Tuesday, June 16, 2015

பாலையின் கடல்

ஆசிரியருக்கு ,

பெரும் களிப்பில்   இக்கடிதத்தை எழுதுகிறேன்.  ஒரு அழகிய விழிக் காட்சி  நமக்கு அளிக்கும் அனுபவத்தை விடப் பெரிது  ஒரு புது அறிதல் , அதனினும் பெரிது ஒரு புது உணர்தல். இன்றைய  வான்தோய் வாயில் – 4  அத்தகையது. 

காண்டவம் கைவிடப்பட்டது , ஒரு கடும் உள  நெருக்கடியில் நீங்கள் இருந்தது ஆகியவை பேராற்றலுடன் இந்திரநீலத்தில் எழுந்துள்ளது.      

வானின் நீலத்தையும், கடலின் நீலத்தையும் இன்று தான் உண்மையில் கிருஷ்ணனுடன் பொருத்திகொள்கிறேன். பெருந்துயரின் எல்லையிலும் பேருவகையின் எல்லையிலும் நாம் அடைவது ஒரு வெறுமை (a blank state of mind) அதை இன்று  பாமை அடைகிறாள். இது போன்ற கூரிய அவதானிப்புகளாலும்  விவரிப்புகளாலும் நிறைந்தது இன் நாவல்  வரிசை , இச்சுவை அறிந்தே நீடித்த போதையில் ஒவ்வொரு நாளும் இதைப் படிக்கறோம். 

கடலை நான் முதல் முதல் பார்த்து அஞ்சிய அனுபவத்தை இன்று நான் உணர்கிறேன். எப்படி இருந்தாலும் எதனுடனும் ஒப்பிட இயலாதது கடல், அதைப் பார்க்கும் முதல் அனுபவம் ஒரு பிரம்மாண்டமான வாழ்வனுபவம். கடலும் துவரகையும் இணைந்த விவரிப்பு ஒரு உயர் கவிதை. மெல்ல மெல்ல அது பாமையின் சித்தமாவது ஒரு ஆன்மீக அனுபவம்.    

நம் வாழ்வின் அதி முக்கிய சந்தர்பங்களில் பல சமையம் நம் மனம் விருட்டென்று அறிந்ததை நிறைக்க ஒரு கணம் தாமதமாக பிரக்ஞை பூர்வமாக உடல் வந்து சேரும், மிக  அபூர்வமான நிகழ்வுகளில்  நம் உடல் அறிந்து சேர்ந்ததை நிரப்ப ஒரு கணம் தாமதமாக மனம் வந்து சேரும். இன்று பாமையின் அனுபவம் அது தான். வந்தமரும் கிருஷ்ணப் பருந்து இதன் உருவகமாக திகழ்வது படைப்புச்சம்.  இத்தகைய அறிதல்காளால்தான் வெண் முரசு ஒரு பெரும் காவியமாகிறது. 

இன்று சத்ராஜித் உணர்வது வெண் முரசில்  தட்சகன் முதல் பலவேறு கிளைக் கதைகளில்  சொல்லப் பட்ட தந்தை-மகள் உறவு. இது வெண் முரசின் மய்ய வடத்தின் ஒரு சரடு. 

கிருஷ்ணன்.