அன்புள்ள ஜெ
மழைப்பாடலை திரும்ப
ஒருதடவை படிப்பது வெண்முரசை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள மிக உதவியானது என்ற எண்ணம்
ஏற்பட்டது. அதுதான் அடித்தளம். மழைப்பாடலை வாசிக்கும்போது ஆரம்பத்தில் பல பக்கங்களுக்கு
பெண்களின் பிரச்சினைகளே பேசப்பட்டதுபோலவும் பெண்களுக்கு இடையே உள்ள சிக்கல்களை பேசிக்கொண்டே
இருப்பதாகவும் தோன்றியது. மகாபாரத களத்தில் அம்பிகை அம்பாலிகை சத்யவதி சண்டைக்கு இந்த
அளவுக்கு இடமுண்டா என்ற எண்ணம் வந்தது. ஆனால் இப்போது வாசிக்கையில் மொத்த மகபாரதத்துக்கும்
அடிப்படையாக அமையும் பூசல்களும் காழ்ப்புகளும் அப்போதே உருவாகிவிட்டன என்று தெரிகிறது.
அதெல்லாம் எங்கே
தொடங்குகிறது என்று பார்த்தேன். அம்பாலிகையும் அம்பிகையும் காணும் கனவிலிருந்தே தொடங்கிவிட்டன
அவை. அவற்றை அவர்கள் தங்கள் பிள்ளைகளில் ஊட்டி வளர்க்கிறார்கள். அவை அவர்களின் மைந்தர்களில்
வளர்கின்றன. மொத்தப்போருமே அங்கே நுண்ணியவடிவில் உருவாகிவிடுகிறது. அதுதான் பிறகு குருசேத்திரம்
வரை வளர்கிறது
டி.பாலகணேஷ்