Monday, August 17, 2020

மகிஷாசுரமர்த்தனி

 

இனிய ஜெயம் 


இந்திய நிலத்தின் தனித்துவமிக்க தொன்மமாகிய மகிஷாசுரமர்த்தினி குறித்து அதன் சமூவியல் தோற்றுவாய் குறித்து கோசாம்பி உட்பட நிறைய ஆளுமைகள் ஆய்வு செய்திருக்கிரசர்கள். இந்திய ஆழ் மனதின் இந்த தொன்மத்தை, அந்த ஆழம் வரை சென்று, அணுகிப் பார்த்தது கொற்றவையும், வெண்முரசும். 

பாரத நிலமெங்கும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் செழித்து வளர்ந்து பரவி நிற்கும் மகிஷாசுரமர்தினியின் வெண்முரசு சித்தரிப்பு. 2014 ன் சித்தரிப்பில் உள்ள எருமையின் கண்களில் மரண நொடியின் ஸ்தம்பித்த நிலை. அரி செம்மை நிறம். அசுரன் கரிய நிறம். வெண்மை ஆற்றலாய் கொற்றவை. நடனம் போலும் ஒரு சம்ஹாரம். 

இந்த 2014 ன் எருமையில் துவங்கி சற்றே பின்னோக்கி பிம்பேத்கா பாறை ஓவியத்தில் உள்ள எருமையையும் ஸ்பெயினின் அல்டமிரா பாறை ஓவியத்தில் உள்ள எருமையையும் இந்த எருமையுடன் இணைத்து பாப்போம். 



இரண்டு ஓவியங்களும் 10,000 வருடங்கள் முந்தியவை. அல்டமிரா எருமை மிக துல்லியமாக இருக்கிறது. முதுகில் உள்ள முடிகள். வால் சுழற்சி. கழுத்து ஆகிடு. முகமும் கொம்புகளும். குறிப்பாக கால்களும் குளம்புகளும்.  பிம்பேத்கா நேர் எதிர் நிலையில். சரியான முறையில் கேள்விக்குறி போல ஒரு கோடு. பார்ப்பவர் எவருக்கும் காந்தி தெரிந்து விடுவார். காந்தி எனும் உருவ விளிம்பில் எது காந்தி என உணர வைக்கிறதோ அதை மட்டும் ஒரு கோடாக இழுத்தால் போதும் காந்தி கிடைத்து விடுகிறார். ஒரே ஒரு கீற்று கோடு. அது காந்தி என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை. அப்படி ஒன்றே பிம்பேத்கா எருமை. சில கோடுகள் அவ்வளவே. எருமை மனிதர்கள் எல்லோரும் வந்து விடுகிறார்கள். அல்டமிரா, லக்ஸர்ஸ் பாறை ஓவிய எருமை போல 'உள்ளது உள்ளபடி' எனும் நிலையில் பிம்பேத்கா எருமை இல்லை. பிம்பெத்கா எருமையும் அதன் கீழே உள்ள மனிதர்களையும் கண்டால் ஒன்று அனுமானிக்கலாம். எருமையால் தாக்கப்படும் மனிதன் என்பதை முதல் பார்வையிலும், எருமையின் ஆற்றலைத்தான் அத்தனை பெரிய எருமையாகவும், அந்த பெரிய ஆற்றல் முன்னால் எத்தனை சிறியவன் மனிதன் என்பதையும் இரண்டாம் பார்வையிலும் உணர முடியும். 

இதுவே வளர்ந்து வளர்ந்து மேலை கீழை மரபின் கலாச்சார தனித்தன்மை கொண்ட கலை வெளிப்பாட்டு வடிவங்களாக பரிணமித்திருக்கிறது. தனித்தன்மை இது எனில் பொதுத் தன்மை என்ன? உலகிலேயே ஆகப் பழைய ஓவியங்கள் அடங்கிய பிரான்சின் லக்ஸர்ஸ் குகை, தொல்பழங்கால மனிதர்களின் வழிப்பாட்டு சடங்களுக்கான தனித்த இடமாக விளங்கிய ஒன்று என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பெண் தெய்வ வழிபாடு. தெய்வத்துக்கு எருமைத் தலை. ( மங்கிய ஓவியத்தை சிதைக்காத அதி நவீன ஒளிக்கதிர்கள் அனுப்பி ஆராய்ந்து கிட்ட தட்ட இதுதான் எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்) .


இந்த பொதுத் தன்மையும், தனித்தன்மையும் கொண்டு இந்திய ஆழ் மனதில் வளர்ந்த தொன்மமே மகிஷாசுரமர்த்தினி. பிம்பேத்கா குகையின் எருமை கீழே மகிஷமாக வந்த ஆற்றலின் கீழே சிக்கி கிடக்கும் மனிதன். அந்த மனிதனின் ரட்ஷகி அல்லவா மகிஷாசுர மர்த்தினி? 

10,000 ஆண்டுகளாக ஆழ் மன தொன்மங்கள் வழியே, அறுபடாமல் செழித்து வளரும் கலைத்தேட்டத்தின்  மற்றொரு வடிவம் 2020 இன் வடிவம் இந்த மகிஷாசுர மர்த்தினி.

கடலூர் சீனு