Thursday, June 18, 2015

நிகர்நிற்பவள்

ஆசிரியருக்கு ,

மதிப்பு மிக்க நண்பர்களிடம் நமக்கு நட்பு உருவாகிறதா அல்லது இயைந்து போகும் நண்பர்களிடம்  நட்பு உருவாகுகிறதா என்பது அதந்த ஆளுமையை பொறுத்தது. சுய கர்வமும், விட்டுக் கொடுக்காத உறுதியும் ஒருவரை  மதிப்பு மிக்கவராக்குகிறது,  மேலும் அவரை இன்றியமையாத உறவுக்குரியவராக்குகிறது.    

பாமை அனேகாமாக நீங்கள் படைத்த பெண்களிலேயே  மிக உயர்ந்தவள். நாகம்மை முதல் "பெரியம்மாவின் சொற்கள்" வரை நீங்கள் விரித்துக் காட்டிய பெண்ணின் 'சுயம்' ஜொலித்து  திளங்குபவள் சத்திய பாமை. 

மணம்  கைகூடி வராது  போகும் சூழல் உருவாகும் அந்த உச்ச கணத்திலும்  சஞ்சலமின்றி  நிற்கிறாள், மறு முனையில் கிருஷ்ணனும் அவ்வாறே. இருவரும் ஒரு இழு கயிற்றின் இருபுறமும் நிற்கின்றனர், இத்தகைய நிகர் நிற்கும் பாமை தான் உண்மையில் காதலுக்குரியவள், மாறாக தத்தளிப்பவளோ பணிபவளளோ அல்ல.

இறுதியில் அங்கதர்களை விலக்கி பாமையை ஏற்கும் இந்த திரள் ஒரு அற்புதமான சமூக  நடத்தை வெளிப்பாடு. பெரும்பாலான சமயங்களில் ஒரு  சராசரியின் திறனும் நடத்தையும் கொண்டிருக்கும் இந்த திரள் அபூர்வமான சந்தர்பங்களில் ஒரு தனி மனிதன் நினைத்துப் பார்க்காத திறனுடனும், நீதி உணர்வுடனும் எழுந்து நிற்கும். தனி மனித உச்சத்தை ஒரு ஜன பதம் விஞ்சும் , இன்று நிகழ்ந்தது அத்தகையது.  பூரிக்க வைக்கும் பகுதி.

கிருஷ்ணன்.