வெண்முரசு போர் நாவல்கள் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ந்து வாசித்து வருகிறேன். போன மாதம் இறுதி அத்தியாயத்தை வாசித்துவிட்டு எழுதவேண்டும் என்று நினைத்தாலும், எழுத அமரும்போதெல்லாம் அதன் பேருருவின் திகைப்பில் ஆழ்ந்துவிடுகிறேன், எழுதமுடியவில்லை. இன்று உங்களுக்கு கடிதம் எழுதத்தொடங்கியபோதுதான் எத்தனை காலம் தாண்டிவிட்டதென்று உணர்ந்தேன்.
வாசிக்கும்போது தெரியவில்லை, இப்போது ஓர் அடி பின்னால் எடுத்துவைத்து பார்க்கும்போது தெரிவதை உள்வாங்கித் தொகுக்கவே காலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. துண்டுக்காட்சிகளாக வாசித்தவையெல்லாம் அவ்வப்போது வந்து வந்து அறைகின்றன. எத்தனை தேடல்கள் வேட்கைகள் பரவசங்கள் ஏமாற்றங்கள் கோபதாபங்கள். எல்லாம் எங்கு சென்று முடிகின்றன. உண்மையில் யாருக்குத்தான் இதில் ஜயம். இதை நினைக்கையில் ஏதேதோ உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன். பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரர், குந்தி, தருமன், அர்ஜுணன் என்று முதலிலிருந்து பிந்தொடர்ந்துவரும் பாத்திரங்களும் சரி, சின்ன வட்டத்துக்குள் பெரிய கனவுகள் கண்டு மறையும் சுஜயன் கடோத்கசன் உத்தரை கிருஷ்ணை போன்ற பாத்திரங்களும் சரி, எண்ண எண்ண திகைப்பையே உருவாக்குகின்றன. ஆனால் அஸ்தினாபுரி சபையில் வயோதிகர்களான பாண்டர்வர்கள் முன்னிலையில் நோயனான சீக்குப்பிடித்த பிள்ளை பிரீட்சித், தனியாளாக, அத்தனை பெரிய வம்சத்தின் ஒற்றைவாரிசாக, அரசப்பதவியை பெறும் காட்சியை வாசித்தபோது எல்லா உணர்வும் கரைந்து வெட்டவெளி வெறுமையே இருந்தது. அதன் கோணத்தில் எல்லாமே பொருளற்றதாகத் தோன்றியது. அத்தனை நகர்வுகளை, பிறவிகள்தோரும் தோன்றும் பிரம்மாண்ட வலைப்பின்னல்களை, அதன் உணர்வாழங்களை, அவற்றின் அடிப்படைச் சாரமின்மையை வாழச்செய்திருக்கிறீர்கள். அந்த அகவயமான வாசிப்பனுபவத்தை வார்த்தையாக்கி கடத்தல் எளிதல்ல. அதைத்தாண்டாமல் நாவல் கட்டமைப்பும் இதர புறவயமான விஷயங்களை பற்றி கருத்துகளை உருவாக்கிக்கொள்வது, சொற்களை கொட்டி நிறைப்பது, உடனே விமர்சனம் எழுதுவது எல்லாம் குறுகலையே உருவாக்குமென்று நினைக்கிறேன். அங்கே இப்போதைக்கு என் மனம் போகவில்லை.
நம்மைக் கவர்ந்த ஒரு ஓவியத்துக்கு முன்னால் ஒரு மணி நேரம் நிற்கிறோம். ஒரு பாடல் உள்ளே இழுத்துக்கொண்டால் வெறிகொண்டு ஐநூறு முறை கேட்கிறோம். இதுவோ இத்தனைப்பேரிய ஆழமான ஒன்று. ஒரு வாசகியாக இந்த ஆக்கத்தின் முன்பு வாய்ப்பிளந்து நிற்கிறேன், அவ்வளவுதான். இன்னும் சிலகாலம் இப்படியேத்தான் நிற்க முடியும். இலக்கியம் அறிவம்சம் கொண்ட கலை வடிவம் தான். ஆனால் அதன் ஆன்மா வாழ்க்கையுணர்வை உருவாக்குவதில் உள்ளது. ஆகவே கருத்துகளாக அல்லாமல் வெறும் தூய வாழ்வுணர்வாக முதலில் வெண்முரசை உள்வாங்குவதே முக்கியமாகப் படுகிறது. சென்று சென்று சிறுகச்சிறுக படிப்பது, எண்ணிபபர்ப்பது, ஓவியங்களை மட்டும் பார்தப்பது, கதாபாத்திரங்கள் வழியாக படிப்பது, துணைக்கதைகளை மட்டும் படிப்பது, இப்படி நின்று நின்று பார்த்து பார்த்து தொகுத்துக்கொள்ளாமல் என்ன சொல்லிவிட முடியும். இந்த அதிசயத் திளைப்பில் இன்னும் சில காலம் நிற்பதில் எந்தக் குறையும் இல்லை, அதுவே ஆனந்தம்.
கண்முன்னே இத்தனைப்பெரிய ஒன்று நடந்து முடிந்திருக்கிறது, அதை அருகே இருந்து கண்டிருக்கிறேன். சில வாசகர்கள் உங்களுடன் பயணித்தக் காலத்தில் நீங்கள் வெண்முரசு எழுதியதன் நினைவுகளை பகிர்ந்திருந்தார்கள். உங்கள் தோழர்கள் அனைவருக்கும் இப்படிப் பல நினைவுகள் இருக்கக்கூடும், ஒரு பெரிய கோயிலில் ஒரு சிற்பத்தின் ஒரு கால் விரல் செதுக்கப்பட்டதை நேரில் கண்ட உணர்வு அது. எனக்கு நினைவுள்ளது உங்கள் ஐரோப்பியப் பயணத்தின் போது செந்நா வேங்கை முடிவுக்கு வந்தது. போர் தொடங்கியிருந்தது. அந்தப் பயணத்தில் அடுத்த நாவலான திசைத்தேர் வெள்ளத்தின் பெயரை பெற்றீர்கள். பண்டைய சீன போர்முறைகளைபற்றி, தொலைநோக்கிகளை பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள். அவை நாவல்களுக்குள் வருகையில் அந்த உருமாற்றத்தைக் கண்டது பெரிய பரவசம். இப்படி எத்தனைக் கணங்கள்.
ஆனால் ஒன்றை கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். வெண்முரசின் இறுதி அத்தியாயம் மட்டும் ஒரு மாஸ்டர்பீஸ். ஒரு நீண்ட இசைநிகழ்வின் இறுதியில் வரும் ‘கோடா’வைப்போல் இருந்தது. நாவல் வாழ்வின் எண்ணற்ற ஏற்ற மடிப்புகளின் இறுதியில் தோன்றிய வெறுமைக்கு அர்த்தமளிப்பதாக இருந்தது. எல்லா சுவைகளையும் சேர்த்து கொதிக்கும் குழம்பை இறக்குவதற்கு முன்பு சுவைகளை சமனாக்க ஒரு சிட்டிகை சீனி போடுவார்களே, அதுபோல இருந்தது. நாம் பார்க்கும் கோணம் மாறும்போது எல்லாமே புது வெளிச்சத்தில் தெரிவது போல குழந்தை கண்ணனும் பிள்ளைத்தமிழும் இருப்புக்கொண்ட உலகத்தில், எல்லாமே புத்தொளியில் தெரியத்தொடங்குகிறது. விஷ்ணுபுரத்தில் ஒரு செவ்வியல் சமன் இருந்தது. இறுதியில் விஷ்ணுபுரத்தை மூடும் பிரளயம், அனைத்தும் மீண்டும் தொடங்கும் மறுயுகம் என்று எல்லாம் கழிந்து சீரிய தட்டுக்கள் சரியாக சமனாகும் தன்மை இருந்தது. வெண்முரசின் சமனில் கூட்டாக ஒன்று உள்ளது, அது அந்த மொத்தக் கூட்டல்கழித்தலையும் உருவாக்கி விளையாடிக் கண்டு மகிழும் குழந்தை. பஷீரின் ‘இன்னும் பெரிய ஒன்று’ போல. இது எல்லாமான ஒன்று. இனிமையானது. அழகானது. மொத்த வாழ்க்கையும் ஓர் அழகான நீர்க்குமிழிப்போல் ‘டொப்’பென்று வெடித்து நிறமாகி நீராகி மறையும் மாயத்தில் நிறையச்செய்கிறது. அது கொண்டாட்டம்தான்.
இத்தனைப்பெரிய ஒன்றை நிகழ்த்தும் விசையை இவ்வாழ்வில் கண்கூடாகக் காணமுடியும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்கமாட்டேன். அதை வழிநடத்திய உங்களுக்கு என் பேரன்பு. வினயம். வணக்கங்கள். இன்னும் பற்பல ஆண்டுகளுக்கு தலைமுறைகளுக்கு இவ்வொளி பாயும்.
அன்புடன்
சுசித்ரா