Sunday, June 28, 2015

காதலன்

அன்புள்ள ஜெ,

மீண்டும் இன்று கண்ணனின் காதல் பக்கத்தை அருமையாக வெளிப்படுத்தி விட்டீர்கள். பாமாவுக்கும் அவனுக்குமான முதல் ஊடல். அதைத் துவக்கிய விதம் இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் ஒன்று தானே!!! 

மிக இயல்பாக, அவளை மகிழ்வூட்டும் வகையில், அவளுக்காக தான் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவன் என்பதை உணர்த்தி, அவளை பெருமிதம் கொள்ளச் செய்வதற்காக கண்ணன் சொல்கிறான், "உன் வஞ்சினத்துக்காகவே நான் வந்தேன்" என்று. அந்தோ பரிதாபம்... இதுவரையிலும் பிழைத்திராத கிருஷ்ணனின் கணக்குகள், பாமாவின் முன் பரிதாபமாக பிழைக்கின்றன. அவளின் அனல் முன் கருணை வேண்டி  மண்டியிடுகிறான். அவளோ அடிபணிய வேண்டும் என்கிறாள். 

சற்றும் தாமதியாது, சிறியன சிந்தியாது மணிமுடி தாழ தாழ் பணிகிறான் அவன். இந்த பூரண சரணாகதி அவளை சாந்தப்படுத்துகிறது. ஆனால் அதைத் தொடர்ந்த மற்ற பெண்களின் பேச்சு மீண்டும் அவளை உசுப்பேற்றுகிறது... ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்... அவள் மனம் மகிழும் என்பதற்காக அவன் எதையும் மறைப்பதில்லை. என்னையறிந்த பெண்களை நானும் அறிவேன் என்றே சொல்கிறான். ஆனால் எந்த தடையும் இன்றி அவள் காலில் விழவும் செய்கிறான். 

இதே, தடையொன்றுமில்லாமல் தன்னை முழுதளிப்பதை நாம் நீலத்திலும் கண்டிருக்கிறோம். கலகாந்திரதையாக ராதை கொந்தளித்து அவள் கொல்ல அவனுடல் கேட்குமிடத்தில் அவன் இதே போன்று அவள் பாதங்களைச் சூடுகிறான். அவள் கொல்வதற்கென்றே ஒரு உடல் கொண்டு வந்ததாகச் சொல்கிறான். காவிய ஒருமை!!!

ஒரு ஆணாக எந்த தயக்கமும் இன்றி அவன் காலில் விழும் அந்தவிதத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. அவன் செய்வது சரி தான் என்பது புத்திக்குத் தெரிந்தாலும், எங்கோ ஏதோ என்னைத் தடுத்திருக்கும், தடுக்கிறது... அந்த தயக்கம் தான் இன்றளவிற்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருளும் பகடையோ!!!

இங்கே பெண்ணின் மற்றொரு கூறையும் காட்டிச் செல்கிறார் ஜெ. மஹதி முகம் சுழித்து பாமாவை கடிகிறாள். யார் கண்டது, இதே பாமா நாளை மற்றோரு ஆண் தன் துணை முன் பணிவதை கண்டிக்கலாம்!!ஆனால் தனக்கு என்று வரும் போது வேறு நியாயங்கள் தானே!!! இறுதியாக அவள் சொல்வது தான் உச்சம்.. "நான் ஒரு கணமும் ஊடியதில்லை தோழியரே! என் சிறு கைகளில் இருந்து இந்நீலமணி ஒவ்வொரு கணமும் வழுவுவதை நீர் அறிவீரோ?" என்று புலம்புகிறாள்... எதை விரும்புகிறாளோ அதையே உடைக்கவும் செய்கிறாள். இந்த இருமையை என்ன தான் அறிந்தாலும் புரிந்து கொள்ள இயலவில்லை. எங்கே, பெருங்காதலனான கண்ணனே கருணை வேண்டி இரக்கும் போது நானெல்லாம் எங்கே போவது?!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்