Sunday, June 7, 2015

மலையின் பரு



இனிய ஜெயம்,

சில தினங்கள் முன்பு, தோழி சங்கீதா ஸ்ரீராம் திருவண்ணா மலையில்,  அவர் குடிவந்திருக்கும் இல்லத்துக்கு என்னை அழைத்திருந்தார்.  அதிகாலை  அருணை மலை நோக்கிய வீடு. மொட்டை மாடியில் நின்றிருந்தேன்.  முந்தய நாள்  மாலை தொட்டு தொடர்ந்த அடர்மழை சாரலாகக் கனிந்திருந்தது. நளிர் கருங் கொண்டல்கள் போர்த்திக் குளிர்ந்து கிடந்தது அதிகாலை.

போர்த்திய கருமை மெல்ல மெல்ல வெளிர்கருமை என மாற ,  மௌனப் பேருருவம் கொண்டு கண் நிறைத்து விரிந்து பூத்தது கரும்பச்சை வண்ண அருணை.

'க்கோவ் ' பச்சை இருளுக்குள் எங்கோ ஒரு  மயிலின் அகவல். இல்லை கேவல்.   அதுவும் இல்லை விம்மல்.  'வா'  அவ்வளவுதான்  ஒரே ஒரு சொல். ஒரே ஒரு விம்மல்.  குளிர் துளி ஒன்று என் நாசி நுனியில் விழுந்தது.   இனிமை மட்டுமே தர இயன்ற துக்கம் ஒன்று என் வளை தாக்கியது.

போய் விட வேண்டும். எங்காவது.  குறைந்த பட்சம் இங்கிருந்து. எனது காமம் அதிகாலைகளால் ஆனது. காமம் என்பதென்ன அழியாப் பெருந்தனிமை.

  [மாறாக  அதிகாலைகள்  காமத்தால் ஆனவன் மனையாள் மகிழும் சிறந்த குடும்பஸ்தன் ஆகக் கூடும்].  

இன்று இந்த மயிலும் ,  அதிகாலைக் குயிலின்  முதல் கூவலும்  இயம்புவதென்ன ,     அந்த அழியாப் பெருந்தனிமையின் கேவல் தானே.

இன்று அதிகாலை ஊர் திரும்பியதும்  ஓடிச் சென்று தளத்தை திறந்து  காண்டவம் இரண்டாம் பகுதியில் வாசிப்பைத் தொடங்கினேன்.  ரத்னாஷன் சொல்லில்  என் உணர்வுகளுக்கு முகம் கண்டேன்.

மகாபலன், மகாபலை, திரியை, என  அவர்களை ஆட்டிவைக்கும் பெரும் தீ. அவர்களின் மைந்தர்களாகப் பொலிகிறது. [திரியை தான் பெற்ற மைந்தர்களுக்கு ஏன் மரணத்தின் பெயரை இட்டாள்?]  அந்த நெருப்புகளை உண்டு செறிக்கும் ஊழிப் பெருந்தீ . அது என்ன?  சிற்றரவங்களை உண்டு வளரும் ராஜ நாகம் போல, அங்கு செயல்படுவது என்ன நியதி?

இந்த நியதிகள் கூடிய மகா நியதி என்ன?  தன்னைத் தான் நோக்கி புன்னகைக்கும் குழந்தையின் முகம் கொண்ட அது என்ன?

மின்சார வெட்டு  காண்டவத்தின்  அடுத்தடுத்த  அத்யாத்தை இப்போதுதான் வாசித்தேன்.  பாம்புகளை உண்ணும் ராஜ நாகத்தின் பின் இலங்கும் நியதியைத்தான் சங்கியன் பாடுகிறான். குயிலாக . மீனாக, பாம்புகளாக  தோற்றமமாறு கொண்டு அடைவதெல்லாம் ஒன்றே. காமம் குரோதம் வஞ்சினம் என்ற பிரபஞ்ச இயக்க ஆதி விசையே.

திரியை குரோதவசை எனும் அன்னையாக வணங்கப் படுகிறாள். அவளுக்கு நாகங்கள் பலி இடப் படுகிறது. இந்தக் கதையை சொல்லும் சூதர்கள். நாகங்களை வணங்கி கதை சொல்லத் தொடங்குகிறார்கள். அவர்கள் வணங்கும் ஒன்பது நாகங்களில் ஒன்று திருதா.

கபிலர் தந்த சாங்கியத்தின் சாரம் தமோ,ரஜோ,சத்வ ஆற்றல்கள் கூடி முயங்கும் ஆதி அன்னை நாகங்களால் ஆனது.  நாகர் வம்ச  திருதுராஷ்டிர குலத்து ஆருனி கைகளில் திரியையின் எலும்புகள் கிடைக்கிறது.  முடியாத வஞ்சம், நிறையாத குரோதம் எஞ்சி நிற்கிறது.

பரினாமர் குரலில்  பிரபஞ்ச அடிப்படை மூவாற்றல் துவங்கி, நாகர் குலம் அடிப்படையில் இரண்டாக பிரிந்து, ஐந்தாக வளர்ந்து , கபிலர் கண்ட மெய்ம்மை தொட்டு,[கபிலரைத் தொடர முடியாத கோவு ,அவனது சொல்லப்படாத துக்கம் ஒரு தனி கதை] ஐந்குலங்களின் பன்னிரு நிகர் போர் வரை  நாகர் குலத்தின் மொத்த அரசியல், ஆத்மீக, கலாச்சார  பரிணாம வளர்ச்சியே சொல்லப்பட்டு விடுகிறது.

இந்தப் பரிணாம கதி கண்டடைந்தே 

‘உடையோரே, உற்ற்றோரே, இனி போரில்லை. இனி எவ்வுயிரும் இதன்பொருட்டு மடியலாகாது’ என நந்தவாசுகி அறிவித்தார். ‘முதல்போர் என்றும் அறத்திற்காக. இரண்டாம்போர் வஞ்சத்துக்காக. மூன்றாம்போர் அச்சத்துக்காக. நான்காம்போர் விழைவுக்காக. ஐந்தாம் போர் ஆணவத்துக்காக. ஆறாம் போர் வெறும் பிடிநிலை மட்டுமே. நாமோ ஈராறு முறை போரிட்டு விட்டோம். இப்போர் இன்று ஒரு வெற்றுச்சடங்கு. அறத்துக்காக மடிவது மேன்மை. வஞ்சத்துக்காக மடிவது இயல்பு. அச்சத்துக்கும் விழைவுக்கும் ஆணவத்துக்குமென மடிவது கீழ்மை. பிடிநிலைகொண்டு மடிவது மடமை. போதும் இப்போர்’

சூதன் உரைக்கும் அழியாச் சொல்.

இந்த அழியாச்சொல் உரைக்கப்படுவது திரௌபதி முன்.  ஆனால் திரௌபதியாக இங்கு வந்தவள் திரியை.

காண்டவம், இந்திரன் காதலி.  காமத்தை உண்டு செறிக்கும் குரோதம் எனும் பெரும் தீ . இந்த ஆறு அத்யாயம் மட்டுமே தன்னளவில்  முழுமையானதொரு குறுநாவல்.  நான் இதை காண்டவம் நாவலுக்கான பீடிகை என்றே சொல்வேன்..

ஆம் இந்த ஆறு அத்யாங்களும் கபிலன் கையில் கண்ட மணல்  பரு. மலை ஒன்றின் பகுதி.



கடலூர் சீனு