அன்னை
சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜபெருமானை வணங்கிவிட்டு வீட்டுக்குவரும்போது
மேலசன்னதி மணிவாசகர் நூலகத்தில் முருகன் துதிமலர்கள் நூல் ஒன்று
வாங்கினேன் அதில் இருந்த
திருப்புகழ்.
அண்டர்பதி
குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மனமகிழ்மீற....அருளாலே
அந்தரியொடு
உடனாடு சங்கரனும் மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும்........மகிழ்வாக
மண்டலமும் முநிவோரும் எண்திசையில் உளபேரும்
மஞ்சினனும் அயனாரும்....எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன் ஆடி......வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை அறிவாள ...உயர்தோளா
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரையிகல்சாடு
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரையிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு...வடிவேலா
தண்தரள
மணிமார்ப செம்பொன் எழில் செறிரூப
தண்தமிழின் மிகுநேய....முருகேசா
சந்தமும்
அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு...பெருமாளே.
அதில் இருந்த குறிப்பு-முருகன்
அருளால் தேவர்கள் அமராவதி நகரத்தை அடைந்ததுபோல, இந்த திருப்புகழ் ஓதும் அடியவர்கள்
சொந்த வீடு வாய்க்கப்பெருவார்கள்.
நம்பினார்
கெடுவதில்லை. தேவர்களுக்கு அமராவதிநகரம் கிடைத்ததுபோல், பாண்டவருக்கு
இந்திரபிரதஸ்தம் கிடைத்தபோல் நம்பியவர்களுக்கும் நண்பர்களுக்கும் நல்லவீடு
கிடைக்க முருகன் அருளட்டும்.
உண்ண
உணவு,
உடுக்க உடை, இருக்க இடம் தாண்டி அப்பால் இருக்கும் பெரும் ஞானம் முன்
உணவு, உடை,
இடம் எல்லாம் ஒன்றும் இல்லைதான். ஆனால் இந்த சிறியதுகள் பெரிதாக
இருக்கும்வரை பெரும்
ஞானம் சிறிதினும் சிறிதாககூட இல்லாமல் இருக்கும்படி வாழ்வில் போராட்டத்தை
வைத்து, அந்த போராட்டத்தின் நடுவில் ஞானம் சுடர்விடும் தருணம் தரும்
எந்தன் ஞானசுடர்வேலன் வாழ்க!
அன்புள்ள
ஜெ, இந்த திருப்புகழைப்பாடும்போது எல்லாம் ஒரு காட்சி மனம் நெகிழ்ந்து நிற்கும். ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக என்பதுதான் அது. இந்த
திருப்புகழில் இந்த இடத்தில் ஏன் மனம் வண்ணம் கொள்கின்றது என்று பலநாள் எண்ணியது உண்டு.
காளியுடன்
நடனம் செய்யும் நடராஜர் மகிழ்கின்றார், உலகத்தவரும்,
முநிவர்களும் மகிழ்கின்றார்கள், இந்திரனும், பிர்மனும் மகிழ்கின்றார்கள். மகாலட்சுமியுடன்
திருமாலும் மகிழ்கின்றார். இதில் எல்லாம் ஒருவிதத்தில் நடமுறை பொருத்தத்தில் உள்ளது.
ஐங்கரனும்
உமையாளும் சேர்ந்து மகிழ்கின்றார்கள் என்னும் இடத்தில் ஒரு மின்மினி. அது என்ன? என்?
அம்மா,
அம்மாவிற்கும் அருகில் மகன் நிற்கின்றான், மயில்மீது வரும் தம்பியைப்பார்த்து மகிழ்கின்றான்,
அவ்வளவுதான். ஆனால் மனம் இந்த காட்சியின் சுடர்நடுவேகிடந்து சுழல்கின்றது. எப்போதும் அப்பாவின் பக்கத்தில் நிற்கும் மகனும்,
எப்போதும் அப்பாவுடன் இருக்கும் அம்மையும் பிரிந்து ஒரு புது கூட்டணியில் சேர்ந்து நிற்கும் ஒரு அழகு, சிலிர்ப்பு.
இரும்பெரும் தலைமுறை தூர எல்லைகள் இணைந்து மகிழ்கின்றார்கள் என்பதா அது? ஏன் ஐங்கரனையும்,
உமையாளையும் சேர்த்து வைத்தார். அம்மாவை வைத்துதானே பிள்ளையை வைக்கவேண்டும், இங்கு
பிள்ளையை வைத்து அம்மாவை வைக்கின்றாரே, பிள்ளையாரை முன்னால் வைப்பது நெறி என்றால் அந்தரிக்கும்,
நடராஜருக்கும் முன்னால் அல்லவா ஐங்கரனை வைக்கவேண்டும்,
முதல்வரி அந்தரி, இரண்டாம்வரி ஐங்கரன் விடுவியா என்கிறது மனம்?. இந்த மனம்தான் அது
ஏன் என்றும் கனவுகாணச்சொன்னது.
பொதுவாக
அருணகிரிநாதர் சுவாமிகள் அப்பனைப்பாடிவிட்டு அம்மையைப்பாடுவார் அல்லது அண்ணனைப்பாடிவிட்டு
தங்கையைப்பாடுவார். இதில் அன்னைக்கு மகனை காவல்வைத்ததுபோல் உள்ளது. ஐங்கரன் என்பது
பிரணவ வடிவம். உமா என்பதும் பிரணவம். சக்தி பிரணவம் என்பார்கள். பிரணவத்தின் பக்கதில்
பிரணவத்தை வைத்த ஒரு அழகு. பிரணவம் அ-வில் தொடங்குவதால் அது படைப்பின் சக்தி. சக்தி
பிரணவம் உ-வில் தொடங்குவதால் அது காக்கும் சக்தி. (நான் ஒரு ஏட்டுச்சுரக்காய்கூட அல்ல
துண்டுக்காகித சுண்டக்காய்.)
இந்திரநீலம்
தொடக்கத்திற்கு வருகின்றேன். கர்ணிகைக்கு அவள்
தந்தை தந்த மந்திரம் ஹம் என்பது. அவளுக்கு நாரதர் தந்தது ஸ்ரீம் என்கிற மந்திரம். முன்னது
அருவக்கடவுளை உபாசிப்பது. எல்லாம் வெறுமை. ஸ்ரீம் என்கின்ற மந்திரம் உருவக்கடவுளை,
உருவங்களை படைக்கும் அன்னையை உபாசிப்பது. முன்னது ஞானமார்க்கம் தேடுபவர்கள் கைக்கொள்ளவது.
பின்னது பக்தி மார்க்கம் தேடுபவர்கள் கைக்கொள்வது. ஞானவழியோ, பக்தி வழியோ குருவன்றி
கரையில்லை என்பதைக்காட்ட நாரதர் வந்து தந்தையையும், மகளையும் கரையேற்றுகின்றார்.
ஹம்
என்னும் மந்திரம் சுட்டுவது ஐங்கரனை, ஸ்ரீம் என்கின்ற மந்திரம் சுட்டுவது அன்னை பாராசக்தியை.
ஹம்-ஸ்ரீம் என்பதை நீங்கள் வைத்த அழகைப்பார்த்ததும் அந்த திருப்புகழின் வரி ஐங்கரனும்
உமையாளும் மகிழ்வாக என்பதுதான் சூக்குமவடிவம் இணைந்து நின்று இன்புறும் இன்பம் அளிக்கின்றது.
(ஹம்,
ஸ்ரீம் மந்திரத்தை இந்த அத்தியாயத்தில் நீங்கள் கொண்டுவந்த அழகை விளக்கி ஒரு பத்து
பக்கம் எழுதினால்கூட நன்றாக இருக்கும் அல்லது நீங்கள் எழுதிய இந்திரநீலத்தை இன்னும்
தெளிவாக படித்துபுரிந்துக்கொள்ள ஞானம் வேண்டும்)
ஹம்
மந்திரத்தை உச்சரிக்கும் கர்ணிகை தன்னை முதியவளாக எண்ணிக்கொள்கின்றாள் என்னும் இடத்தில்
ஓளவையின் ஞாபகம் வந்தது. பிள்ளையாரை வணங்கி ஓளவை பாட்டியாகிவிட்டாள் என்து இதுதானா?
ஆதியை உபாசிக்கும் யாரும் தன்னை ஆதி என்றே எண்ணி மூத்துவிடுகின்றார்கள். நாளைக்கும்
கன்னியாக இருக்கும் அன்னையை வணங்குகின்றவர்கள் முன்னே ஆயிரம்கோடி ஆண்டு சென்று இருந்தாலும்
பின்னும் கன்னிதானோ? சிருங்காரம் தன்னை வந்து அணைந்ததற்கோ அது தன்னை பிரிந்ததற்கோ அவைகள் வருந்துவதே
இல்லை. ஹம் ஒருவித தனிமையை காட்டுகின்றது என்றால், ஸ்ரீம் வேறு ஒருவகை தனிமையை காட்டுகின்றது. முன்னது
எப்போதும் வெண்மை. வண்ணம் என்பதையே அறியாத வெண்மை. பின்னது தன்னை நித்தம் வண்ணமாகி நித்தம் கழுவிக்கொள்ளும் வெண்மை.
நான்காவது
நூல்நீலத்தில் வரும் இந்த அற்புதமான வரிகள், ஏழுவாது நூல்
இந்திரநீலுத்தில் முன்பின்னாக முகம்காட்டி அழகு செய்வதை நினைக்கையில்
இன்பம்.
//விண்சுருங்கி
அணுவாகும் பெருவெளியை வெறும்சிறகால் பறந்துசெல்ல ஆணையிட்டான் ஆணிடம்.
சென்றடைந்தோரெல்லாம் கண்டது கடுவெளியே அதுவாகி எழுந்து நின்ற கழலிணைகளை
மட்டுமே. பெண்களுக்கோ பெற்றெடுத்து முலைசேர்த்தால் மட்டுமே போதுமென்று
வைத்தான் பாதகன்! அப்பிழையாலே அவன் தானும் ஆணாகப் பிறக்கவேண்டுமென்றானான்//
ஞானமார்க்கத்தில்
செல்பவன் கனவை நிஜமென்று அறிகின்றான். பக்திமார்க்கத்தில் செல்பவன் நிஜத்தை கனவென்று
உணர்கின்றான். ஞானமார்க்கத்தில் செல்லும் குணிக்கரை புணரும் ஸ்வப்பனை அதுவாகவே அவரைவிட்டு
ஓடுகின்றது. பக்தியில் செல்லும் கர்ணிகையை புணரும் சிருங்காவானும் அவனாகவே ஓடுகின்றான்.
ஞானம் கனவுகளை துறக்கும் நாளில் பிரம்மம் அடைகிறது. பக்தி சிருங்காரத்தை இழுக்கும்
நாளில் பிரமத்தை அடைகிறது.
குணிக்கரில்
இயற்கை வந்து சொட்டிச்சொட்டி குவிகிறது. கர்ணிகை தன்னையே, தனது உடலையே இயற்கையில் கரைக்கிறாள். இரும்பெரும் பாதையின் இருபெரும்
தனிமை. ஒன்று சும்மா இருப்பது, மற்றொன்று சும்மா இருப்பதற்காக பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் என விரிந்து பரவுவது.
நன்றி
அன்புடன்
ராமராஜன்
மாணிக்கவேல்.