Friday, July 31, 2020

அஸ்தினபுரியும் துவாரகையும்


அன்புள்ள ஜெ 

நலம்தானே? நானும் நலமே. வெண்முரசு சார்ந்து நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் வாசிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். வாசிக்கிறீர்கள் என்பது அளிக்கும் நிறைவே போதும் என நினைக்கிறேன். 

களிற்றியானைநிரை நாவலில் அஸ்தினபுரி மீண்டெழுவதைப்பற்றி மீண்டும் சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆச்சரியமான விஷயம், களிற்றியானை நிரையில் அஸ்தினபுரி மீண்டு வருகிறது. கல்பொருசிறுநுரையில் துவாரகை அழிகிறது. எழுந்த நகரங்களுக்கு வீழ்ச்சியடையும் விருப்பமும் வீழ்ச்சியடைந்தவற்றுக்கு எழுந்துவரும் விருப்பமும் உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்

 

அ.சரவணன்


சொற்கள்


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் வெண்முரசு பயில ஆரம்பித்துள்ளேன். சில வார்த்தைகள் மிகக் கடினமாய் உள்னன. அத்தகைய சொற்களில் பலவற்றிற்கு Tamil Virtual  Academy இன் மின்நிகண்டிலும் பதம் கிடைப்பதில்லை. சில சொற்களை Google இல் இட்டுத் தேடினால், ஏதாவதொரு பழம்பாடலுக்கோ அல்லது உங்கள் தளத்திற்கோ தான் செல்கிறது. தமிழின் ஒரு மகத்தான படைப்பை எழுதியுள்ள ஒரு எழுத்தாளனிடம், அவற்றை எளிதில் பதம் பார்த்து படிப்பதற்கு ஒருவழியும் கேட்பது அபத்தம் எனப் புரிகிறது. இருந்தும் வேறு வழி தெரியாததால் கேட்கிறேன். பொறுத்தருள்க!

நன்றியுடன்,

அன்பன். 
சுந்தர மகாலிங்கம் 

அன்புள்ள சுந்தரமகாலிங்கம்

வெண்முரசின் சொற்கள் அந்த நூலின் கதைப்போக்கில் இயல்பாகப்புரிந்துகொள்ளப்படலாம். அச்சுநூல்களில் பின்னிணைப்பாக அகராதி உள்ளது. இணைய அகராதி ஒன்றை உருவாக்க எண்ணமுண்டு

ஜெ



கண்ணன்


அன்புள்ள ஜெ

இளைய யாதவரின் முடிவு இந்நாவலில் ஒரு இயல்பான நிகழ்ச்சியாக வந்துசெல்கிறது. நீங்கள் பேசும்போது உத்தம மரணங்கள் மூன்று என்றீர்கள்.யோகியரின் மரணம். போரில் மரணம். பெருந்தந்தையாக மரணம். மூன்றுமே அவனுக்கு வாய்க்கவில்லை. அவன் வேடனால் கொல்லப்பட்டான். அனாதையாக இறந்தான். அவன் கண்னெதிரே அவன் நாடும் மைந்தரும் அழிந்தனர்

அவன் தெய்வம். ஆகவே தெய்வநெறிக்கு அவனும் கட்டுப்பட்டவன். நீர்ச்சுடரில் நீர்க்கடன் கழிக்க வரும் கௌரவமகளிருக்கு முன் கைகூப்பி நின்று அத்தனை சாபங்களையும் அவன் பெற்றுக்கொள்கிறான். அவனால் அந்த நியாயத்தைக் கடந்துசெல்லவே முடியவில்லை. இப்பிறவியிலேயே கடன் அடைத்து விண்ணுக்கு மீள்கிறான்.

வந்தகாரியம் முடிந்து மீண்டும் செல்லும்போது ஒரு மெல்லிய தித்திப்பாக எஞ்சியிருப்பது ராதையின் பிரேமம் மட்டுமாகவே இருக்கும் என நினைக்கிறேன்

மாதவ்


வண்ணக்கடல் என்னும் பாரதம்


அன்புள்ள ஜெ

நலம்தானே?

வெண்முரசை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இனி தொடர்ச்சியாக வாசிப்பேன் என நினைக்கிறேன். இப்போது இளநாகனின் பயணத்தை வாசிக்கிறேன். அப்போதே ஒர் உரையாடலில் சொன்னீர்கள், மகாபாரதப்போர் முடிந்தபின் விரிவான திக்விஜயங்களைப்பற்றி எழுத முடியாது. ஆனால் நாவலில் பாரதநிலம் வரவேண்டும், ஆகவேதான் முன்னாடியே எழுதுகிறேன் என்று.

இந்நாவல்தொடர் முடிந்தபின்பு இளநாகனின் பயணங்களை வாசிக்கும்போது மகாபாரதக்கதை அங்கெல்லாம் எப்படியெல்லாம் வந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்தபடியே வாசிக்கமுடிகிறது. தான்யகடகம், விஜயபுரி போன்ற ஊர்களைப்பற்றி ஒரு பெரிய கனவை வண்ணக்கடல் அளிக்கிறது. 

வெண்முரசு நாவல்களில் மகாபாரதம் என்னும் காட்சி இருப்பது வண்ணக்கடலில்தான். அதை அன்றைக்கு வாசிக்கும்போது பாண்டவர்களின் வளர்ச்சி முதலிய கதைகளைச் சொல்வதற்கு நடுவே தேவையில்லாமல் இளநாகன் வருவதாக நினைத்தேன். இன்றைக்கு அந்தப்பகுதிகளெல்லாம் அப்படி ஓர் அழகுடன் இருப்பதாகத் தோன்றுகிறது

சரவணன் எஸ்


இமைக்கணம் தொட்டு


வெண்முரசின் சாராம்சமான பகுதி என நீலம் நாவலை ஒருவர் எழுதியிருந்தார். என் வாசிப்பில் இமைக்கணமே வெண்முரசின் சாராம்சமான பகுதி. அது ஒரு தனிநூல். அதற்கும் வெண்முரசுக்கும் நேரடி உறவு இல்லை. அதோடு ஒரு சுவராசியமான விஷயம், வெண்முரசு முடிந்தபின் அது இப்படி முடியாமல் இருந்திருந்தால் எப்படி முடிந்திருக்கும் என்று ஊகிக்கக்கூடிய இடங்கள் கொண்டது இமைக்கணம்

மகாபாரதத்தின் சாராம்சமே கீதைதான். அதுதான் ஐந்தாம்வேதம். அதை முன்வைக்கும் பகுதி இமைக்கணம். அதில் இறந்தவர்களெல்லாம் எழுந்து வருவதைக் காணலாம். அந்த உயிர்த்தெழுதலில் என்ன நடக்கிறது என்பது ஒரு பெரிய வாசிப்பனுபவம். மொத்த வெண்முரசும் நினைவில் எழுவது இமைக்கணம் வாசிக்கும்போதுதான்

கடைசியாக ஒன்று சொல்லவேண்டும். மகாபாரதக்கதையை இமைக்கணக்காட்டில் வைத்துத்தான் சூததேவர் சொல்கிறார். ஆகவே மகாபாரதத்தின் முன்னால் ஒலித்த வேதம்தான் கீதை என இமைக்கணம் நாவலில் உள்ளது. இமைக்கணம் வெண்முரசில் கடைசிநாவலாக அமைந்திருந்தாலும் பொருத்தமாக அமைந்திருக்கும்

செல்வக்குமார்


Thursday, July 30, 2020

ஷண்முகவேல் ஓவியங்கள்

அன்புள்ள ஜெ

வெண்முரசை வாசித்துமுடித்தபின் ஒட்டுமொத்தமாக நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து மனசுக்குள் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அத்தியாயங்கள் வந்துகொண்டிருந்தபோது சண்முகவேலின் ஓவியங்கள் முக்கியமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் இப்போது சண்முகவேலின் ஓவியங்களாகவே ஆரம்பநாவல்களை நினைவிலிருந்து எடுக்க முடிகிறது. அவர் இந்நாவலுக்கு அளித்த கொடை மிகப்பெரியது. அவருக்கு என் நன்றிகள்

ராஜேஷ்


வெண்முரசின் உடனடிபயன்

 

அன்புள்ள சார்,

வெண்முரசு முடியப்போகிறது என்ற பதட்டத்திலிருந்து, முடிந்தேவிட்டது என்னும் உண்மை புரிய சில நாட்கள் தேவைப்பட்டது. கப்பலின் நங்கூரம் தரையை தொடும்போது கடலின் ஆழம் தெரிவதுபோல, முடிந்தபின்னரே எவ்வளவு தூரம் உங்களுடன் ஓடி வந்திருக்கிறோம் என்பது மலைப்பாக இருக்கிறது. ஏழு வருடம் நீங்கள் முன்னால்  ஓட உங்களை ஒரு நாள் விடாமல் துரத்தி வந்த பெரும் வாசகர் படையும் இந்த  மாரத்தானில் சத்தம் இல்லாமல் பங்குபெற்று சாதனை புரிந்துள்ளது. 

சிவகாமியின் சபதம் தொடராக வந்த போது என் தந்தை அவற்றை பேப்பர் கட்டிங்காக எடுத்து வைத்ததையும் ஒரு இதழ் கூட தவறாமல் வாசித்ததையும் ஒருவித சாதனை புன்னகையோடு பகிர்த்துக்கொள்வார், ஆனால் அதை விட பல மடங்கு மகத்தான ஒரு படைப்பை ஏழு வருடம் பின்தொடர்ந்ததை, இப்போது உயிருடன் இருந்திருந்தால் அறிந்து மகிழ்ந்திருப்பார். போரும்  அமைதியும் வெளிவந்த காலத்திலேயே அதை வாசித்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பெரும் முயற்சிகளையும், சாதனைகளையும்  சமகாலத்திலேயே அறிந்து அவற்றை பின்தொடர்தல்  என்பதும் ஒரு வரம் தான், ஏனென்றால் அவை தலைமுறைதோறும் நிகழ்வதில்லை,  என் தந்தைக்கு சிவகாமியின் சபதம் மட்டுமே இருந்தது (இது வெண்முரசுவுடனான ஒப்பீடல்ல, என் தந்தையின் அதிகபட்ச சாதனை) அந்த நான்கு  புத்தகங்களையும் பள்ளி படிக்கும்போதே ஒரே வாரத்தில் படித்து முடித்தேன் ஆனால் என் மகளிடம் சொல்வதற்கு மிக பிரமாண்டமான ஓன்று உள்ளது அவள் தலைமுறையில் நிகழ வாய்ப்பற்ற ஓன்று. இனி அதை புத்தகங்களாக வாங்கி அவளுக்காக சேர்க்கவேண்டும்.

வெண்முரசு எனக்கு என்ன அளித்தது என்று என்னால் இன்னும் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை அது உள்ளேயே இருந்து முளைக்கும்போது தான் தெரியும் போலும். உடனடியாக தெரிவது இரண்டு விஷயங்கள். ஒன்றை மேலே கூறிவிட்டேன். பைபிளில் வரும் இயேசுவின் மகத்தான போதனைகளில் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஓன்று உண்டு "தீர்ப்பிடாதீர்கள்". 
திட்டவட்டமாக எழுதப்பட்ட பத்து கட்டளைகளை கொண்ட ஒரு சமூகத்தில் அதை மீண்டும் முன்வைக்கும் இயேசு, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை "நானும் தீர்ப்பிடேன்" என்று அனுப்பிவைக்கிறார். தீர்க்கமான அந்த பத்து கட்டளைகைளில்  ஒன்றை மீறியபோதுகூட. எவ்வளவு மகத்தானவர்களாக இருந்தாலும் அவர்கள் கீழிறங்கும் இடமும், சறுக்கும் தருணங்களும் உண்டு என்பதை உணர்ந்து, உடனே கல்லெடுத்து எறியவரும் கும்பலிடம் "நீங்கள் பாவமற்றவர்கள் எனில் முதல் கல் எறியலாம்" என்று கூற நிச்சயமாக எளிய மனிதர்களால் முடியாது. 

மாபெரும் மனிதர்களை கொண்டே கட்டமைக்கபட்ட மகாபாரதத்தில், அவர்களின் மேன்மைக்கு நிகராகவே சரிவுகளும் உள்ளன, குற்றவுணர்வு ஒன்றே மானுடர்கள் செய்ய இயலும் பிழையீடு. கல்லெடுத்து எறியவரும் கும்பலில் ஒருவனாய் இருந்த எளியவனுக்கு கிடைத்த தரிசனமாகவே வெண்முரசை பார்க்கிறேன். காலம் செல்ல செல்ல இன்னும் பல தரிசனங்கள் எழுந்துவரலாம், முதல் தரிசனம் எப்போதுமே கிளர்ச்சி ஊட்டக்கூடியது. ஆசிரியருக்கு நன்றி.

அன்புடன்,
ஆல்வின் அமல்ராஜ்

மானசா தேவி முதல்...



அன்புள்ள ஜெ,

வெண்முரசு தொடரைப் பன்னிரு படைக்கலத்தில் இருந்து வாசிக்க ஆரம்பித்துக் கடந்த நான்காண்டுகளாகத் தொடர்ந்து வந்தேன். இவை எனக்கு  என்றும் நினைவில் நிற்கும் ஒளிமிக்க ஆண்டுகள். தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும். நிறைவின் வெறுமை தாக்கினாலும், எனக்கு இன்னும் வாசிப்பதற்கு முதற்கனல் முதல் வெய்யோன் வரை ஒன்பது நாவல்கள் உள்ளன என்பது ஆறுதலாக உள்ளது.

வெண்முரசின் நிறைவில் சீர்ஷன் மானசாதேவி ஆலயத்தில் நாக வழிபாட்டைக் காண்கிறார். மேலும் சென்று மானசாதேவியின் வழி வந்த பார்ஸ்வநாதரைத் தரிசிக்கிறார். இறுதியில்  நாகபடத்தின் மேல் நடனமிட்ட கண்ணனின் குழவிச்சிற்றடிகளைத் தலைசூடிச் சரணடைந்து திளைக்கிறார்.
இங்கிருந்து திரும்பி முதற்கனலுக்குச் சென்றால், மானசாதேவி ஆஸ்திகனுக்குச் சொல்லும் நாகர்களின் கதையோடு வெண்முரசு தொடங்கி அந்தாதி போல ஒரு முடிவிலா வாசிப்புச்சாத்தியத்தை அளிக்கிறது.

வேரென இம்மாநிலத்தை உண்டு விதையெனப் பெருக்கிய மரம், வேரை அணைத்து நிலை நிறுத்தும் மண், வாழ்வின் கொடையெனப் பூத்த மலர்கள், கிளைதொறும் நெருக்கிக் கனியுண்ணும் கிளிகள் என இப்பெருங்காவியம் படைத்த உங்களையும், உறுதுணையான குடும்பத்தையும், உடன் வரும் வாசக நண்பர்களையும்  வணங்குகிறேன். 

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை

எவருக்கானது?


அன்புள்ள ஜெ நலம்தானே,


முதலில் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்கள்.

எவரும் எண்ண துணியாத வெண்முரசை எடுத்து முடித்துக் காட்டி இருக்கிறீர்கள். பெருமகிழ்ச்சி.

சென்ற மாதம் எழுதி முடித்த வெண்முரசை நிறைவின்மையும் கொந்தளிப்பும் அடைந்து பிள்ளைத்தமிழ் உடன் நிறைவு செய்திருக்கிறீர்கள். வாழ்வில் பிள்ளைகளால் தான் மகிழ்ச்சியையும் நிறைவையும் பெற முடிகிறது போல.

கொற்றவையை படித்து முடித்தபின் இரு மாதங்களுக்கு வேறு எந்த புத்தகத்தையும் எடுக்கவில்லை. மற்றதில் வேறென்ன இருக்கமுடியும் என்ற வெறுமை.

காலம் சென்றது! முதற்கனல் கையிலும் கிடைத்தது. ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு எழுத்திலும் தன்னறத்தை காண்கிறேன். உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னுள் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கின என்று சொன்னால் அது ஏதோ கடனுக்கு சொல்வது போலத்தான் இருக்கும். ஆனால் என்னால் மிக நிச்சயமாக உணர முடிகிறது. இப்பொழுது இருக்கும் நான், சில வருடங்களுக்கு முன்பு இருந்தவன் அல்ல. உங்களுக்கு நன்றி.

இப்பொழுது கேள்விக்கு வருவோம்,

வெண்முரசை படிக்க என் நண்பனை அழைத்தபோது, வெண்முரசை படிக்க ஆரம்பித்தால் அதிலுள்ள நாட்டத்தால் வேறு எதிலும் கவனம் செல்லாது, வேறு எந்த புத்தகத்தையும் படிக்க முடியாது. இந்த வேளையில், இந்த இளம் வயதில்(28) நான் படிக்க வேண்டிய, இலக்கியத்தை தாண்டிய பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை இன்று விட்டால் பிற்காலத்தில் படித்து பயன் இல்லை. பொருளாதார சிந்தனை மேம்பட, நிகழ்கால அறிவை செறிவாக்க இக்காலகட்டத்தில் அது தேவைப்படுகிறது என்கிறான். "நானும் இதில் உடன்படுகிறேன், ஆனால் இலக்கியங்களை முற்றாக மறுப்பது ஜன்னலோர காட்சிகள் அற்ற தொடர்வண்டிப் பயணத்தை போல ஆகிவிடும்" என்று சொன்னேன். [குறிப்பு: இலக்கியம் என்பதை நான் வெறும் காட்சிகள் என்று கூறவில்லை. ஒரு பதிலுக்காக அப்படி சொன்னேன்.]

ஆக ஒரு இலக்கிய புத்தகத்தையும், "Das Kapital" போன்ற புத்தகத்தையும் எடுத்துக்கொண்டால், எங்களை போன்றவர்களுக்கு முதல் தேர்வாக தாங்கள் கொடுப்பது எதுவாக இருக்கும்.

தங்கள் தேர்வை எதிர்பார்க்கிறேன். நன்றி.

-
மோகன்ராஜ் பொன்னம்பலம்
இராசிபுரம்

அன்புள்ள மோகன்

வெண்முரசு எவருக்கானது? வெறுமே பொழுதுபோக வாசிப்பவர்களுக்கானது அல்ல. போட்டித்தேர்வுகள் போன்றவற்றுக்கு தயார் செய்துகொள்பவர்களுக்கானது அல்ல. அரசியல் சார்ந்தே வாசிப்பவர்களுக்கானது அல்ல. சிக்கலான வடிவச்சோதனைகளை வாசிக்கும் கற்பனைகுறைவான வாசகர்களுக்குரியதும் அல்ல. 

அதை வாசிக்க மூன்று தகுதிகள் தேவை. ஒன்று, கற்பனையில் வாழ்க்கையை விரித்தெடுத்துக்கொள்ளும் திறமை இரண்டு, இந்திய வரலாறு மெய்யியல் தத்துவம் தொன்மவியல் சார்ந்த ஆர்வம். மூன்று ஆன்மிகமான ஒரு தேடல்.

மற்றவர்கள் வாசிக்காமலிருப்பதே நல்லது

ஜெ

மகத்தான படைப்பு



அன்பு ஜெமோ,

நலந்தானே? 

வாழும் காலத்தில் நம் கண்முன்னே இப்படி ஒரு மகத்தான படைப்பு எழுந்து வருவதை பார்ப்பது சிலிர்ப்பூட்டும் அனுபவம். ஒட்டுமொத்த மானுட ஆற்றல் மேலேயே நம்பிக்கை கொள்ளச்செய்வது. இருப்பையே  ஒளிகொள்ளச்செய்வது. 
இதைப்போன்ற  சிகரம் ஒன்று ஒளிர்ந்தெழுவதை பார்க்கும் அனுபவம் இன்னும் பலதலைமுறைகளுக்கு கிடைக்காதென்றே நினைக்கிறேன்.  

ஒரு மாதவம்போல் நீங்கள் எழுதுவதை பார்த்திருக்கிறேன். நாள் முழுவதும் நடந்து, பல இடங்களை சுற்றிப்பார்த்து, நண்பர்களிடமும், இலக்கியக் கூட்டங்களிலும் பேசி இரவு 11 மணிக்கு அரைத்தூக்கத்தில் தள்ளாடி வீடுவந்து சேர்ந்த பிறகு, நீங்கள் புத்துயிர் கொண்டெழுந்து எழுதுவதை கண்டிருக்கிறேன். அதிகாலையில் துள்ளியெழுந்து உடனே உற்சாகத்துடன் எழுதத்தொடங்குவதை பார்த்திருக்கிறேன். இது மனித உடல்தானா, மனித மூளைதானா என்று திகைப்படைந்திருக்கிறேன். வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாகிறார்கள், எப்படி விஸ்வரூபம் எடுக்கிறார்கள் என்று நான் நேரில்  உணர்ந்துகொண்ட தருணம் அது. 

வாழ்நாள் முழுவதும் நினைத்த நேரமெல்லாம் மகிழ்ச்சியையும், நிறைவையும் அளிக்கும் பெரும் பரிசை அளித்திருக்கிறீர்கள். எனக்குத்தெரிந்த வகையில் வெண்முரசுக்கும், உங்களுக்கும் இசையில் எப்படி நன்றி சொல்வது என்று நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன்.  விரைவில் தொடர்பு கொள்கிறேன்.  நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! 

அன்புடன் 
ராஜன் சோமசுந்தரம் 


Wednesday, July 29, 2020

வெண்முரசு அளிப்பது



அன்புள்ள ஜெ

வெண்முரசு நிறைவுற்றபின் இப்போதுதான் நான் வந்து சேர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக வெண்முரசு சொல்வதென்ன என்று எனக்கு இப்போது ஒற்றைவரியில் சொல்லத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமகா இதுவரை வாழ்ந்ததில் கண்டடைந்தது என்ன என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? ஒன்றை சொல்லலாம், ஆனால் அது மட்டுமல்ல என்றும் தோன்றும் அல்லவா? எனக்கு வெண்முரசில் தோன்றியது அறம் என்ற ஒன்று வெளியே தேவலோகத்தில் இல்லை. அது தெய்வம் உருவாக்கி அளிக்கவில்லை. அதை மனிதர்கள் இங்கே கண்டடைகிறார்கள். இங்கே ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு செயலிலும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த உருவாக்கத்திலுள்ள சிக்கல்களைத்தான் நாம் மகாபாரதத்தில் காண்கிறோம். அது எளிய செயல் அல்ல. நிறைய ரத்தம் நிறைய இழப்பு. ஆனால் ஒட்டுமொத்தமாக மிஞ்சுவது ஒன்று உண்டு. தர்மம் மீதான நம்பிக்கைதான்

 

ஆர்.முருகபாண்டியன்


இடும்பனின் வம்சம்


அன்புள்ள ஜெ

வெண்முரசை ஒட்டுமொத்தமாக வாசிக்கவேண்டும். இன்று முழுக்கதையும் துளித்துளியாக தெரிந்துவிட்டபிறகு பின்னால் சென்று வாசிக்கையில் வேறுவேறு கதைநுட்பங்கள் தெரியவரும். இடும்பன் கொல்லப்பட்ட காட்சியை புரட்டி வாசித்தேன். பீமனால் இடும்பன் கொல்லப்பட்டான் என்பது ஒரு கதைவடிவமாக இருந்தாலும் இன்றைக்கு வாசிக்கையில் இடும்பன் ஒரு காலகட்டத்தின் காட்சி என்பதுதோன்றுகிறது. அவன் அழிவது அந்தக்காலகட்டத்தின் அழிவு. அதன்பின் அவன் குடி அரசாங்கமாகிறது. கிருஷ்ணனின் வேதம் அவர்களை ஷத்ரியர்களாக ஆக்குகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் பாரதவர்ஷத்தையே ஆட்சிசெய்கிறார்கள். இந்த பரிணாமம் நிகழ்வது இயல்பான ஒரு மாற்றத்தால்- இடும்பன் கொலையால். இடும்பன் இருந்திருந்தால் இது நிகழ்திருக்காது. ஆனால் கடோத்கஜனின் பார்பாரிகனின் இயல்பில் இடும்பன் இருந்துகொண்டும் இருக்கிறான்

மகாதேவன்


கடத்தல்


அன்பு ஜெமோ சார்,

வெண்முரசு நாவல் நிரை நிறைவு பெற்றது.வெண்முரசின் தீவிர வாசகி எனக் கூறிக் கொள்வதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.மகாபாரதத்தின் மீதிருந்த ஈர்ப்பால் வெண்முரசுக்குள் நுழைந்தவள் நான்.காண்டீபம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் முதற் கனல் தொடங்கினேன். மொழியை விட தொன்மக் கதைகளும் அவற்றின்  உள்ளீடாகவிருந்த தத்துவங்களும் சவாலாக இருந்தன.மழைப்பாடலும், வண்ணக்கடலும் வாசிக்கும் தருணத்தில் வெண்முரசு எனும் கடலுக்குள் துமியாய் துளியாய்  உணர்ந்தேன்.‌

ஆனால் நீலம் என்னை வெளியே தள்ளியது. முயன்றும் நுழைய இயலவில்லை.நீலத்தை வாசிக்காமலே விட்டு பிராயாகை சென்றேன்.மீண்டும் கடலில் கலந்த உணர்வு. இந்திர நீலம்
வரும் போது நீலத்தை  வாசிக்க இயலுமென்றும் நீலம் வாசிக்காமல் இந்திரநீலம் வாசிப்பதில் பொருளில்லையென்றும் தோன்றியது.‌

இம்முறை நீலத்தை வாய்விட்டு சத்தமாக வாசிக்கத் தொடங்கினேன்.உள்ளிழுத்துக் கொண்டது. வீட்டிலுள்ளோர்  'என்ன நீலம் படிக்கிறியா' எனத் திரும்பிப் பார்த்து கூறுவர்.நீலம் முழுமையையும் வாய்விட்டே வாசித்து முடித்தேன். பன்னிருபடைக்களம் முடிக்கையில் தளத்திலும் எனக்கும் வெண்முரசில் இடைவெளி. சொல்வளர் காடு நிகழும் போது கூடவே பயணம். வெண்முரசு விவாதங்கள் தளம் அந்நாவலைத் தொடர இருளுக்குள் ஒளி விளக்காய் அமைந்தது.

கிராதம் வாசிப்பதில் மீண்டும் சவால். நினைவு தெரிந்த நாளாய் இருந்த அச்சத்தையும் அருவருப்பையும் கடக்காமல் நாவலைத் தொடர இயலாது என்பது தெளிந்தது. வாசிப்பு பெருஞ்சவாலாகிப் போனது இக்காலகட்டம்.கடந்தேன்.‌

வாழ்வின் கடின காலகட்டங்களை வெண்முரசைப் பற்றிக் கொண்டு கடந்திருக்கிறேன்.இனி நடக்க இயலுமா என கால்களில் சிக்கல் வந்த போதிலும் குறைந்தது ஆறு மாதத்திற்கு ஊன்றுகோலின்றி நடக்கவியலாத நிலையிலும் வெண்முரசு இல்லையென்றால் என்னவாகியிருப்பேன் தெரியவில்லை.‌

கிருஷ்ண ஜெயந்தி பூஜை முடிந்து நிறைவான நாளின் இரவில் விவாததளத்தில் முதல் கடிதமும் அதற்கான தங்கள் பதிலும் வந்தது.மிகுந்த உளஎழுச்சியான தருணமது.‌

நிகழுந்தோறும் கூட பயணித்தது பெரும்பேறு. பெருந்துயரிலிருந்து விடுவிக்கும் விடியல் தேவயானிக்கு நேரும் . தளத்தில் எழுச்சியான காலை பற்றிய பதிவு வரும். இமையத் தனிமையும் இமைக்கணக் காடும் ஒருங்கே முகிழ்ந்த தருணங்களை கூட பயணித்த வாசகரே அறிவர்.‌

வாழ்நாள் முழுமைக்கும் இதோ வெண்முரசு என்னிடமுள்ளது. வாசிக்குந் தோறும் பெறும் அறிதல்கள் தீரப் போவதேயில்லை.


இரா. சிவமீனாட்சி செல்லையா

 

அன்புள்ள சிவமீனாட்சி,

உண்மையில் எழுதியவனுக்கும் அவ்வாறு நீலம் கிராதம் சொல்வளர்காடு உட்பட பல நாவல்களில் நுழையவும் வெளியேறவும் சிக்கல் இருந்தது. அதில் கொஞ்சமேனும் வாசகர்களுக்கும் வேண்டுமே

ஜெ


கதைமாந்தர்



அன்புள்ள ஜெ.


வெண்முரசு நிறைவு பெற்று விட்டது என்பது உருவாக்கும் வெறுமையின் தாக்கம் அதைத் தொடர்ந்து எழுதிய உங்களுக்கும் , அதைத் தொடர்ந்து படித்து வந்த எல்லோருக்கும் சில காலம் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது .

மஹாபாரதம் ஏற்கனவே படித்திருந்தாலும், புதிய கோணங்கள், பார்வைகள், தத்துவ விளக்கங்கள், விவரணைகள் பெரும் வீச்சுடைய அற்புதமான படைப்பை அளித்ததற்கு நன்றி.

ஏற்கனவே சில மின்னஞ்சல்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டபடி, மற்ற மகாபாரதப்  படைப்புகளில் காணும் நம்ப முடியாத மாய மந்திரங்களைப்  பெருமளவில் தவிர்த்து, அதே சமயம் தேவையான குறியீடுகளை இழக்காமல் , சுவாரசியமும் குறையாமல் இதைப் படைத்தது பெரும் சாதனை.

பெரிய பாத்திரங்களைப் பற்றி நிறையப் பேசலாம். ஆனால் சிறிய மற்றும் துணைப் பாத்திரங்களின் முக்கியத்துவம் எங்கெங்கு தேவையோ அங்கே அவர்களே நாயகன் அல்லது நாயகியாக உலா வருவது  சிறப்பு. குறிப்பாகப் பல பெண் பாத்திரங்கள் தன்னம்பிக்கை, வீரம், அரசு சூழ்தல், மதியூகம் இவற்றுடன் திகழ்வது  குறிப்பிட வேண்டியது. ரோகிணி, துரியோதனன் மனைவி பானு, சம்வகை, கிருஷ்ணை சில உதாரணங்கள்.

நார்களம் ஆடுதல் இத்தனை சுவாரசியமாக வேறெதிலும் புனையப்பட்டிருக்குமா என்பது ஐயம்.
அதிலும்  கண்ணனும் சகுனியும் ஒரு அத்தியாயத்தில் ஆடும் நட்பு ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதி. சீட் நுனியில் உட்கார வைப்பது என்பார்களே, அது போன்ற சுவாரசியத்தைக் கொடுத்த அத்தியாயம் அது.

போர் சூழ்கை போன்ற பெரிய விஷயங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அதை பற்றி நிறைய வாசகர்கள்  எழுத வாய்ப்பிருக்கிறது.  

நிறைய எழுதிக் கொண்டே போகலாம். ஒரு சார்பு நிலை என்பதாகவே தோன்றும் மற்ற மகாபாரதப் படைப்புகளிலோ, திரைப் படங்களிலோ காண முடியாத ஒரு சார்பில்லாத  நிலை வெண்முரசு முழுவதிலுமே நிறைந்துள்ளது. உதாரணமாக துரியோதனனை முழுக்க கெட்டவனாக சித்தரிப்பதுதான் பெரும்பாலான படைப்புகளிலும் காணப் படும். ஆனால் துரியோதனன் நமக்கு மிகவும் பிடித்தமானவனாக நாம் உணரும் பல தருணங்கள் வெண்  முரசில் நிறைந்து இருக்கின்றன..

நான் கவனித்த இன்னொரு முக்கியமான விஷயம். மற்ற படைப்புகளில், சினிமாக்களில் மகாபாரதத்தின் நேர்மறை (?) பாத்திரங்களான பாண்டவர்கள், கண்ணன் போன்றவர்களை முழு சைவப் பட்சிணிகளாக சித்தரித்திருப்பார்கள்.அது உண்மை அல்ல. அதை வெண்முரசு மொத்தமாக உடைத்தெறிந்து விட்டது.

இருந்தாலும் சமைப்பது, உண்பது பற்றிய அத்தியாயங்களை மொத்தமாகப் பார்க்கையில் எங்கும், எதிலும், எல்லோருக்கும் ஊன் உணவு (துறவு நிலைகள் உட்பட ) என்று இருப்பது போலவும், சைவ உணவு உட்கொள்பவர்கள் மிக அரிதாக இருந்தது போலவும் ஒரு சித்திரம் கிடைக்கிறது .
புராண காலத்திலிருந்து  தொடங்கி இன்றைய காலம் வரை நம் நாட்டின் உணவுப் பழக்கங்களின் பரிணாமம் விவாதத்திற்கும், ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும் உரியதாகத் தோன்றுகிறது.

இறுதியாக இந்த பெரும் படைப்பினை வாசகர்களுக்கு அளித்த உங்கள் தீவிர வாசிப்பிற்கும், கடின உழைப்புக்கும் மீண்டும் நன்றி.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன் 

ஜெயமோகனின் 'வெண்முரசு



ஜெயமோகனின் 'வெண்முரசு' நிறைவடைந்தது. மொழியிலும், கருத்திலும் சமகால எழுத்துகளின் சாயலின்றி அதன் போக்கு ஒரு பேரொழுக்காக இருந்தது உண்மையில் ஒரு அற்புதம். தமிழ் இலக்கியம் அதன் செவ்வியல் தன்மையாலேயே ஜெமோவின் வழி இப்படைப்பைச் சென்றடைய முடிந்தது.

ஒரு செவ்வியல் மரபின் உள்ளடக்கம் என்பது மிகவும் ஆழமானதும், நவீன மனிதனின் உள்ளடுக்குகள், முரண்கள் அத்தனையின் மீதும் ஒளிபாய்ச்சக்கூடியதுமாகும். ஏனெனில் செவ்வியல் என்பது தேர்ந்த, மேதமைகளின் எண்ணியெண்ணி துலக்கியும் தொகுத்தும் நமக்குள்ளாகவும் புறத்திலும் செய்யப்பட்ட சேகரமே. அந்தச் சேகரத்தின் அத்தனை வலிமையும், வளமும் கொண்டு விரிந்த ஒரு மலர் வெண்முரசு. 

ஒரு அத்தியாயம் கூட கடனுக்காக எழுத்தப்பட்டதாக நான் உணரவில்லை. தத்துவத்திலும், கலையிலும் மிகச்சாதரணமாக வடமொழின் பயன்பாட்டால் ஒழிந்த பல சொற்களுக்கு மிக இயல்பான தமிழ்ச் சொற்கள் எழுந்து வந்திருப்பதை தமிழ் செவ்வியல் ஊடுருவிய, அதில் தோய்ந்த ஒரு படைப்பு மனம் மட்டுமே செய்யமுடியும். இப்படி பல உன்னதங்களை அப்படைப்பில் ஒருவர் கண்டுகொள்ளமுடியும்.

ஜெமோவின் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. அவரது அரசியல் நிலைப்பாடு, உத்திகள், கருத்து வெளிப்பாடுகள் இவை மீது எனக்கு ஒவ்வாமை உண்டு. அது வாசிப்பனுவத்தைப் பாழாக்குகிறது என்பது உண்மைதான்! ஆனால் ஜெமோ பெரும்பாலும், பெரும்பாலும்தான் புனைவுகளில் தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னைக் கண்டுபிடிப்பதில் அல்ல தன்னைக் கடந்து போவதையே எழுத்தின் மூலம் செய்யக்கூடியது என்று சொன்னதாக நினைவு.

தங்கமணி [சமூக ஊடகப் பதிவு]