Thursday, June 25, 2015

காந்தியும் தருமனும்



ரகுராமன்,

மிகச்செறிவான உரை. ஒரு காவியத்தில் பாத்திரப்படைப்பு குறித்து எழுதுவது எளிதான செயல் அல்ல. அதுவும் பள்ளியில் இந்தியை ஆரம்பப்பாடமாக எடுத்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கான சுவடே கட்டுரையில் தெரியவில்லை என்பதே உண்மை (சில எழுத்துப் பிழைகளைத் தவிர). பாத்திரப்படைப்பை ஒன்றன்பின் ஒன்றாக செறிவான முறையில் அடுக்கி ஒரு சிறந்த வாசிப்பை முன்வைத்திருக்கிறீர்கள். குறிப்பாக கம்சனையும் ராதையையும் வைத்து நீலம் எழுதப்பட்டதை பழுக்கக் காய்ச்சிப் பிறகு தண்ணீரை ஊற்றுவதற்கு நீங்கள் ஒப்பிட்டிருந்தது மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் பாத்திரப்படைப்பில் விடுபட்டிருப்பதாக‌ நான் நினைப்பவற்றைக் கீழே தொகுத்திருக்கிறேன். இவை குறித்து உங்கள் கருத்துக்களை அறிய விழைகிறேன்.

1. கிருஷ்ணனை ஒரு பொருளாதார நிபுணராகக் காட்டிய பகுதி மிகச்சில சொற்களில் முடிந்துவிடுகிறது. உண்மையில் அவன் முன்வைப்பது ஒரு மாற்றுப் பொருளாதார முறையை. அதாவது ஷத்ரிய அரசுகள் வணிகத்தைக் கட்டுப்படுத்துவது மூலமாகவே பொருளீட்டமுடியும் என்று எண்ணும்போது கிருஷ்ணன் சுதந்திர வணிகத்தை முன்வைக்கிறான். உலகெங்கிலுமிருந்து வணிகர்களை அழைக்கிறான். அவனுடைய பெருவாயிலே அவர்களை வரவேற்கும் வாயிலாக அமைகிறது. இது ஷத்ரிய அரசர்கள் அறியாதது. வெண்முகில் நகரத்தில் சாத்யகியிடம் கருணர் வியப்புடன் அதெப்படி சுங்கத்தைக் குறைத்து அரசக் கருவூலத்தை நிறைக்கமுடியும் என்கிறார். ஷத்ரிய அரசுகள் அறியாத பொருளாதார முறை அது. மேற்கிலும் பலகாலத்திற்கு ஷத்ரிய முறையே நடைமுறையாக‌ இருந்தது. ஆடம் ஸ்மித்துக்குப் பிறகே சுதந்திர வணிகம் பெருமளவு நடைமுறைக்கு வந்த்தாகப் படித்திருக்கிறேன். சுருக்கமாக, ஷத்ரிய அரசுகளின் மாற்றாகக் கிருஷ்ணன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது பொருளாதார முறைகளாலேயே. அதனால்தான் இன்றுவரை குஜராத் பேரளவு வணிக சமூகமாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கு என்னோடு படிக்கும் குஜராத்தி நண்பர்கள் பெரும்பாலோர் startup தொடங்குவதையே உத்தேசிக்கிறார்கள். "இன்னொருவருக்குக் கீழ் ஏன் வேலை செய்யவேண்டும்?" என்று பேசிய நண்பர்களில் பலர் குஜராத்திகள் என்பதைப் பின்னரே அறிந்தேன். கிருஷ்ணனின் இந்த முகம் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

2. கிருஷ்ணன் தொழில்நுட்பத்தைக் கையாள்வது குறித்த விவாதம் நிகழவே இல்லை. உண்மையில் கிருஷ்ணனின் சுவாரசியமான முகம் அதில் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். ஒவ்வோரிடத்திலும் அங்கிருக்கும் materials, resources-ஐப் பயன்படுத்தியே அங்கு தேவைப்படும் அனைத்தையும் செய்யமுடியும் என்று கிருஷ்ணன் காட்டுகிறான். சகுனியிடம் பாலைநிலத்திலேயே உள்ள பாறைவெளியைப் பயன்படுத்தி கோட்டை கட்டுவது குறித்து பேசுவது அதையே காட்டுகிறது. துவாரகையில் காற்றை மட்டும் பயன்படுத்தியே மானுட உழைப்பைக் குறைக்கிறான். குறைந்த செலவில் கட்டுமானங்கள் அனைத்தையும் உருவாக்குகிறான். அண்மைய உதாரணம் இந்திரநீலத்தில் நெம்புகோல்களைப் படகுகளோடு பிணைத்து, காற்று வீசும்போது படகுகள் பாய்விரிப்பதால் பாறை பிளப்பதை பாமா காண்பது. கிருஷ்ணனின் சித்த‌ரிப்பில் இது ஒரு முக்கியமான பகுதி என்றே நினைக்கிறேன்.

3. அடுத்ததாக காந்தி குறித்து. இது கிருஷ்ணனின் பாத்திரப்படைப்பு குறித்ததல்ல என்றாலும் இந்த Topic விவாதத்தில் இருந்ததால் இது குறித்தும் பதிவுசெய்ய விரும்புகிறேன். காந்தி கிருஷ்ண வழிபாட்டை சிலாகித்தவர் அல்ல. ஆனாலும் அவர் வாழ்வு கிருஷ்ணனின் வாழ்வை ஒட்டியே இருப்பதாகத் தோன்றுகிறது.

ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய "காந்தி" படத்தில் ஒரு காட்சி: சுயராஜ்யம் வேண்டும் என்று தலைவர்கள் பலர் உணர்ச்சிகரமாகப் பேசி அமர்ந்தபிறகு காந்தியைப் பேச அழைப்பார்கள். கூட்டம் பெரும்பாலும் எழுந்துபோகத் தொடங்கியிருக்கும் (இந்த மாவையேதான் இந்த ஆளும் அரைக்கப்போகிறான் என்பதுபோல). அவர் எழுந்துவந்து "இந்தியா என்பது டெல்லியிலும் பாம்பேயிலும் இருக்கும் 100 வக்கீல்கள் அல்ல. இந்தியா என்பது 7லட்சம் கிராமங்கள். அங்கு வாழும் மக்களுக்கு நாம் பேசும் எந்த சொற்களும் ஒரு பொருட்டே அல்ல. காங்கிரஸ் அவர்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும். அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தாதவரை ஆங்கில நாளேடுகளின் சில வரிகள் நம்மைப் பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர நாம் எதையும் அடையப்போவதில்லை" என்று பேசுவார். எழுந்து சென்ற கூட்டம் அனைத்தும் திரும்ப வந்து உட்கார்ந்துகொள்ளும். சம்பரன் போராட்டத்திற்கான‌ தொடக்கப்புள்ளியாக அந்தப்பேச்சு அமைவதாகப் படத்தில் காட்டப்படும். இந்திரநீலம் 10இல் நிகழும் காட்சியோடு இதை ஒப்பிடலாம். சத்தன்வாவோடு யாதவர்கள் அனைவரும் "எங்களைப் பணயம் வைக்கிறீர்கள். இந்தத் தற்கொலை முடிவை நாங்கள் ஏற்கவில்லை. இது தற்கொலை கூட அல்ல, கொலை" என்று கத்தும்போது கிருஷ்ணன் எழுந்துவருகிறான். சாம்பன் "வெண்ணை உண்டு புல்லாங்குழல் இசைத்தால் கம்சன் உயிர்துறப்பான்" என்று கிண்டலடிக்கிறான். காந்தி பேச்சுக்குமுன் கூட்டம் எழுந்துபோவத்ற்கு நிகரான காட்சி. அப்போது கிருஷ்ணன் பேசும் சொற்கள் யாதவர்கள் மனநிலையை முழுவதுமாக மாற்றுகிறது. ஒரு யுகபுருஷனின் உருவாக்கம் நிகழும் காட்சிகள்.

காந்தி தன் வாழ்வில் நிகழ்த்திய அனைத்தும் கிருஷ்ணனின் சாதனைகளோடு ஒப்பிடத்தக்கவை. காந்தி சிதறிக்கிடந்த இந்திய சமூகத்தை ஒன்றாக்கினார். மாற்றுப் பொருளியல் முறை மூலமாகக் கோடானுகோடி மக்களை வறுமையிலிருந்து வெளிக்கொணர்ந்தார். தேங்கிக்கிடந்த சமூகத்தை நவீன ஜனநாயக சமூகமாக மாற்றினார். முப்பதாண்டுகாலம் இந்தியாவில் அரசியல் பகடை அவராலேயே கட்டுப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் கிருஷ்ணனின் வரலாற்றோடு அல்லவா பொருந்திப்போகின்றன? ராமர் இவை எவற்றையுமே செய்தவர் அல்லவே! அவர் சாதனை என்பது போர்முறைகள் சார்ந்தவை அல்லவா? மேலும் கிருஷ்ண வழிபாட்டை காந்தி முன்வைக்கவில்லையென்றாலும் கீதையை முன்வைத்தார். கர்மயோகியாகவே வாழ்ந்தார். காந்தியின் செயல்கள் பேரளவும் கிருஷ்ணனுடைய செயல்களோடே ஒப்பிடத்தக்கவை என்பது என் கருத்து. காந்தியைக் குறித்துப் பேசும்போது இவற்றைப் பேசியிருந்தால் இன்னும் பொருத்தமானதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இவை குறித்து நண்பர்களின் கருத்தையும் அறிய விழைகிறேன்

திருமூலநாதன்