Sunday, July 26, 2020

நிறுவுசொல்



அன்புள்ள ஜெ

நலம்தானே?

பீஷ்மரின் சாவுச்செய்தியை கொண்டுசெல்லும்பொருட்டு சுதமன் அனுப்பப்பட்டு அவன் அந்தச் செய்தியுடன் திரும்பும் அத்தியாயம் மனசை கனக்கச் செய்தது. பீஷ்மரின் சாவு ஒரு தவம். வாழ்க்கையையும் சாவையும் தவமாகவே செய்தவர் அவர். சாவின் இறுதியில் அவர் அனுசாசன பர்வத்தின் நூல்களைக் கேட்டு அவற்றை இறுதிசெய்தார் என்பது மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தை தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முக்கியமான ஒரு தூண்டுகோல்.

அனுசாசன பர்வம் கூறிமுடித்ததும் அவர் கிருஷ்ணனைச் சந்திக்கிறார். நாகசூதனைச் சந்திக்கிறார். ஒவ்வொரு கணக்கையாக முடித்துக்கொள்கிறார்.  “கிருதயுகத்திலும் திரேதாயுகத்திலும் துவாபர யுகத்திலும் இருந்து எவையெல்லாம் கலியுகத்திற்கு வந்துசேரவேண்டுமோ அவற்றை மட்டுமே பிதாமகர் கொண்டார். எவை கலியுகத்தில் மாற்றாக பொருள்படாதமையுமோ அவற்றை. கலியுகத்திற்கான நெறிகளை மண்ணிலிருந்தும் நீரிலிருந்தும் கண்டடைந்தார். அவை ஒன்றென ஆக்கப்பட்டதே இந்த நிறுவுசொல் என்னும் நூல்தொகை. எழுயுகத்திற்கான அறம் பொருள் இன்பம் வீடு என நான்கையும் அறுதிபடச் சொல்லும் பிறிதொரு நெறிநூல் இல்லை என்று துணிந்தோம்” என்று மிருகாங்கன் சொல்கிறார். அனுசாசனம் என்பதற்கு நிறுவுசொல் என்ற தமிழாக்கமும் அழககா இருந்தது.

ஜெயராமன்