந்து பார்வையாளன் ஒரு அனுபவத்தை அடைவதற்கு பதிலாக ஒரு செய்தியை மட்டுமே அடைகிறான். சந்தனுவை பிரிந்து செல்லும் கங்காதேவி இந்த தலைப்பு சொல்லும் சேதிக்கு மேலாக கொஞ்சம் கிளுகிளுப்பு தவிர எதையும் பார்வையாளனுக்கு தராது அந்த ஓவியம். 

மாறாக ஷண்முகவேலின் இந்த ஓவியம், இதற்கு எந்த தலைப்பும் இடாமல், வெண்முரசில் இருந்து தனியே எடுத்து பார்த்தாலும் உணர்வு பூர்வம் எனும் தனித்துவம் கொண்டது. அடிவயிற்றில் இருந்து எழும் கேவல். தாள இயலா துயரில் தளர்ந்து சரியும் உடல். அரசன் யாசகனாக மண்டி இட்டு நிற்கும் உடல்மொழி .    பிரிவாற்றாமை எனும் உணர்வை துல்லியமாக பார்வையாளருக்கு கடத்தும் ஓவியம்.

முதற்கனலின் முதல் அத்தியாயத்தின் ஆஸ்திகன் துவங்கி, முதலாவிண் இறுதியில் தர்மர் வரை இந்தப் பெரும் புனைவின் நெடுக, யாரோ யாரையோ உதறிச் செல்லும் சித்திரம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அந்தத் தொடர் பிரிவாற்றாமை சித்தரிப்பின் முதல் ஓவியம். சூரிய ஒளி குறிப்பிட்ட சாய்வில் பொழியும் கங்கைக் கரை. ஒளி விழும் இலைகளின் பச்சை. நிழல் விழும் இலைகளின் கருமை. ஒளி விழுந்து துலங்கும் சந்தனுவின் உடல்மொழி. துயர நதியே போலும் கங்கை. விலகி விலகி விலகி நிழலாக தொலைவில் போகும் படகில் துடுப்பு வீசும் கங்காதேவியின் உடல்மொழி. துயரத்தின் தூரிகைத் தொடுகை

கடலூர் சீனு