அன்பு ஜெயமோகன்,
விசுவமித்திரரின் கதையைக் கொண்டிருந்த இரண்டாவது அத்தியாயம்
அவரைப் பற்றி மேலதிகமாய் அறிந்துகொள்ளத் தூண்டியது. மேனகையின் அழகில்
மயங்கியவராகப் பொதுப்புத்தியில் இடம்பெற்றிருக்கும் அவருக்கு திருநெல்வேலி
மாவட்டம் கூடங்குளத்துக்கு அருகே உள்ள விஜயாபதி எனும் இடத்தில் தனியாக ஒரு கோவிலே
இருக்கிறது. விசுவம் என்றால் உலகம். சிவனைக்கூட விசுவநாதன் எனச் சொல்வர். அச்சொல்லுக்கு
உலகின் தலைவன் என்பது பொருள். மித்திரன் என்றால் நண்பன். எனில், விசுவாமித்திரன்
எனும் சொல்லை உலகின் நண்பன் எனப்புரிந்து கொள்ளலாம். இறைவனுக்குப் போட்டியாக
திரிசங்கு சொர்க்கத்தை அமைத்தவர். அதனாலேயே தன் சக்தியை அவர் இழந்ததாகப்
புராணங்கள் சொல்கின்றன. இழந்த தன் சக்தியை மீட்கும் பொருட்டு அவர் வந்து தங்கிய
இடமே இன்றைய விஜயாபதி என்பது மக்களின் நம்பிக்கை. அக்காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த
பகுதியாக விஜயாபதி இருந்தது. சிதம்பரத்தில்(அக்காலத்திய சிதம்பரத்தின் பெயர்
தில்லைவனம்) இருந்து மகாகாளியைப் போன்றே இங்கும் ஒரு சிலையை விசுவாமித்திரர்
நிறுவியதாகவும் சொல்கின்றனர்.
ரிக வேதத்தில் இடம்பெற்றிருக்கும் காயத்ரி மந்திரத்தினை
இயற்றியவராக விசுவாமித்திரர் சொல்லப்படுகிறார். கீதையில் கிருஷ்ணன் “மந்திரங்களில்
நான் காயத்ரியாக இருக்கிறேன்” எனும் சொல்லுமளவுக்குப் புகழ்பெற்றது அது. அக
இருளை நீக்கும் ஞான ஒளியை வேண்டி நிற்கும் கவிப்பாடல் அது. இன்றோ நாம் அதைப்
புனிதப்படுத்தியதோடு உலகியல் வாழ்வின் போகங்களை நல்கும் மந்திரமாக
நிலைநிறுத்தியும் விட்டோம். அந்தோ பரிதாபம்!
காயத்ரி என்பது குறிப்பிட்ட ஒலி அளவைக் குறிப்பது. அவ்வொலி
அளவில் அமைந்த மந்திரம் என்பதனாலேயே அதற்கு காயத்ரி மந்திரம் எனப்பெயர். சூரியனை
வாழ்த்தும் பாடல் என்றும் பொதுவாக இதைச் சொல்கின்றனர். ஆனால், எங்கும்
நிறைந்திருக்கும் ஒளியை வாழ்த்திப் பாடுவதாக இதைக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்
என நினைக்கிறேன். “இகநிலைப் பொருளாய் பரநிலைப் பொருளாய் / அகமறப் பொருந்திய அருட்பெருஞ்சோதி”
எனும் வள்ளலாரின் அகவல் வரிகொண்டு அம்மந்திரந்தின் பொருளை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.
சமஸ்கிருதத்தில், தமிழில் எப்படி அமைந்திருப்பினும் அப்பாடலின் ஒலியும், பொருளுமே
முக்கியமானவை. இன்றோ சமயத்தளத்தில் ஒற்றைமொழியை ம்ட்டுமே பக்திக்குரியதாக
வலியுறுத்தும் அவல நிலைக்கு வந்திருப்பதாகப் படுகிறது.
காயத்ரி மந்திரத்தை அல்லது அருட்பெருஞ்சோதி அகவலைத்
தொடர்ந்து சொல்பவர்களுக்கு அளப்பரிய பலன்கிட்டும் எனச் சொல்லிச்சொல்லியே அவற்றைப்
பாடுவதைச் சடங்காக்கி வைத்திருக்கிறோம். எவ்வித உணர்வும் அற்று சடங்கள் போல
அப்பாடல்களை நாம் தொடர்ந்து பாராயணம் செய்வதில் எவ்விதப் பயனும் இல்லை. அப்பாடலின்
பொருளை உள்வாங்கி உணர்வுடன் அதை வாழ்வுக்குக் கொண்டு வருவதற்கே அவை உதவுகின்றன. எனக்குத்
தெரிய ஒருவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காயத்ரி மந்திரத்தைச்
சொல்லிக்கொண்டிருகிறார். ஒருநாளில் ஒருமுறைகூட அம்மந்திரத்தைச் சொல்லும்போது அவர்
முகத்தில் நான் மகிழ்ச்சியைப் பார்த்த்தில்லை. மாறாக, இறுக்கத்தையே பார்த்தேன்.
எப்பேர்ப்பட்ட அபத்த நிலை? அவற்றின் ஒலியையும், பொருளையும்(உணர்வையும்) பாவித்துப்
பாடும்போது உள்ளுக்கும் நிகழும் மாற்றங்களால் நம் உடலும், மனமும் தங்களைப்
புதுப்பித்துக் கொள்ளும். அப்புதுப்பித்தல் நம் முகத்தையும், அகத்தையும் ஒளிரச்
செய்யும். அதுவே சமயம் முன்வைக்கும் எப்போதும் திகட்டாத பரவசம், காரணமற்ற
ஆனந்தம்.
முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்.