அன்புள்ள ஜெ
வெண்முரசின் வண்ணக்கடலில் இளநாகன் கடலில் இருந்து ஆரம்பிக்கிறான். பாரதவர்ஷத்தின் மலைகள் நதிகள் நகர்கள் வழியாக பயணம் செய்கிறான். அவன் கடைசியில் வந்தமையும் இடம் மண்நகர்.\ மண்ணாலானவர்கள் அசுரர்கள். அந்த உவமை அற்புதமானது. தலித் என்ற சொல்லுக்கும் அதுதானே அர்த்தம். உண்மையில் அது கற்பனையா? இல்லை, ஏனென்றால் நரகாசுரன் உட்பட பெரும்பாலான அசுரர்கள் மண்ணாலானவர்கள் என்ற வர்ணனை மகாபாரதத்திலேயே உள்ளது.
மண்ணின் மக்கள் இறந்தால் வானம் செல்வதில்லை. வேர்களின் உலகில்தான் செல்கிறார்கள். அதுவும் மரபிலே உண்டு. மகாபலி வாழும் உலகம் பாதாளம் அல்லவா? அந்தப்பாதாளத்திலிருந்து ஒவ்வொரு அசுரமன்னராக எழுந்து வரும் அந்த கடைசிப்பகுதிகள் வெண்முரசு எழுதிக்காட்டிய உச்சமான இடங்கள். கொற்றவையில் நீங்கள் எழுதிய பெருங்களியாட்டுப் பகுதியைவிடவும் மேலானவை
ஆர்.முத்துராஜா