இந்திரநீலம், மழைப்பாடலை நீலத்தின் சந்ததுடன் கேட்பது போல் உள்ளது.
ஒவ்வொருமுறை நீலக்கடம்பு வரும்போதும் அங்கே ராதயே தெரிகிறாள். யமுனைக் கரையில் அனைத்தும் அழகு...எளிமையான யாதவப்பெண்களின் வாழ்க்கை..வெண்முரசு, உவமைகளுக்கான அகராதி.
நீலம் நாவலில், "இம்மெல்லிதழ் அடுக்கை எத்தனைமுறை பயின்று செய்ததோ மலர்களின் தெய்வம்" என்ற வரி.. இதற்கு நிகரானதென்று இதனைச் சொல்லுவேன்.
“பெண்களிலும் மலர்களிலும் அழகின்மை என்பதில்லை. மலர்மையை, பெண்மையை அழகென யாத்தவன் அதில் வகைமையை மட்டுமே சமைத்தான்.”
இவ்வரிகளுக்கு மேல் என்ன சொல்லிவிட முடியும்.வேடிக்கை என்னவெனில், இதிலிருந்து தான் தொடங்குகிறது வர்ணனைகளின் முடிவிலி..
மீண்டும் மீண்டும் இதனைச் சொல்லியாக வேண்டும். வெண்முரசின் பாத்திரப் படைப்புகள்..அவர்களை நீங்கள் செதுக்கிய விதமே செவ்வியல் என்பது. அவர்கள் வரும் காலக்கட்டதில் அவர்களே உச்சமென எண்ண வைக்கின்றது. (Characters Redefined).
பெண்கள்..மானஸாதேவியிலிருந்து பாமாவரை....அனைவரும் அன்னையரே.
பாமா, அவளின் தன்மையில், திரௌபதிக்கு மேலே சென்றுவிட்டாள்.
சப்த கன்னியர் ,பாமாவுடனான உரையாடல் ஒரு கிளாசிக்.(அம்பை படகி
ல் வருகையில், வந்த தேவதைகள் சுவர்ணை, சோபை, விருஷ்டி நினைவில் வந்தனர்.)
ஒவ்வொரு அடிக்கும், கண்ணன் பாதம் தொடங்கி அவளின் பார்வை மேலே செல்வது, ஒரு தரிசனம் தான்.
எது எல்லையற்றதோ , எங்கும் வியாபித்திருக்கிறதோ அது நீலம்.
அவனது எல்லையற்ற அரவணைக்கும் தன்மையாலேயே அவன் நீலன்.
“அவன் மறைந்த பின் எஞ்சும் விழிநீர்”..
எனது விழிநீர் நிற்கும்வரை இவ்வரிகளிலேயே அமைந்தேன்.
காட்டுக்குள் பயணிக்கும்போது, இருக்க வேண்டிய விழிப்புணர்வுடனேயே வாசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் குறியீடுகள், கொஞ்சம் கவனம் சிதறியால், நமக்கு முன் உள்ளதைக் கூட கவனிக்கத் தவறுவோம்.அது போன்ற தருணத்தில் "வெண்முரசு விவாதங்கள்" உறுதுணை.
இத்தனை கதாப்பாத்திரங்களுடன் மெய்நிகர் வாழ்வு..இருப்பினும், "பெரும்புகழ் பார்த்தன்..வில்லேந்திய இந்திரன்"..எப்போது வருவான் என்ற ஏக்கம் ஒருபக்கம்..
"செயலின்மையின் இனிய மது" என்று ஒருவருக்கு கூறிய பதிலில் இவ்வாறு கூறியிருந்தீர்கள்.
“இன்று நான் உறுதியாக ஒன்றைச் சொல்வேன், நவீனத்தமிழிலக்கியத்தின் மிகச்சிறந்த ஒரு சில நடைகளில் ஒன்று என்னுடையது. புதுமைப்பித்தனிடமன்றி எவரிடமும் அவ்வகையில் என்னை ஒப்பிடமுடியாது. என்னுடைய தமிழை நான் எங்கும் கொண்டுசெல்லமுடியும் கொற்றவை , விஷ்ணுபுரம் போல செவ்வியலுக்குள். அல்லது காடு, ஏழாம் உலகம்போல வட்டாரவழக்குக்குள்.”
அதையும் விஞ்சி, வெண்முரசு நடை..
பெருமையாக இருக்கிறது.
.
அன்புடன்,
மகேஷ் (காங்கோ).