இனிய ஜெயம்,
மழைத்துளிகள் துவங்கி, எழுமுகம் முதல் அத்யாயம் வரை இன்று அதிகாலை தொட்டு தொடர்ந்து வாசித்துமுடித்தேன்.
திருஷ்டியத்தும்ணன் காணும் நாடகத்தில் வரும் சியமந்தக மணி, தொடர் அத்யாங்களில் ஒரு உயிருள்ள ஆளுமை போலவே வளர்ந்து பரிணமிக்கிறது.
எங்கோ
தூரத்து எதிரொலி போல, விதுரர் ஹச்தினாபுரியின் பொக்கிஷ அறைக்குள்ளிருந்து
கையில் ஏந்தி , விழி விரிய நோக்கும் வைரத்தின் [அஸ்வதந்தம் ?] நினைவு
எழுகிறது. கூடவே பீமனால் கொல்லப்படும் பகனின் கையில் இருக்கும் வைர
மோதிரமும்.
சிகப்புக் கல் குரோதத்தின் வண்ணம். நீலக் கல் காமத்தின் வண்ணம். இழைகள் கற்பனையை நாவலுக்குள் எங்கெங்கோ அழைத்துச்செல்கிறது.
புலரிமழையின்
நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல்
குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து
விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும்.
நீர்ப்பரப்புகள் புல்லரித்து அலைமறந்திருக்கும். புலரி மழை விண்ணின் கை என
நீண்டு மண்ணின் தலைகோதும் பரிவு. இதழ்களிலிருந்து நேரடியாக செவிக்குச்
செல்லும் ஒரு சொல்.
என்று
தொடங்கும் முதல் அத்யாயம் துவங்கி பாமா தேடுவது மிக மிக தனித்துவமான
பிரிதொன்றில்லாத நீல வண்ணத்தை. அது கண்ணன் வசமன்றி வேறு எவரிடம் உண்டு?
எழு அடிகளாக பாமா கண்ணனை நெருங்குகையில் முன்னெழுந்து வரும் ஒவ்வொரு அன்னையரும் என்னை அம்பையின் நினைவுக்கு அழைத்து சென்றார்கள்.
அம்பையின் விதி ஒவ்வொரு தேவதையும் அவளை விட்டு விலகும்போதே அத் தேவதைகளை அவள் அறிகிறாள்.
ஹச்தினாபுரியின் அரசியாக பானுமதி. இந்தரப்பிரஸ்த அரசியாக திரௌபதி, துவாரகை அரசியாக பாமா. வில்லின் நாண்
இறுகிக்கொண்டே செல்கிறது.
துவாரகை மட்டும் எத்தனை எத்தனை விதமாக பூத்து வருகிறது.
திருஷ்டியத்தும்ணன்
பார்வையில், குந்தி வசம் கிருஷ்ணனின் சொல்லாக திட்டமாக விரியும் துவாரகை,
சாத்யகி பார்வையில், என துவாரகை நகரின் வித வித காட்சிகள் காலத்தால் முன்
பின்னாக பகுக்கப்பட்டு வசீகரமாக முன்வைக்கப்படுகிறது.
பாமையின் துவாரகைதான் அனைத்திலும் சிகரம்.
காலைமழை
பெய்யும்போது மட்டும் முழுமையாகவே இவ்வுலகிலிருந்து அகன்று விழிவிரித்து
உடல் மெய்ப்புகொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது மலர் உதிர்ந்தாலும் அவள்
உடல் அதிர்ந்தது. நூறுமுறை பெயர்சொல்லி அழைத்தாலும் அவள் அறியவில்லை.
என்ற
வரிகளுடன் அனைத்தும் முழுமை கொண்டு விடுகிறது. மழை நீலம், கடல் நீலம்,
வான்தோய் வாயில், நீல வண்ணக் கண்ணன் என அனைத்தும் ஒரு வரிசையில் நின்று
முழுமைகொண்டு விடுகிறது.
பாமாவின் வாழ்க்கைத் தருணங்கள் எல்லாம்.கனவில் தோய வைக்கும் அத்யாயங்கள்.
அனைத்துக்கும் வெளியில் நிற்கிறான், ராதையில் துவங்கி ராதையில் ஒடுங்கும் கண்ணன். இந்திர நீல வண்ணக் கண்ணன்.
கடலூர் சீனு