இனிய ஜெயம்
இந்த பனிரெண்டாவது ஓவியம், அஸ்தினசபுரி வாயிலில் வந்து நிற்கும் ஆஸ்திகனின் சித்திரம் போல ஒரு நேரடி சித்தரிப்பு.
விலகி செல்லும் காசிப்பெருநகரம். கங்கையில் மிதக்கும் படகு. அமர முனையில் கால்களை அகட்டி கைகளை கட்டி உறுதியாக நிற்கும் பீஷ்மரின் முதுகு தெரிகிறது. தூரத்தில் மற்றொரு படகு. தலைக்கு மேலே சித்தரிப் பறக்கும் நீர் காகங்கள். மொத்த ஓவியமும் warm tone எனும் அனலின் தாக்கம் கொண்ட வண்ணத்தில் இழைகிறது.
ஓவியமாக ஒரு பார்வையாளனுக்கு அளிக்கப்பட்டது இது மட்டுமே. வெண் முரசு வாசகனுக்கு இவ்வோவியம் மேலதிக கற்பனை சாத்தியங்களை திறக்கக் கூடியது.
வெண்முரசின் பெரும் ஆளுமைகளின் வார்ப்பை. நிலைபெயராமை எனும் ஒரு சொல்லில் வரையறுக்க முடியும். துரியன், கர்ணன், துரோணர் இப்படி. தாங்கள் எவரோ அந்த நிலையில் எது வரினும் நிலைபெயராமல் நின்றனர். அந்த நிலைபெயராமை எனும் நிலையை புடம் போட்ட களமே குருஷேத்ரம். இத்தகு நிலைபெயராமை எனும் தீவிரம் கொண்டவர்களில் தலையாயவர் பீஷ்மர். அம்புகளை கொண்டு கங்கையின் வெள்ளத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டவர். அந்த பீஷ்மரின் அகம் சார்ந்த புறவயமான சித்தரிப்பாக இந்த ஓவியத்தை அணுகி ரசிக்க முடியும்.
முதன் முதலாக அவரது மனச் சமநிலையை குலைக்கும் அறமா அறமற்றதா என குழம்பும் செயல் ஒன்றை செய்திருக்கிறார். ஒரு அடி வைப்பு. அது சரியா தவறா? பீஷ்மரின் கலைந்து பறக்கும் எண்ணங்களே தலைக்கு மேலான அப் பறவைகள். மலை முடியில் துவங்கிய நாள் தொட்டு கடல் சேரும் கணம் வரை கங்கைக்குத்தான் எத்தனை ஆற்றல். நிலையின்மையின் பேராற்றல். அதுவே பீஷ்மரின் காலின் கீழே. அந்த நிலையின்மையின் பேராற்றலை அம்புகள் கொண்டு தடுக்கும் நிலை பொறாமையின் ஆற்றலே பீஷ்மர்.
இந்த இரு ஆற்றல்களின் மோதல் களமான பீஷ்மரின் உடல் மொழியே இந்த ஓவியத்தில் நாம் காண்பது.
கடலூர் சீனு