Saturday, June 27, 2015

மொழி


ருக்மணிக்கும் முன்னாலேயே பாமாவா, ஜாம்பவதியைக் காணவில்லையே என்றெல்லாம் எப்போதாவது சிந்தனை ஓடுவதுண்டு. ஆனால் இந்த சொற்களுக்கு முன்னால் எது நிற்க முடியும்?

// என் சொற்களை உரக்க அவைமுன் சொல். என் தந்தைக்குரியவள் நான். கன்யாசுல்கம் அளித்து கன்யாதானமாக என்னை பெற்றால் மட்டுமே நான் இளைய யாதவருக்குரியவள் ஆவேன். இதுநாள் வரை என்னை வளர்த்த என் தந்தையையும் குலத்தையும் உதறி வர என்னால் முடியாது.”
... “ஆனால், இப்பிறவியில் இனி ஒரு காலடியை நான் விழிகளால் நோக்கமாட்டேன். அதையும் இந்த அவையிலேயே சொல்லிவிடு //

// என் சொல் இப்போதே இங்கிருந்து இளைய யாதவரை அடைவதாக! இன்றிலிருந்து பதிநான்காம்நாள் முழுநிலவு. அன்று நிறையிரவுக்குள் சியமந்தக மணியுடனும் அதைக் கவர்ந்தவனுடனும் இளைய யாதவர் என் தந்தையை அணுகவேண்டும். அந்த மணியையே கன்யாசுல்கமாகக் கொடுத்து என் கைப்பிடிக்கவேண்டும். அதுவரை ஊணுறக்கம் ஒழிவேன். அதற்குள் அவர் வரவில்லை என்றால் உயிர் துறப்பேன். இது கன்றுகள் மேல் குலம் காக்கும் அன்னையர் மேல் ஆணை! //

// பதினான்கு நாட்கள் அதோ கடம்ப மரத்தடியில் ஊண் துறந்து உறக்கிழந்து அமர்ந்திருப்பவள் என் நெஞ்சு வாழ் நிலைமகள். இம்மணியை கொள்வேனென்றால் அவளுக்கு நிகரென ஒன்றை வைத்தவனாவேன். அறிக! இப்புவியும் இதன் மேல் கவிந்த அவ்விண்ணும் விண்ணாளும் தேவர்களும் தெய்வங்களும் எதுவொன்றும் எந்நெஞ்சில் அவளுக்கிணையென வாழ்வதில்லை. அவளுடன் கொள்ளத்தக்க ஒன்றை அப்பரம்பொருளும் படைத்ததில்லை. //

அருண்மொழியைப் பார்த்ததே இல்லை என்றாலும் இப்படித்தான் அவரிடம் உணர்ந்தீர்களோ என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன். உணர்ச்சியை வார்த்தைகளாக வெளிப்படுத்தும் திறமை உள்ளவர்கள் பாக்கியசாலிகள்!
 
சில சமயம் நீங்கள் எழுதவில்லை, சொற்கள் தாமாக எழுதிக் கொள்கின்றன என்றே தோன்றுகிறது.

சில வாரங்களில் சந்திப்போம்...

அன்புடன்
ஆர்வி