Saturday, August 29, 2020

முதற்கனல் வாசிப்பு- ஜெயராம்

 


அன்புள்ள ஆசிரியருக்கு,

நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

ஈரோடு சந்திப்பிற்குப் பிறகு கடிதம் எழுத பல தடவை எண்ணினாலும் என்ன தயக்கம் என்று தெரியவில்லை, உங்களுடன் உரையாடாமல் வழிகாட்டுதல் பெறாமல் என்னை வளர்த்துக்கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தும் என்னால் முடியவில்லை. பிறகு வெண்முரசு எழுதிக் கொண்டிருப்பதனால் தொந்தரவு செய்ய வேண்டாம் எழுதி முடித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆசானின் கனவுப் படைப்பு ஆதலால் எழுதி முடித்தவுடன் உங்களுக்கென்று ஒரு 'illustration' வரைந்து அதை வாழ்த்தாக அனுப்பலாம் என்று நினைத்தேன்

ஆனால் நீங்கள் வெண்முரசு எழுதி முடித்தவுடன் மறுபடியும் ஒரு தயக்கம். படைப்பை வாசிக்காமல் அதற்கு வாழ்த்துக் கூறுவது முறையாகுமா ? என்ற கேள்வி. பல முறை வாசிக்க ஆரம்பித்து தொடராமல் ஒரு சில அத்தியாயங்களுடன் நின்றிருக்கிறேன். இப்போது எண்ணிப்பார்த்தால் எப்போதோ இது விஷ்ணுபுரம் கொற்றவை போன்ற நாவல்கள் வாசித்த மேலான வாசகர்களுக்குரியது என்று தளத்தில் படித்த ஞாபகம். அல்லது நானாகவே அப்படி நினைத்துக் கொண்டேன். இன்னொன்று இவ்வளவு பெரிய நாவலை நம்மால் தொடரமுடியுமா என்ற தயக்கம். இதற்கெல்லாம் அப்பால் மகாபாரதம் தெரிந்த கதைதானே என்ற அசட்டுத்தனம்

வெண்முரசு சார்ந்து உங்கள் தளத்தில் வரும் எந்த பதிவுகளையும் தாண்டிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். வெண்முரசு எழுதப்பட்டு முடிந்ததும் குரு பூர்ணிமா நாளில் நடந்த  zoom கூடுகையில்(இது போன்ற கூடுகைகளை நீங்கள் அவ்வப்போது நிகழ்த்த வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். உங்கள் உரையாடலைக் கேட்க உங்களுடன் உரையாட எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும்) கலந்து கொண்டு வாசகர்களின் அனுபவங்களை கேட்ட பிறகும் 'இப்போது வரும் இளம் வாசகர்களுக்கு வெண்முரசின் மொழி ஒரு தடையாக இல்லை இயல்பாக நேரடியாக அவர்களால் வாசிக்க முடிகிறது' என்ற அர்த்தத்தில் நீங்கள் சொன்ன வரியும் உத்வேகமூட்டியது. அதனால் இனிமேல் வெண்முரசை தொடர்ந்து வாசித்து 'முதற்கனல்' முடிந்தவுடன் என் வாசிப்பனுபவத்தை கடிதமெழுதவேண்டும் என்றும் முடிவு செய்தேன். எந்த வாழ்த்தையும் விட அது தான் ஆசிரியரியரின் படைப்புக்கு நீதி செய்வது என்பதால்.

முதற்கனல் வாசிப்பனுபவம்:

நீiiiங்கள் வெண்முரசு எழுதியது போலவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயம் என்று வாசித்தேன். சில போது நம்மைறியாமலேயே மூன்று நான்கு அத்தியாயங்கள் வரை செல்வதுண்டு. அவை பெரும்பாலும் போர் காட்சிகளாக(பீஷ்மர் காசிநாட்டிற்கு சென்று மூன்று இளவரசிகள் சிறையில் எடுத்தது) இருக்கும் அல்லது நில(சப்த சிந்து) வருணனைகளாக இருக்கும். ஏதாவது சில நாட்கள் தவறவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது அதிகமான அத்தியாயங்களை வாசிப்பது அவற்றை ஈடுசெய்யும். இன்னொன்று

மிக முக்கியமானதை பதிவு செய்ய விரும்புகிறேன். சில நாட்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை வாசித்துவிட்டு அடுத்த சில நாட்கள் படைப்புடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது நம்மை படைப்பிலிருந்து விலக்கி விடுகிறது. அதுவரை நாம் செலுத்திய உழைப்பும் வீணாகும் அபாயத்திற்கு இட்டுச்செல்வது என்பதை உணர்ந்தேன். அதனால் ஏதாவது ஒரு வகையில் தினமும் வெண்முரசுடன் என்னைத் தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்று வெண்முரசு தளத்தில் வந்த விமர்சனங்களையோ கேள்வி பதில்களையோவாவது வாசித்து விடுவேன். பெரும்பாலும் நான் படித்துக்கொண்டிருக்கும் முதற்கனல் நாவல் சார்ந்தவையாக. நீங்கள் வெண்முரசு சார்ந்த விவாதங்களை தனியாக ஒரு தளத்தில் தொகுத்திருப்பது என்னைப் போன்ற புதிய வாசகர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை

நீங்கள் கூறியது போல் தடைகளேதும் இல்லை  மாறாக சிறிது சிறிதாக நம்மை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது நாவல். சக்கரவியூகத்தில் புகுந்த அபிமன்யுவைப் போல அதிலிருந்து வெளிவருவது கடினம். அதுபோலவே நாம் அதிலிருந்து பெற்றுக் கொள்வதும் அதிகம்அதில் சொல்லப்பட்ட வாழ்க்கைத் தருணங்கள் சொல்லப்பட்ட கருத்துக்கள் வருணனைகளென்று ஏதாவது ஒன்றை நாம் உணர்ந்து கொண்டும் தொடர்புபடுத்திக் கொண்டும் இருக்கலாம்

முதற்கனலில் வரும் காசி மன்னன் பீமசேனனின் மனைவி புராவதி அரண்மனையைத் துறந்து செல்லும் போதும் அத்திரிகை-சத்தியவான் உறவிலும் கங்காதேவி-சந்தனு உறவிலும் பெண்கள் சர்வசாதாரணமாக உறவை முறித்துக் கொண்டு செல்ல ஆண்கள் மட்டும் அவர்களை மறக்க முடியாமல் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கும்போதே அது என் நண்பன் ஒருவனுக்கும் நடந்தது. அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டிருந்தது. பெண்களுடன் பழகி அறியாதவன் இந்த பெண்ணுடன் சாதாரணமாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல மிகவும் நெருக்கமாகிவிட்டான். ஒரு நாளில் சுமார் ஏழு மணி நேரம் வீதம் குறுஞ்செய்தி அனுப்புவதும் உரையாடுவதுமாக மாறினான். திடீரென்று  ஒரு நாள் உடை சம்பந்தமான ஒரு விவாதம் சண்டையாக மாற அவள் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு தன் பெற்றோரிடம் கூறி திருமணத்தை நிறுத்தி விட்டாள். இவன் தவறையுணர்ந்து மன்னிப்பு கேட்டாலும் அவள் இறங்கி வரவில்லை. உறவு நின்று விட்டது. இவன் மட்டும் இப்போது ஏங்கிக் கொண்டிருக்கிறான்

இதேபோல் பீஷ்மர் அஸ்தினபுரி நீங்கி வருடங்கள் கழித்து மறுபடியும் கங்கநாட்டிற்கு செல்லும்போது கங்கநாடு மாறியிருக்கும். படகுப்பாதையும் வண்டிப்பாதையும் அமைந்துவிட்டிருந்தன. அங்கே கங்கர்களின் வழக்கமான மரவுரி அணிந்தவர்கள் அவரைவிட முதியவர்கள் சிலரே இருப்பார்கள். கலிங்கத்துப் பட்டாடையும் வேசரத்துப் பொன்னும் காந்தாரத்து மெல்லாடைகளும் புழக்கத்தில் வந்துவிட்டிருந்தன. நாம் பார்த்த நிலங்கள் நம் கண்முன்னே மாறும்போது அப்பழைய நிலத்தைப் பற்றிய ஏக்கம் நமக்கிருக்கும். ஆனால் மகாபாரத காலம் முதலே இது இயல்பு தான் என்ற உங்கள் கற்பனை இன்னொரு ஒட்டுமொத்த புரிதலை அளிக்கிறது.  

இப்படிப் பல. முதற்கனல் நாவலே நன்மையும் தீமையும் இருளும் ஒளியும் பிரபஞ்சம் முழுவதிலும் மனித மனங்களிலும் கொள்ளும் இருமையைப் பேசுகிறது. இதில் உயர்ந்த விஷயங்களைப் பற்றி பேசும் பல வரிகள் நாம் மந்திரங்களைப் போல தியானித்து நம்மின் ஒரு பகுதியாகக் கொள்ளத்தக்கவை.

"வித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது”,

"அவன் காலடியில் பணிபவர்களை தன்னிலிருந்து கீழானவர்களாக எண்ணும் மனநிலையை கடந்துவிட்டிருந்தமையால் அவ்வணக்கங்களுக்கு முற்றிலும் உரிய முனிவனாக இருந்தான். அவர்களை சிரம்தொட்டு ஆசியளித்தான்

போன்றவை உதாரணம். நாவல் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலக்காட்சி வருணனைகளும் உவமைகளும் பெரும் பரவசத்தை அளிப்பது. குறிப்பாக சப்தசிந்துவின் அழகிய நிலப்பரப்பு பற்றிய வருணனை. பீஷ்மர் கூறியது போல "இந்த பாரதவர்ஷத்தில் எங்காவது நான் ஒரு குடும்பம் அமைத்து வாழவிரும்புவேன் என்றால் அது இங்குதான்" என்பதை நானும் கூறிக் கொள்கிறேன்

ஷண்முகவேல்-மணிகண்டன் கூட்டணி ஒரு அத்தியாயத்திற்கு ஒன்று என்று அளவில் தேர்ந்தெடுத்து ஓவியம் வரைந்திருந்தாலும், வரைவதற்கான வரிகளும் கற்பனைகளும் குவிந்து கிடக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

 "நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான். இரவு அணைந்தபோது வானில் எழுந்த பலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது. இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன. பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்குமுனையில் உதித்தெழுந்தாள்". 

அம்பிகை நிருதனின் படகில் அஸ்தினாபுரம் செல்வதைச் சொல்லும் இவ்வரிகளில் மட்டும் அபாரமான மூன்று காட்சிகள் உள்ளன

இவையனைத்துக்கும் மேலாக என்னை யோசிக்க வைத்து அலைக்கழித்த தருணங்களும் உள்ளன. முக்கியமாக சித்திராங்கதனின் சாவு. இன்னொன்று பீஷ்மர் யானத்தில் யயாதியைக் கண்டது. இதை வாசித்தவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த நாளே உங்கள் தளத்தில் அருணாச்சலம் மகாராஜன் அவர்கள் அதைப்பற்றி எழுதிய பதிவைப் படித்தேன். இதில் பலதரப்பட்ட வாசிப்புச் சாத்தியங்கள் இருப்பதால் படைப்பைப்பற்றிய விவாதங்களை கூர்ந்து கவனிப்பதும் முக்கியமாகப் படுகிறது.

நேற்று முன்தினமே முதற்கனலை வாசித்து முடித்தேன். நேற்றும் இன்றும் வாசித்த அத்தியாயங்களை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாவல் பெரும்பாலும் காட்சிகளாகவும் தரிசனங்களாகவுமே நினைவில் இருக்கிறது. அது எனக்கு இயல்புதான் என்பது ஒரு பக்கம் என்றால் முடிந்தவரை வரிகளுடன் நம்மை அணுக்கமாக்கிக் கொள்வது மேலும் நம்மைப் படைப்புடன் பிணைக்க உதவும். நுண்வாசிப்புகளை சாத்தியப்படுத்தும் என்று நினைக்கிறேன்

இந்த ஒரு நாவலிலே மேலும் நுணுகி வாசிப்பதற்கும் மீள் வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்ற போது அடுத்தடுத்த நாவல்களை நினைக்கும் போது மலைப்பைத்  தருகிறதுஇருந்தாலும் ஒன்று நன்றாகத் தெரிகிறது. இந்நாள் வரை என் ஆளுமையில் பெரும் தாக்கம் செலுத்தியது உங்கள் கட்டுரைகளும் பொன்னிறப் பாதை அறம் போன்ற தொகுப்புகளும் சிறுகதைகளும் மற்றும் நாவல்களுமென்றே நினைத்திருந்தேன்.  அவற்றிற்கெல்லாம் கடன்பட்டவனாயிருக்கிறேன். ஆனால் வெண்முரசு மேலும் உச்சத்திற்கு என்னை எடுத்துச் செல்லும் என்று இப்போது தோன்றுகிறது. அதனாலேயே நிறுத்தாமல் வாசிக்க வேண்டும் என்று எனக்கே சொல்லிக் கொள்கிறேன். அதை உங்களிடமும் சொல்லிக் கொள்வது என்னை மேலும் பொறுப்புடன் வாசிக்கத் தூண்டும்.

உங்கள் கனவுப் படைப்பை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகளையும் அப்படைப்பை வாசிக்க கிட்டிய வாசகனாக மனதார நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 
ஜெயராம்