அன்புள்ள ஜெ
வெண்முரசை ஒட்டுமொத்தமாக ஒரு மறுவாசிப்புக்கு ஆளாக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் முதல்வாசிப்பில் வேகமாக வாசித்து முடித்தேன். ஆனால் நிறைய வரிகளை விட்டுவிட்டேன். அதை என்னால் உணரமுடிந்தது. பிறகு அவ்வப்போது ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப்படித்தால் இந்த இடத்தை முன்னாடி படிக்கவில்லையே என்ற எண்ணம் வந்தது. ஆகவே மீண்டும் வாசித்தேன்
காண்டீபம் நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த வரி வந்தது .படைக்கலன்கள் முன், நோயின் முன், அவமதிப்பின் முன் அச்சமற்றிருப்பவன் வீரன். உண்மையின் முன் முற்றிலும் அச்சமற்றிருப்பவனே மாவீரன்.
இந்தவரிதான் அர்ஜுனனை புரிந்துகொள்வதற்கான சாவி.இந்த வரியிலிருந்து அர்ஜுனனின் உண்மையான சவால் என்ன என்று தெரிகிறது. பிற்பாடு அவனே தளர்ந்து அமரும் ஒரு பெரிய உண்மை கண்முன் வந்து நின்றிருக்கிறது. கிருஷ்ணன் உதவியால் அவன் அதையும் கடந்துசெல்கிறான். உண்மையை எதிர்கொள்ளத்தான் மிகப்பெரிய வீரம் தேவை
ஆகவேதான் அருகர்களை மகாவீரர் என்று சமணமதம் சொல்கிறது என்று நினைக்கிறேன்
எம்.பாஸ்கர்