Tuesday, June 30, 2015

ருக்மிணி எங்கே?

முறையாக ருக்மினி தான் ஸ்ரீதேவி என்றும்
பாமா பூதேவியின் வடிவம் என்றும் சொல்வது வழக்கம்.. 

இந்திரநீலத்தில் ஒர் இரு இடங்களில் பாமா திருமகள் என்பதாக குறிப்பிட படுகிறது என்று எண்ணுகிறேன்.

பொதுவாக பூதேவியை பூமி - தேவியாக பார்த்தாலும்,
அனைத்து காணகூடிய செல்வத்தின் அடிவமாக அவள் உள்ளாள் என்றும் சொல்வது உன்டு 
Tangible/ materialistic செல்வத்தின் வடிவே அவள் என்பதாக..

ஆணால் ஸ்ரீதேவி அவைகளுக்கும் மேலான ஒன்றை கொன்டத்னால் ஒரு படி மேல் என்று சொல்வது உன்டு
துலாபாரத்தில் சமமாக துளசியை (ருக்மினி) வைத்த கதை பொன்ற பல எடுத்துக்காட்டு உன்டு. 

பாமா அவனுக்கு எல்லாம் நான் தருவேன் என்ற போது இதை தான் எண்ணினேன்.

இந்த வடிவம் அப்படித்தான் ஒரு வகையில் இந்திரநீலத்தில் இதுவரை உள்ளது.
இந்த குழப்பம் 'திரு'மகள் என்பதனால் எனக்கு வருகிறதோ??

நன்றி
வெ. ராகவ்

காதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்


பாமா கண்ணனிடம் காட்டும் ஊடல் மற்றும் அலட்சியம் தேவைதானா? ஏன் அவனின் அதி மேலான தன்மைகளை அறிந்தும், அவன் அவளுக்காக மிக அரிய பணியை செய்த போதிலும் அவள் இவ்வாறு நடந்துகொள்கிறாள்?  இதற்கு காரணமாக நான் கருதும் ஒரே விஷயம்  அவள் ஒரு பெண் என்பதே.
ஒரு பெண்ணை மணந்துகொள்ள ஆணுக்குதான் போட்டிகள் வைக்கப்படுகின்றன. ஆண்தான் தேடி தேடி தன் துணையை அடையவேண்டியுள்ளது. பெண்ணின் கைபிடிக்க போர்கள் நடைபெற்றுள்ளன. தன்னை மணம் முடிக்க ஒருவன் தன் உயிரை பணயம் வைக்கவேண்டும் என்பதை ஒரு பெண் இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள். புலியுடன் போரிட்டு அதன் நகங்களை பதக்கமாக கொணரச்செய்கிறாள். முரட்டுக்காளையின் கூரிய கோம்புகளை பிடித்து அடக்கச்சொல்கிறாள். யாராலும் தூக்கமுடியாத அம்பிலே நாணேற்றச் சொல்கிறாள்.   தன் காலடியில் சேவகனாய் இருக்கவைத்து மகிழ்கிறாள். இந்த நவீன காலத்திலேயே நாம் காண்பது என்ன. பெண்ணை வெளியில் அழைத்துச்செல்லும் ஒருவன் அதை தன்னுடைய பெருமையாக கருதவேண்டும் என அவள் நினைக்கிறாள். அவன் கார் கதவை திறந்துவிடுவது, இருக்கையை அவளுக்கு ஒழுங்குபடுத்துவது, மேலங்கியை வாங்கி வைப்பது, அவளின் எண்ணமறிந்து அதற்கேற்ப பேசுவது, சொல்வதை சரியாக புரிந்துகொள்வது, சொல்லாததையும் யூகித்து சரியாக புரிந்துகொள்வது என அவன் ஒரு ஏவலாளியாக நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறாள்.  இது ஏன் இப்படி? இந்த அகங்காரம் ஒரு பெண்ணிற்கு இயல்பாகவே அமைவது எப்படி?  இது வெறும் காதல் நாடகம் அல்ல. இது மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமல்ல என நான் கருதுகிறேன்.

  இதைப்புரிந்துகொள்ள இந்தக் காட்சியை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒரு மென் சதுப்பு இருள் பெருவெளியில் லட்சக்கணக்கான வீரர்கள் வந்திறங்குகின்றனர். அச் சதுப்பு வெளியில் தவழ்ந்து தவழ்ந்து  தன் தேடலை ஆரம்பிக்கின்றனர். அதில் ஆயிரக்கணக்கானோர் மட்டுமே நிகழ்தகவின்படி சரியான திசையில் செல்லமுடிகிறது.  அதிலும் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே அடையவேண்டிய இடத்தை அடைகின்றனர். அந்த இடத்தில் ஒரு நிலவு தேய்ந்தும் வளர்ந்தும் காணும் ஒரு முழு சுழலில் சில தினங்கள் மட்டுமே ஒரு இளவரசி வந்து வீற்றிருப்பாள். ஒருவேளை இவர்கள் வரும் நாட்களில் இளவரசி இருப்பாளானால் ஒரே ஒரு வீரனை தன்னோடு இணைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.  மற்ற அனைத்து வீரர்களும் மாய்ந்து போவார்கள். இந்த ஒற்றை இளவரசியை அடைவதற்கான இந்த மிகச்சிறிய வாய்ப்பிற்கு  பல லட்சக்கணக்கான வீரர்கள் தன் உயிரைக்கொடுக்க விழைகின்றனர் என்றால்  அந்த இளவரசிக்கு எத்தகைய ஆளுமை இருக்கும், அதனால் அவளுக்கு எவ்வளவு அகங்காரம் கூடியிருக்கும் என நினைத்துப்பாருங்கள்.  ஒரு பெண், பெண்ணாய் இருப்பது இந்த இளவரசிகளின்  சுயவர நிகழ்வுகளுக்காகத்தான். ஆகவே அந்த இளவரசிகளின் அகங்காரம், ஒரு பெண்ணின் மனப்போக்கில், அவளுடைய ஆணுடனான உறவில் பிரதிபலிக்கச் செய்கிறது. அதனால் ஒரு பெண் காதலில் கொள்ளும் அகங்காரம் சரியெனவே தோன்றுகிறது. அந்த இளவரசிகளுக்காக தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் பல லட்சக்கணக்க வீரர்களை தோற்றுவிக்கும் ஆண் அந்தப்பெண்ணிற்கு ஏவலாளிபோல் அவள் காலடியில் இருப்பது ஒன்றும் பொருத்தமற்றதாகவும்  தோன்றவில்லை.
   

தண்டபாணி துரைவேல்

Monday, June 29, 2015

நாசிம்ம கீதை


ஒரு நாள் ஒரு அத்தியாயம் என்ற கணக்கு நமக்கு ஒத்துவராது என்பதை நீலம், பிரயாகை போதே அறிந்தேன். திருப்பதி பெருமாள் கோவிலுக்குள் கொடுக்கப்படும்  குட்டி லட்டு போல, உடனே முடிந்து விடும்அதனால் அடுத்த முறை குறைந்தது 10 அத்தியாயமாவது வந்த பின்பே படிக்க தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். (அப்படியே ஜெ சார் எண்ணியதை போல ஆனால் வேறு திசையிலிருந்து :) ) நீலம் என்ற மந்திர சொல் அவரை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை அறிய முடிகிறது. வரிகளின் இடையில் நிறைந்திருக்கும் பொருளை கண்டு சுவைப்பது ஒரு வழியென்றால், வரிகளாய் படர்ந்திருக்கும் விவரணைகள் சுவைப்பது ஒரு வழி. கூர்மையான அவதானிப்பு ஒரு புறம், அன்றாடம் நாம் காண்பதை வானத்தில் தீட்டி ஓவியமாய் காண்பிப்பது மறுபுறம். இப்பொது தான் திரு சீனு அவர்கள் "அறிதல்" "புரிதல்" என்ற பதங்களை விளக்கி எழுதியதை வாசித்தேன். விஞ்ஞானம் புரிந்து கொள்ளும்மெய்ஞானம் அறிந்து கொள்ளும். கீழ்கண்ட வரியை படித்து படித்து நெகிழ்ந்து போனேன்
"குறுநுரைகள் எழுந்த நெற்றியில் விழுந்த மழை குறுமயிர்ப் பிசிறல்களை வெண்பளிங்கில் கீறல்கள் போல் படிய வைத்தது."
இந்த காட்சியை எண்ணிலடங்கா முறை நாம் பார்த்திருப்போம் ஆனால் நான் இதை அறிந்தது இப்போது தான்.  அதே போல் 

"மண் கரைந்து செங்குழம்பாகி, நாகமென வளைந்து, சுருண்டு மடிந்து ஓடிவந்து, அவர்கள் காலடிகளை அடைந்து மண்கரைத்துத் தழுவி இணைந்து ஓடையாகி சரிவுகளில் குதித்திறங்கி பட்டுமுந்தானையென பொழிந்து யமுனையின் கருநீர்ப்பெருக்கில் விழுந்து செம்முகில் குவைகளாக எழுந்து பின் கிளைகளாக பிரிந்து ஒழுக்கில் ஓடியது மழைப்பெருக்கு."

மழையின் பயணக்கட்டுரை சுருக்கமாய் செறிவாய் சொல்லப்பட்ட வரிகள்

வெண்முரசில் நான் வியப்பது எல்லாம் எப்படி இவரால் கடுகின் முதுகின் நுனியை கூட ஞாபகம் வைத்து அதை இலக்கிய பூதக்கண்ணாடி  வழியாக காட்ட முடிகிறது என்பதை தான். எந்த ஒரு விஷயத்தையும் கவனிக்காது செய்வது ஒரு ரகம், உற்றுநோக்கி ( )கவனித்து செய்கிறேன் என்ற பேரில் அதன் பின்னால் உள்ள சுவையை தவற விடுவது மத்திமம், உற்றுநோக்கி ஆனால் அதன் சுவையை உணர்வது பூரணம் - அதுவாகவே ஆகி விடுதல். வெண்முரசில் வரும் கிருஷ்ணன் அப்படி தான் இருக்கிறான்

படைப்பை உருவாக்கும் போது எப்படி உணர்ந்தீர்கள் () உணருவீர்கள் என்பதை போல் அபத்தமான கேள்வி இருக்க முடியாது. ஆனால் அதை கேட்காமல் இருக்க முடியாது, அதற்கு பதில் ஒன்று சொன்னாலும் அது முழுமையாய் இராது. நம் தலைவர் மொழியில் சொன்னால், சொற்களாய் ஆன பின்பும் எஞ்சியிருக்கும் சொல்லின்மை

அதே போல், சியமந்தக மணியை கொண்டு வந்து சேர்க்கும் கிருஷ்ணன் சொல்லபவை தற்கால அரசியலும் கொள்ளத்தக்கது 

"ஒவ்வொரு குடியும் தனிப்பெருமை பேசுவதை துவாரகையின் யாதவர் பெருமன்றம் ஒரு போதும் ஒப்பலாகாது. பன்னிரு குலமும் எண்ணிலா குடியும் கொண்ட யாதவப் பெருந்திரள் ஆழி, வெண்சங்கு இரண்டையும் ஏற்று ஆவளர்குன்று ஒன்றே இறையெனத் தொழுது ஒன்றானால் அன்றி இங்கு வென்று நகர் கொண்டு வாழ முடியாதென்றறிக! "

ஆண்ட பரம்பரை என்று அரற்றி கொண்டும், மொழியின் பெருமையில் மனிதத்தை மறந்தும் நடக்கும் நிகழ்கால இந்திய சமூகத்தின் நிலை கண் முன் வந்து செல்கிறது

இறுதியாய், பிரசேனர் மரணம் ந்ருசிம்ம கீதாஉபதேசம். "விழைவு ஓடும் குருதியில் ஆணவம் கொழுநெய்... முன்பொருமுறை இத்தகைய நறுங்குருதியை உண்டேன்" என்று போகும் தொடர் இந்த சொல்லில் முடிகிறது "அனைத்தறங்களையும் கைவிடுக! என்னையே அடைக்கலம் கொள்க!

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:  


இன்று வரை வந்ததை படித்து முடித்து சில நேரம் கைத்தட்டி கொண்டே இருந்தேன். பாமாவின் மனதை அந்த கிருஷ்ணன் அறிந்தை போல்,இதுவும்  நம் ஆசான் செவிகளை சேரும் என்று நினைப்போமாக