Sunday, June 7, 2015

பெருங்கதையின் சிறுகதை



அன்புள்ள ஜெ வணக்கம்.

சினம் அதற்கு எதிர்ப்பதம் கருணை.  சினம் அழிவிற்கு வித்திடுகின்றது. கருணை வளர்ச்சிக்கு வித்திடுகின்றது. அழியாத வளர்ச்சியும், வளராத அழிவும் வாழ்க்கையாகுமா? ஒன்றை ஒன்றைத்தின்று ஒன்றாக மாற முயற்சி செய்கின்றது வாழ்க்கை. உலகமே ஒன்றாக மாறுவதற்குத்தான் பாதி பாதியாக பிரிந்து கிடக்கிறது. பாதி என்பது ஒரு பிரிவு விழும் இடத்தில் தோன்றுகின்றது. கபிலர் எடுத்து சேர்க்கும் மண்துகள்போல, முழுதாகும் தருணத்தில் அது மற்றொன்றின் பாதியாகவே இருக்கிறது. கருணையும், சினமும் சேர்ந்தால்தான் முழுமை. மதனை எரித்தவன்தான், எமனை உதைத்தவன். பிறப்பில்லாதபோது இறப்பில்லை. காளியை ஜெயித்தவன்தான், காமாட்சியை தொழுதவன். கோபித்துக்கொண்டு போனவளை கூட்டிக்கொண்டுவராமல் குடும்பம் இல்லை, நடனம்  இல்லை. 

சினம் எப்போதும் கீழிருந்து மேலே செல்லா முயற்சி செய்கிறது, கருணை எப்போதும் மேலிருந்து கீழே வரமுயற்சி செய்கின்றது. மேல் இருப்பவர்கள் இடம் இருந்து கீழே இருப்பவர்கள் இடம் வருவதுதான் கருணை. கீழே இருப்பவர்கள் இடம் இருந்து மேலே இருப்பவர்கள் இடம் செல்வதுதான் சினம். இந்த இரண்டும் உலகை சமன் செய்ய, முழுமையாக்க நடக்கின்றது. இதில் எது சரி, எது தவறு என்று கோடு கிழித்தால் அவைகள் இருக்கும் இடத்தைக் கொண்டுதான் அவைகளை தீர்மானிக்கமுடியும். மேல் கீழ் என்ற பா’குபாடு வரும்போது எல்லாம் சினமும், கருணையும் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

அனலை இந்திரன் வெல்வதும், இந்திரனை அக்கினி வெல்ல நினைப்பதும் சமநிலை அடையும் தருணத்தில் தெய்வநிலை வாய்க்கின்றது. அனல் மட்டுமே இருக்கும் இடத்தில் உயிர் உற்பத்தி இல்லை, உயிர் உற்பத்தி மட்டும் இருக்கும் இடத்தில் ஒளியே இல்லை. இந்திரவில்லை ஆதித்தன் அம்புகள் அழிக்கிறது. அனலின் உயிரை இந்திரன் வில்லின் மழையம்புகள் அழிக்கிறது. இது ஓயாத போர் என்றாலும், போர் மட்டும் வாழ்க்கை யாகிவிடுமா?

போரில் வென்றவனும் தோற்றவனே ஆகின்றான் என்பதுதான் எத்தனை பெரிய நிஜம். அக்கினியால் உயிர்கள் வெந்து சாகின்றன என்றால், மழையால் உயிர்கள் அழுகி சாகின்றன. மழையால் கொசுத்தொல்லை என்றால், வெயிலால் ஈக்கள் தொல்லை. நீயா நானா? என்று இரண்டும் போரிட்டுக்கொண்டே இருக்கிறது. போரில் வென்றவனும் தோற்றவனே! என்ற இடத்தில் வந்து இரண்டும் முட்டி நின்று முழுமைக்கொள்கின்றன. இறைவனின் நடனமும், புன்னகையும் அங்கு பொருள் பொதிந்ததாகிவிடுகின்றது.

//‘முதல்போர் என்றும் அறத்திற்காக. இரண்டாம்போர் வஞ்சத்துக்காக. மூன்றாம்போர் அச்சத்துக்காக. நான்காம்போர் விழைவுக்காக. ஐந்தாம் போர் ஆணவத்துக்காக. ஆறாம் போர் வெறும் பிடிநிலை மட்டுமே. நாமோ ஈராறு முறை போரிட்டு விட்டோம். இப்போர் இன்று ஒரு வெற்றுச்சடங்கு. அறத்துக்காக மடிவது மேன்மை. வஞ்சத்துக்காக மடிவது இயல்பு. அச்சத்துக்கும் விழைவுக்கும் ஆணவத்துக்குமென மடிவது கீழ்மை. பிடிநிலைகொண்டு மடிவது மடமை//

மகாபாரதம் எழுதப்படுவற்கு முன்பிருந்து, எழுதப்பட்டப்பின்பும் இந்த நீதியைத்தான் மகாபாரதம் புலம்பிக்கொண்டே இருக்கிறது.
நீதி சொல்பவன் எல்லாம் மண்ணில் பித்தன். பித்தனின் தரிசனம் கிடைக்காமல் இந்த நீதிக்கு பொருள்விளங்குவதில்லை, விளங்கினாலும் மயக்கம் தெளிவதில்லை. மறைபேசும் அந்த இறைவன்தான் மயக்கத்தையும் உண்டாக்கி வைத்து உள்ளான்.

திரௌபதிக்கு சொல்லப்பட்டக்கதை எல்லாம் அவள் வாழ்க்கைப் பயணத்தின் அறமணிப்பாதைகள்தான். பாதைகளில் பயணிக்கும்போது அந்த அந்த கணத்தில் உண்டாகும் அதிர்வுகள் அறத்தை சிந்திவிடவே செய்கின்றது. அறம்மணிகள் சிந்திவிட வெறும் நூல்கள் மட்டும்தான் கால்சிக்கி நடக்க வைக்கின்றன. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வதுதான் எத்தனை எளிது. பாண்டவர், கௌரவர் மொத்த வாழ்க்கையையும் காண்டவத்தில் குவித்து வைத்துவிட்டீர்கள் ஜே.

காண்டவம் என்ற பெரும்நூல்  இன்று ஒரு சிறுகதையாகி நிற்கிறது ஆனால் கனக்கிறது.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.