Monday, August 17, 2020

ஜடரை

 

அன்புள்ள ஜெ

நான் வெண்முரசை வாசிக்கத் தொடங்கி ஒருமாதமே ஆகிறது.  வெறிகொண்டு வெண்முரசை வாசித்து பிரயாகையை வந்தடைந்துவிட்டேன். இன்றுதான் ஜடரைதேவி வரும் இடத்தை வாசித்தேன்

இறக்கும் ஓநாயின் கண்களில் எவருமே மீறமுடியாத ஒரு தெய்வ ஆணை உண்டு. அதை நோக்கி ஈர்க்கப்பட்டு இறுதிக்கடியை வாங்கி இறந்தவர்கள் பலர். அதன் வயிற்றில் வாழும் அந்த தெய்வம் பசிகொள்ளும்போது கண்களில் வந்து கோயில் கொள்கிறது, அதை நாங்கள் இங்கே ஜடரை என்று வழிபடுகிறோம்.

சகுனியை அந்த ஓநாயின் வயிற்றிலிருந்து அவள் கடிக்கிறாள். அவளுடைய தோற்றமே பயங்கரமாக இருக்கிறது. ஓநாய் என வருவது பாலையின் பெரும்பசி. அந்தப்பசிதான் பாரதவர்ஷத்தை ரத்தக்களரியாக ஆக்கியது. சகுனி பாலையின் ஓநாய் என ஆரம்பம் முதலே வருகிறது. அந்த பசி அவனில் குடியேறும் இடமும் இங்கே வருகிறது.

அந்தப்பசியை உலகம் முழுக்க காண்கிறோம் இல்லையா? படையெடுப்பாளர்கள் எல்லாருமே அந்த ஓநாய்களின் வடிவங்கள்தான். இந்தியவின்மேல் எத்தனை ஓநாய்கள் வந்துள்ளன! ஜெங்கிஸ்கான் முதல் ராபர்ட்கிளைவ் வரை

ஜெயராம்