Monday, July 13, 2020

மகாபாரதம் கேள்விகள்



ஜெ வணக்கம்

வெண்முரசு நிறைவுற்றதிற்கு வாழ்த்துக்கள். மகத்தான சாதனை. 2014  படிக்க தொடங்கி, விட்டு விட்டு ஒரு 25 சதவீதம் படித்திருக்கிறேன். வீட்டங்கில் பள்ளிக் கூடம் செல்லாமல் வீட்டிலிருக்கும் பிள்ளைகள் தொலைகாட்சி பெட்டியிலேயே மூழ்கிவிடாமல் இருப்பதற்கு, மகாபாரதத்தை அறிமுக படுத்தினேன். ஏற்கனவே இஸ்கான் அமைப்பின் ஒலி வடிவத்தை ஒரு அத்தியாயம் கேட்டிருந்தார்கள்.

இளையவன், ஏழு வயது, அமர் சித்திர கதாவின் ஆங்கில வடிவின் மூன்று தொகுப்புகளை (1400 பக்கங்களை) முடித்து விட்டான். காலையில் அமர் சித்திர கதா, மாலையில் ஸ்டார் ப்ளஸ்ஸின் இந்தி மகாபாரத ஒளிபரப்பு என்று பாரத திருவிழா கடந்த மூன்று மாதங்களாக. பெரியவன் (11 வயது) ,  புத்தகத்தில் இன்னும் ஆர்வம் காட்டவில்லை. இடையே பீட்டர் ப்ருக்கின் ஐந்து மணி நேர மகாபாரதத்தையும் பார்த்துவிட்டாரகள்.

உங்களது வெண்முரசு படித்ததால், ஓரளவு, கதாபாத்திரங்களை கருப்பு வெள்ளை என்று பகுக்காமல், அவரவர் பக்கங்கள் நியாயம் இருப்பதை பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு ஒரளவுக்கு  பதிலாக கூற முடிகிறது

1) யுதிஷ்டர் ஏன் பகடை ஆட்டத்தை இறுதி வரை ஆடினார்?
2) அரசனின் புதல்வன்தானே அரசாள வேண்டும், யுதிஷ்டர் ஏன் உரிமை கோர வேண்டும்?
3) பாண்டவர்கள் பலசாலிகள் என்றால் ஏன் 13 வருடம் காடேகி அஞ்ஞான வாசம் செல்ல வேண்டும்

என்னை பொறுத்தவரை பாரததின் மறு ஆக்கங்கள் வந்து கொண்டிருப்பதிற்கான முதன்மை காரணம்மே, இக்கேள்விகளுக்கான விடைகளை அவரவர் தரிசனத்தில் எழுதுவதால்தான்.

குழந்தை வரிசை எழுத்துகளில், மகாபாரத கேள்விகளும் பதில்களும் என்று ஒரு வரிசை இருந்தால், பாரதத்தை வெறும் கதையாக இல்லாமல் வாழ்க்கையின் உடு பாவுகளாக குழந்தைகளுக்கு கற்று கொடுக்க முடியும்.

குரு பூர்ணிமா வணக்கங்கள். குழந்தைகளுக்கு உங்கள் ஆசிகளையும் தர வேண்டும்.

அன்புடன்

சதீஷ் கணேசன்