Wednesday, August 12, 2020

மச்சகந்தி


இனிய ஜெயம் 

எனது சிறு வயதில் நெல்லையில் தாத்தா வழியே கேட்ட கதை. நிச்சயம் கதைதான். உலக அளவில் ஓவியப்போட்டி நடக்கிறது. இந்தியா சார்பில் ரவிவர்மா ஓவியம் ஒன்று செல்லவேண்டும் என்பது அனைவரது விருப்பமும். வர்மாவுக்கோ தள்ளாத வயது. படுத்த படுக்கை. போட்டி நாள் நெருங்குகிறது.  ரவிவர்மா வரைந்த ஓவியம் போட்டியில் பங்கு கொண்டு ஆறுதல் பரிசு பெறுகிறது. ரவி வர்மா வெறுமனே தூரிகையை வண்ணத்தில் தோய்த்து, பதாகையில் ஒரே வீச்சில் ஒரு வட்டம் போட்டு மையத்தில் புள்ளி வைத்து அனுப்பி விடுகிறார். எப்படி அளந்தாலும் மையப் புள்ளி பிசகாத விளிம்பு விலகாத மிக சரியான வட்டம் .

உண்மையில் இப்படி வாய்மொழிக் கதைகள் உருவாகி புழங்கும் அளவு இருந்திருக்கிக்கிறது அறுபதுகளில் ரவிவர்மா புகழ். அறுபதுகளில் தென் தமிழகத்தில் காலண்டர் சாமி படங்கள் என்பது தீ போல பரவிக் கவிந்த ஒன்றாக இருந்திருக்கிறது. தனித்தமிழும் திராவிடமும் வெளியே சாமியாடிக் கொண்டிருக்க உள்ளே  தண்டாயுதபாணியும் மதுரை மீனாட்சியும் ரவி வர்மாவின் சரஸ்வதியும் மிகுந்த காதலுடன் இல்லத்துப் பெண்களால் சுவீகரிக்கப் பட்டு பரவலாக வீடுகள் தோறும் கோலோச்சிக் கொண்டிருந்திருக்கிறார்.  

அதிலும் ஒரு வீட்டுக்குள் ரவி வர்மா படம் ஏதேநும் இருப்பது கிட்டதட்ட ஒரு அந்தஸ்து சமாச்சாரம் போல இருந்திருக்கிறது. தாத்தாவின் ரகசிய சேகரிப்பில் வர்மா வரைந்த டாப்லெஸ் சுந்தரி உண்டு. மிக மிக பிந்தியே அது மச்சகந்தி சந்தனு என்று அறிந்தேன். 

மச்சகந்தியை சந்தனு சந்திக்கும் ரவிவர்மா ஓவியத்துக்கு ஷண்முகவேலின் சித்தரிப்புக்கும் இடையே எவ்வளவு வித்யாசம். வர்மா ஓவியத்தில் உள்ள நிர்வாணம் ஒரு டிஸ்பிளே போன்றது. உடைகள் உடல்மொழி எல்லாமே வினோதமான ஒத்திசைவு கொண்ட பியூஷன் போன்ற இணைப்பு. 



சண்முகவேல் ஓவியத்துக்கோ பகைப்புலமாக வெண்முரசின் வலிமையான சித்தரிப்பு உள்ளது. வர்மா காட்டும் பொழுதுக்கும், சண்முகவேல் தீட்டிய பொழுதுக்கும்தான் எத்தனை பாரதூரம். இரண்டு ஓவியத்திலும் உள்ள நீரின் தளதளப்பு. மேலதிகமாக சண்முகவேல் சேர்க்கும் அமானுஷ்யத்தின் வசீகரம். முழு நிலவொளியில் மின்னும் மீனின் சருமம் கொண்ட மச்சக் கன்னி. 
முதல் பார்வைக்கு வசீகரிக்கவும், மறு பார்வைக்கு உணர்வு சாத்தியங்களை விரிந்து பரவவும் செய்யும் ஓவியம்.