Monday, August 17, 2020

இந்திரகீலப் பயணம்

 


 அன்புநிறை ஜெ,

இன்று கிராதம் தொடங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்திரகீலமலையை அர்ஜுனன் அணுகும் பகுதியை வாசித்ததும் பல்வேறு பயண அனுபவங்கள் அலையலையாக கண்முன் எழுந்து வந்தன. பெரும்பாலும் நியூஸிலாந்து மற்றும் வியட்நாம் கடல் பயணங்கள். கிராதம் - 49 ஆம் அத்தியாயம் தொடங்கியதுமே இந்த நிலத்தை நான் கண்டிருக்கிறேன் என மனது துள்ளியது. இந்திரகீலம் குறித்த வர்ணனைகள் அனைத்தும் பொருந்தி வந்த எனது பயணத்தின் புகைப்படங்களில் வெகு நேரம் அமர்ந்திருந்தேன்.



காட்சி-1 

இந்திரகீலமலையை அர்ஜுனன் தன்னந்தனியாகவே சென்றடைந்தான். பீதர்நாட்டுக் கலங்கள் அவர்களின் கடற்பாதையிலேயே வழிபிரிந்தன. பாய்புடைத்து காற்றில் பறந்துசென்றுகொண்டிருந்த பெருங்கலங்களை கடலுக்குள் நிறுத்தமுடியாதென்பதனால் விரைவுகுறையாமலேயே கலவிலாவில் கட்டப்பட்டிருந்த மென்மரத்தாலான படகை கயிற்றை அவிழ்த்து கீழிறக்கினர்.

காட்சி-2

அர்ஜுனன் இருநாட்கள் கடலலைமேல் சென்றபின் தொலைவில் எழுந்துதெரிந்த கரிய பாறைமுகடுகளைக் கண்டான். அவற்றில் அலைமோதி வெள்ளிதழ் மலர்களை விரியவைத்துக்கொண்டிருந்தது கடல். அணுகும்தோறும் அவை பெரிதாகி தலைக்குமேல் எழுந்தன

காட்சி - 3

பின்னர் அவன் பச்சைக்குவைகளென எழுந்து நின்றிருந்த மலைகளைக் கண்டான். சுண்ணமலைகள் என பசுமைக்குள் தெரிந்த பாறைகள் காட்டின. தொங்கி வழிந்து சொட்டி நின்றது காடு.


காட்சி - 4

மானுடவிழியால் நோக்கப்படாத காடு என்று அதன் திமிர்ப்பே சுட்டியது. தொங்கும்காடுகளை கடந்துசென்றபோது மலைகள் சூழ்ந்த கடல்குடா ஒன்றை கண்டான்.


காட்சி-5

அதன் மையம் முழுமையாகவே வெண்ணிற இருளால் மூடப்பட்டிருந்தது. அதற்குள் அருவிகள் கொட்டிக்கொண்டிருக்கும் ஒலியை கேட்டான். முகில்களுக்குமேல் பச்சைமுகிலென நின்றிருந்தது இந்திரகீலமலை.
காட்சி-6

அது மண்ணை தொட்டிருக்கவில்லை. நீர்ப்பொழிவுதான் கடல்மேல் கால்களை ஊன்றியிருந்ததுஅதன் வட்டக்கரையில் அலை இதழிதழாக விரிந்து படிந்துகொண்டிருந்தது

காட்சி-7

அப்போதுதான் அவன் மலையின் மணிமுடி என வளைந்து நின்றிருந்த வான்வில்லை நோக்கினான். அது மழைவில் போல் கரையவில்லை. ஏழுவண்ண உலோகங்களால் கட்டப்பட்ட அணித்தோரணவளைவுபோல அவ்வண்ணமே நின்றது
*

இவை பெரும்பாலும் 502019-ல் சென்ற பயணத்தின் புகைப்படங்கள். தங்கள் அனுமானத்தின் விழிகளுக்குப் புலனான காட்சியை, நான் பிரத்யட்சமாய் கண்ட பொழுதின் காட்சித் துணுக்குகள். எனில் இப்போது மீள்வாசிப்பின் போதே இரண்டும் இணைந்து கொள்கிறது. 

கற்பனைகள் அனைத்துமே வேறெங்கோ நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றின் வடிவே, எழுத்தில் எழுந்து விட்ட ஒன்று எங்கோ இருந்து கொண்டும் இருக்கும், அவ்விதம் இன்று இல்லையென்றாலும் உருவாகி வரும் என்று தோன்றுகிறது. 

கம்போடியாவின் ப்ரே கான் ஆலயத்தில் விஷ்ணுபுரத்தின் காட்சியைக் கண் முன் கண்டதும் இப்போது நினைவில் வருகிறது. 

மிக்க அன்புடன்,
சுபா