அன்புள்ள ஜெமோ
நான் இப்போதுதான்
வெண்முரசு வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். மழைப்பாடலை அடைந்துவிட்டேன். இந்த ஊரடங்குச்சூழல்
ஒன்றிப்போய் வாசிப்பதற்கு உதவியாக இருக்கிறது. அத்துடன் இப்போது வீட்டுக்குள் ஒடுங்கிக்கிடக்கிறோம்.
மழைப்பாடல் காட்டும் விரிந்த நிலங்களில் மானசீகமாக அலைவது ஒரு பெரிய கனவுபோலிருக்கிறது.
நிலங்களை காட்டுவதுதான் உயரிலக்கியம். நிலம் பலவாறாக காட்டப்படலாம். இன்றைக்கு அற்புதமான
புகைப்படக்கலை வந்துவிட்டது. ஆனால் இலக்கியம் மொழியில் காட்டும் நிலம்தான் அழியாதது.
அது நிலம் அல்ல. நிலத்தின் சாராம்சம். அதுதான் நினைவில் நீடிப்பது. கற்பனையில் வளரும்
நிலம்.உண்மையில் உயர்வான இலக்கியம் சங்ககாலம் முதல் நிலத்தையே எழுதிக்கொண்டிருக்கிறது
தங்க சிவச்செல்வம்