Saturday, June 20, 2015

வண்ணக்கடல் சொற்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

வண்ணக்கடல் முடிந்துவிட்டது. இதை ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் படித்து திருத்தித் தந்தார். நான் மேற்பார்வை இட்டேன். 
கீழே உள்ள தமிழ்ச்சொற்களுக்கு விளக்கம் வேண்டும். நான் விளக்கம் எழுதியவற்றையும் சரி பரத்துவிடுங்கள்.

அன்புடன், 
பிரசன்னா



வண்ணக்கடல் தமிழ்ச்சொற்கள்


கல்அளை -  அளை என்றால் வளை, பொந்து
அறுவை -  துணி
தெள்ளு - சிறிய பூச்சி, தெளிந்தது என்னும் பொருள் உண்டு
கானீனமைந்தன் - முறையாக மணக்காமல் பிறக்கும் மைந்தர்களை பலவகையாகப்பிரித்து அங்கீகரிக்கிறது மகாபாரதம். அதில் ஒரு வகை மைந்தன்.  இவ்விவாதம் மழைப்பாடலில் வருகிறது
கணிகாணுதல் - ஒரு பொருளில் காலையில் கண்விழித்தல், காணிக்கைப் பொருளை பார்த்தர்
முதுநுளவர் - நுளவர் பரதவரில் ஒரு பிரிவு
பிழுது - பிடுங்கி
அளியது - பரிதாபத்திற்குரியது
ஃபாங்கம் - அபின் இலைகளை அரைத்து எடுக்கப்படும் ஒருவகை மது
ரஸ்மி - கதிர்
கைவிடுபடைப்பொறி - தானியங்கிப்பொறி
பாண்டரங்கம் - ஒருவகை கூத்து.  தாண்டவம்.சிவன் ஆடுவது.

பிடியானை - பெண்யானை
கறங்குபுள் - ஒலிக்கும் சிறிய பறவை
கலுழ்ந்து - அழுது, கலங்கி
கபிலநிறம் - பழுப்பு நிறம்
செம்போத்து - கருப்பும் பழுப்பும் கலந்த குயில்வரிசைப் பறவை
நாகணவாய் - மைனாப் பறவை
காஞ்சனம் - பொன். இங்கே ஒரு மணியின் பெயர்.
மகாமரியாதம் - பெரிய கோட்டை
மந்தணம் - ரகசியம், அந்தரங்கம்
மதலை - குழந்தை
கோட்டல் - கொள்ளுதல், வளைத்துக்கொள்ளுதல்
அம்பி - தோணி, தெப்பம், மரக்கலம்
ஓங்கில் - டால்பின்
வள்ளம் - சிறிய நீரூர்தி
பண்டி - வயிறு
உகிர் - பறவை விலங்குகளின் கால் நகம்
முனம்பு - இயற்கையாக உருக்கொண்ட முனை, நிலம், 
கவை - ஒரு வகை மரக்கொம்பு
நிலவாய் - வாய் குறுகலான பெரிய பாத்திரம்
இற்செறிப்பு - பருவம் வந்த பெண்கள் மணமாகும்வரை வீட்டுக்குள்ளேயே இருப்பது
மதங்ககர்ப்பம் - யானை கர்ப்பம்
மஞ்சல் - துணியால் ஆன பல்லக்கு. தூளிப்பல்லக்கு
பிலம் - பாதாளம், தானாக மண்ணுக்கு அடியில் உருவாகும் குகை
சுளுந்து - தீப்பந்தம் செய்யப் பயன்படும் ஒருவித மரம், சுள்ளி
அமரமுகப்பு - படகின் குவிந்தமுனை முகப்பு
சமித்து - வேள்வியில் அர்ப்பிக்கப்படும் விறகு
ஆதுரம் - மருத்துவம்
அத்திரி - கோவேறு கழுதை
ஜனபதம் - மக்கள்வாழும் நிலப்பகுதி. சிறிய சமூகக்கட்டமைப்பு. ஆரியவர்த்தம் 16 ஜனபதங்களாக வேதகாலத்தில் 
பிரிக்கப்பட்டிருந்தது. 
மங்கலை - மங்கலமான பெண்
வெய்யநீர் - சுடு நீர்
ஊழ்கம் - தியானம்
பீதர்கள் - மஞ்சள்நிறமானவர். சீனர்கள். திபெத் லடாக் பகுதியினர்
நாவாய் - மரக்கப்பல்
வினைவலர் - வேலையாள்கள், சேவகர்
ஒளித்துமி - ஒளியின் மிகச்சிறிய துளி
தேறல் - கள்
ஸ்ருதி, சுருதி - மூலநூல். தத்துவத்தைச் சொல்லக்கூடியது. வேதங்கள், உபநிடதங்கள்.
ஸ்மிருதி - ஒழுக்கச்சட்டங்களைச் சொல்லக்கூடியது. மாறக்கூடிய நூல்.
விராட ரூபன் - பிரம்மாண்ட வடிவம் கொண்டவன்
சென்னி - தலை
அவி, அவிப்பொருள் - ஹவிஸ். வேள்வியில் அர்ப்பிக்கப்படும் உணவு.
அந்தரீயம் - கீழாடை; உடைமேல் கட்டும் மெல்லிய ஆடை
அழல் - தீயின் கதிர்
ஆற்றிடைக்குறை - ஆற்றுநடுவே உள்ள மணல்திட்டு
இமிழ் ஒலி - முழக்கமுள்ள ஒலி
இழிந்து - இறங்கிவழிந்து
இளிவரல் - ஏளனம், அங்கதம்
உத்தரீயம் - மேலாடை
உலைந்து - மெல்ல அசைந்து
உண்டாட்டு - உணவுண்டு மகிழும் விழா, போருக்குப்பின் நிகழும் பெரு விருந்து
ஊர்மன்று - ஊர் சாவடி
கவந்த - கபந்த
கரந்த - மறைந்த
கிணைப்பறை - கையால் வாசிக்கப்படும் சிறிய பறை
சகடம் - சக்கரம்
சிதர் - நுணுக்கமான சிதறல்கள், துருவல்கள்
சேடன் - ஆதிசேடன். நாகம்
தளகர்த்தர் - தளபதி
தலைக்கோல் - கலைக்குழுவில் முதலில் வருபவர் ஏந்தியிருக்கும் கோல். சூதரின் முதல்வன் வைத்திருக்கும் கோல்
தலைக்கோலி - கலைக்குழுவில் முதன்மையானவர். சூதரில் முதன்மையானவர்
தாலம் - தாம்பாளம்
துளித்து - துளியிட்டு
தேற்றைகள் - கோரைப்பற்கள்
நுகம் - மாடுகள், குதிரைகள் கட்டப்படும் வண்டியின் முகப்புத்தடி
நிமித்திகர் - புறக்குறிகளைக்கொண்டு வருவது உரைப்பவர்கள்
நீர்த்துமி - மெல்லிய துளி
பதிட்டை - பிரதிஷ்டை
பலாசம் - ஒரு மரம் [செம்முருக்கு], யாகத்துக்கான விறகாகப் பயன்படுபவது
பாணன் - பாடி அலையும் பாடகர். குலப்பாடகர்கள், வீரக்கதைப்பாடகர்கள்
பிறவிநூல் - ஜாதகம்
பிரஜாபதி - தன்னிலிருந்து படைப்பை உருவாக்கும் ஓர் ஆதி விசை அல்லது ஆதி இருப்பு
புடவி - பிரபஞ்சம்
பேருரு- விஸ்வரூபம், பிரம்மாண்டமான
மன்று - மன்றம்
வசு - ஒருவகைதேவர்கள். எட்டுபேர் என்பதனால் அஷ்டவசுக்கள். தர்மதேவனுக்கு வசு என்னும் மனைவியில் பிறந்தவர்கள்.
வனம்புகுதல் - வானப்பிரஸ்தம்
வாளி - அம்பு
விந்தியன் - விந்தியமலை
விழவு - விழா
விறலியர் - பாணனின் மனைவி. பாடி ஆடி கதைசொல்பவள்
வெண்கலை - வெள்ளை உடை, கலைமகள்
ஜாதகர்மம் - பிறப்புச் சடங்குகள்
அடுமனை - சமையலறை
அவை - சபை
அந்தரீயம் - கீழாடை
அக்காரம் - வெல்லம்
அரசுசூழ்தல் - ராஜதந்திர ஆலோசனை
அடைப்பக்காரன் - தாம்பூலம் அளிப்பவன்
அகம்படியினர் - அரசனின் பரிவாரங்கள்
அறைகூவல் - சவால்
இடைநாழி - திண்ணை
இன்நீர் - இனியநீர்
உந்தி - தொப்புள்
எந்தை - என் தந்தை
ஒருசாலை மாணாக்கன் - ஒரே இடத்தில் படித்த மாணவர்கள்
களபம் - மஞ்சள் அரைத்து உருவாக்கும் விழுது
கிருவி - ஒரு குலம்
குவை - குவியல்
கூறை - வண்ணம் இல்லாத புடவை
கொடுகொட்டி - துர்க்கை ஆடும் கூத்துக்களில் ஒன்று
கோரோசனை - மானிலிருந்து எடுக்கப்படும் நறுமணப்பொருள்
சத்ரம் - வெண்கொற்றக்குடை
சித்தம் - பிரக்ஞை
சிவமூலிகை - கஞ்சா
சேடியர் - வேலைக்காரப்பெண்கள்
தமோ குணம் - தேக்கம்
திருஷ்ணை - உலகச்செயல்களில் வரும் பற்று
நவகண்டம் - தன் கழுத்தை தானே வெட்டிச்சாகும் சுயபலி முறை
அதலம் - ஏழு அடியுலகங்களில் முதல், அடியற்ற வெளி
நீணாள் - நீண்டநாள்
பாங்கர் - அணுக்கத்தோழர்
புரை - சிறிய அறை
புலரி - விடியல்
முழவு, குறுமுழவு - கையால் மீட்டும் சிறிய பறை
ரஜோ குணம் - செயலூக்கம்
வயற்றாட்டி - குழந்தைப்பேறு பார்க்கும் மருத்துவச்சி