Friday, June 26, 2015

திருவாழி மார்பன்

அன்புள்ள ஜெ,

சியமந்தக மணியின் ஒவ்வொரு பட்டையின் ஒளி போல கிருஷ்ணனின் பல பரிமாணங்களை துலக்கமாக காட்டி வருகிறது வெண்முரசு. இன்று பாமாவும் கிருஷ்ணனும் சந்திக்கும் அந்தத் தருணம்... அடடா என்ன ஒரு திருக்காட்சி...

கிருஷ்ணனை அனைவருமே ஒரு மீமானுடனாகத் தான் பார்க்கிறார்கள், அவனைப் பெற்றவர்கள், வளர்த்தவர்கள், அவனுடன் உறைபவர்கள் உட்பட. அப்பேற்பட்டவனை மணக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணும் அவனை ரசிப்பதிலும், வணங்குவதிலும் மட்டுமேயன்றோ கவனம் செலுத்துவார்கள். அப்படியென்றால் அவனின் தனிமை தான் எத்தன்மையது!!! அத்தனிமையை நீக்கப் போகும் ஒரு துணையன்றோ அவன் தேவை. அத்துணை எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும்? பாமா போல் தான் இருக்க வேண்டும். 

அழுத்தமாகத் தன் காதலை உணர்த்தி, அவனுடன் நேருக்கு நேர் நின்று, எத்தருணத்திலும் அவனை அணைத்துச் செல்லுவேன் என்ற உறுதியை அவனுக்களித்து, அவனை மகனாகவும் சீராட்டி, அவனை வெல்லவும் கூடும் ஒரு துணையாக அவள் வருகிறாள். இன்று முதன் முறையாக பாமா கிருஷ்ணனை கண்ணோடு கண் நோக்கி புன்னகைக்கிறாள். அதுவரை எவராலும் யோசிக்கக் கூடிய எளிய ஒரு காட்சியாகத் தான் இருக்கிறது. அதன் பிறகு நீங்கள் எழுதிய விதம் தான் வெண்முரசின் சிறந்த காட்சிகளுள் ஒன்றாக, என்றும் என் நினைவில் ஓவியமாக இருக்கப் போகும் ஒன்றாக அதை மாற்றுகிறது.

இத்தருணம் வரையிலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. அவன் உள்ளத்தில் இவளும், இவள் உள்ளத்தில் அவளும் இருப்பதாக உரைத்ததில்லை. இருவருமே பிரிய நேர்ந்த தருணத்திலும் உணர்ச்சியை வெளிக்காட்டவில்லை. புணர்ச்சி பழகாமல் உணர்ச்சியால் கட்டுண்டவர்கள் அவர்கள். 

பாமா இன்னும் அழுத்தம். தன் இருப்பையே தனக்கான அரணாகக் கொண்டு சிசுபாலன் முன் செல்லும் அளவுக்கு அழுத்தம். அப்படிப்பட்டவள் முதன் முறையாக தன் கொழுநனை, தனக்குரியவனை கண்ணோடு கண் நோக்குகிறாள். எத்தருணத்தையும் புன்னகையால் கையாளுபவனை நோக்கி புன்னகைக்கிறாள். ஒரு கணம், ஒரே கணம், ஒரு கணமேயென்றாலும் கூட அம்மாயவன், பீலி விழி தாழ நாணி தலைகுனிகிறான். அவன் உள்ளம் உணர்ந்த அக்காதல் அவளுடையதன்றோ!!! அவன் தான் எத்தனை கொடுத்து வைத்தவன்!!!

மிகச்சரியாகத் தான் அவன் சொல்கிறான், இம்மணியை ஏற்பேன் என்றால் என் மார்பில் வாழும் திருமகளுக்கு இணையாக இன்னொன்றை நான் வைக்கிறேன் என்று அர்த்தம், எனவே அதை நான் ஏற்கேன் என்று... ஆம் அவன் திருவாழி மார்பனன்றோ. அது அவளுக்குரியதன்றோ!!!

இனி திருப்பதிசாரம் சென்றால் இக்காட்சி தான் என் முன் வந்து நிற்கப் போகிறது. அவனை, அத்திருவாழி மார்பனை பார்த்து புன்னகைக்கப் போகிறேன், அடேய்... நீ உணர்ந்த காதலை, உன் உள்ளக் குளிர்வை, உன் உவகையை நானும் அறிந்திருக்கிறேனடா என்று!!! 

வாசக நண்பர்களுக்கு, திருவாழி மார்பன் என்ற பெயர் குமரி மாவட்டத்தில் சாதாரணமான ஒரு பெயர். அது திருப்பதிசாரம் என்ற இடத்தில் கோவில் கொண்ட பெருமாளின் பெயர். இன்று அப்பெயரின் தரிசனத்தைக் கண்ட போது கண்கள் நிறைந்து, நெஞ்சமும் நிறைந்தது... நன்றி ஜெ!!!!

நிறைவுடன்,
மகராஜன் அருணாச்சலம்.