அன்புள்ள ஜெ
காண்டீபம் நாவலில் அர்ஜுனன் சாக்ஷுகி மந்திரத்தைப் பெறும் இடம் அபாரமான ஒரு மறுவிளக்கம். மகாபாரதம் முழுக்க கந்தர்வர்கள் மண்ணுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே வந்து சாபமோட்சம் அடைந்து விண்ணுக்குச் செல்கிறார்கள்.
மண்ணிலுள்ள தூயவை அனைத்தையும் அவன் அறிந்து நிறைகையில் அவன் உடல் எடையற்றதாகிறது. இனிய மலர்த்தேனால், புலரியந்தியின் பொன்வண்ணங்களால், அகம் நிறைக்கும் இசையால், கனிந்த காதலால், காதல் முழுத்த காமக் களியாட்டத்தால் தன்னுள் இனிமை நிறைத்து தன் எடையை இழக்கிறான்.
பட்டுச் சரடால் கால் கட்டப்பட்ட பறவை போல் இங்கு இறகு படபடத்துக் கொண்டிருக்கும் கந்தர்வனை அறுத்து விடுதலை செய்வது ஒன்றே. அவன் அறிந்த இனிமைகள் அனைத்தையும் ஒன்றெனத்திரட்டி முழுமைப்படுத்தும் ஒரு மெய்ஞானம். அதை அறிந்த கணமே முற்றிலும் எடை இழந்து அவன் வானேறத்தொடங்குகிறான்
அவர்கள் ஏன் வந்தார்கள் எப்படி மேலே செல்கிறார்கள் என்பதற்கான மிகக் கவித்துவமான விளக்கம் அது. நன்றி
ரவிச்சந்திரன்