இனிய ஜெயம்,
முதல் அத்யாய கர்ணிகையை ஆதி அன்னை எனக் கொண்டால், மேனகை கருப்பைக்குள் உறைவது ஆதி அன்னைகள் கொண்ட விழைவு.
“உன்
கருவறைக்குள் குடிகொள்ளும் அன்னைப்பெருந்தெய்வங்களை வணங்குக! அவர்கள்
அறியா சொல் இல்லை. அவர்கள் காணாத வழியும் இல்லை. அவர்கள் பிறப்பித்த
உயிர்க்குலங்களின் அனைத்து நலன்களாலும் வாழ்த்தப்பட்டிருக்கிறது அவர்கள்
கொண்ட பெருங்காமம்”
அன்னைத் தெய்வங்களை கருவறை என்று ஏந்தி வந்த மோகினி. காமரூபிணி இந்த மேனகை.
திருஷ்டத்யும்னன் விழைவது அந்த மேனகையை .
வந்தவளோ சுஃப்ரை. ஏற்க்கனவே போரில், ஆசிரியர் முன்பு, என முற்றிலும் தோற்றவனாக அறைக்குள் முடங்கிக் கிடக்கிறான் திருஷ்டத்யும்னன் . சுஃப்ரை மிக சரியாக [அல்லது தவறாக] அவனது தோல்வியில் இருந்து உரையாடலை துவங்குகிறாள்.
கண்
சுடர்ந்து இதழ் கனன்று முலைமுனைகொண்டு இடையொசிந்து மதம் சொட்டி காமம்
கொள்ளும் பெண்ணில் எழுகிறாள் காலக்கனல் கொண்டு இப்புடவி சமைத்த குலமகள்.”
இந்த வார்த்தைக்கு நிகராக சுஃப்ரை நிற்கும்போது , திருஷ்டத்யும்னன் அவளை பரத்தை என்கிறான்.
விஸ்வாமித்திரன் சொன்ன அதே சொல்.
அதன் பின் வருவதெல்லாம் மிக ஆழமான உளவியல் ஆட்டங்கள். அவனால் அவளை ஒருபோதும் வெல்லவும் முடியாது, கொல்லவும் முடியாது.
இதே இடரில் திரௌபதி வசம் மன அளவில் சிக்கிக் கிடப்பவன் தான் கர்ணனும்.
சயணன் சுப்ரையை நாடு கடத்தியது முக்கிய தருணம்.
இல்லையேல் திருஷ்டத்யும்னன் மீட்சியே இன்றி சரிந்திருப்பான்.
கடலூர் சீனு