Sunday, June 7, 2015

கண்ணன் உடல் 2



ஜெ

இந்திரநீலத்தில் இன்றைய அத்தியாயத்தை வாசித்து முடிக்க சாயங்காலம் ஆகிவிட்டது. இரண்டாயிரம் வார்த்திகள்தான் உள்ளன. ஆனால் வரிவரியாக வாசிக்கவேண்டியிருந்தது. ஒரு நீளமான கவிதைபோல இருந்தது. நுணுக்கமான பெண் உடல் வர்ணனை. இத்தகைய நூலிலே மரபான வர்ணனைகளைத்தான் பயன்படுத்தமுடியும். ஆனால் அவை புதியவையாகவும் இருந்தாகவேண்டும். இல்லாவிட்டால் சம்பிரதாயமாக ஆகிவிடும். ஒரு உச்சநிலையிலே அது சாத்தியப்பட்டிருக்கிறது.

பெண்ணின் மூக்குவளைவின் அந்த கோட்டைச் சொல்வதற்கான உவமை, வாழையின் வளைவில் நீர்த்துளி வளைந்து இறங்குவது, அதை நேரில் பார்க்காதவர்களுக்கு புரியவே புரியாது. வாழையிலையின் நடுவளைவாக cleavage ஐ சொல்லும் இடமும் அப்படித்தான்.

அப்போதுதான் தோன்றியது, பெண்ணழகை ரசிக்கவேண்டுமென்றால் முதலில் இயற்கையை அறிந்திருக்கவேண்டும். இந்த ஒரு அத்தியாயத்திலே பெண்ணைவிட இயற்கையைத்தான் அதிகம் சொல்லியிருக்கிறீர்கள் என்று தோன்றியது.

 குழைநிழல் நீண்டு விழுந்து விழுந்தசையும் பொதுப்பு. 
சுருள்குழல் நிழலாடும் மென்பரப்பு.

என்று சொல்லும் சொல்லாட்சியிலேயே அழகை உருவாக்கும் வரிகள். ஆனால்

செம்பட்டில் காந்தள். 
செம்பில் கத்தரிப்பூ. 
வெண்பளிங்கில் கருங்குவளை.

என்று சொல்லப்படுவது என்ன என்று ஊகிக்க ஒரு ரசனை தேவை. கூடவே இயற்கையைப்பற்றிய ஒரு அவதானிப்பும். நீங்கள் எழுதியதிலேயே வாசகனை நம்பி எழுதப்பட்ட முதன்மையான அத்தியாயம் இதுதான்

சாரங்கன்


அன்புள்ள சாரங்கன்

எழுதும்போது நிகழ்ந்தவை. சொல்வது என்பதன்றி சொல்லத்தவிப்பது என்றே அந்த மொழி உள்ளது என இப்போது படுகிறது

பெண்ணழகு என்றல்ல எந்த அழகையும் இன்னொரு அழகை வைத்தே சொல்லமுடியும்

எல்லா அழகையும் மையமான ஒரே அழகைக்கொண்டு சொல்லிவிடமுயன்ற இடம் இது

 நீலமணிநிறமும் கார்குழலமர்ந்த பீலியும் நீள்விழிகளும் செவ்விதழ்களும் ஏந்திய நீங்காச் சிரிப்புமாக குழலிசைத்து நின்றிருக்கும் அழியா இளமை அது

ஜெ