வெண்முரசு தொடங்கிய முதல் இரவில் கண்விழித்து, காத்திருந்து, படித்துவிட்டு அதே மனநிலையில் (அரிதுயிலில்) படித்த வரிகளெல்லாம் நினைவலைகளாக மேலெழ... அந்த ஆனந்த அவஸ்தையை பழகிக்கொள்ள இரண்டு ஆண்டுகள் ஆனது.
இத்தனைக்கும் நான் அனைத்து அத்தியாயங்களையும் தொடர்ந்து வாசித்தவனும் அல்ல. ஆனாலும், ஒவ்வொரு நாளும் வெளியாகும் வெண்முரசு அத்தியாயங்களை ஒரு காதலுடன் பார்த்துவிட்டாவதுதான் படுக்கச் செல்வேன். இது போன்ற பித்து நிலையில் இருந்த பல வாசக நண்பர்களோடு பேசியபின்தான்
என்னை தேற்றிக்கொண்டேன்.
வெண்முரசு நீங்கள் ஈன்ற மூன்றாவது பிள்ளை. தலைமுறைகள் பலதாண்டிடினும் அள்ளக் குறையாத எமக்களித்த பொற்குவை. எங்கள் அலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் என்றும் வாழும் உயிரெழுத்து. புத்தக அலமாரிகளில் தனக்காக தானே நிறுவிக்கொண்ட ஞானபீடம்.
பல்லாயிரம் சொற்களை-பலநூறு தத்துவங்களை- வேதங்களின் சாரங்களை- வீரபுருஷர்கள் உலவிய அகண்ட பூமிப்பெருக்கினை- காலமடிப்புகளில் மறைந்து போன நம்மரபின் மூத்தோர்களை... எழுத்தாய் உருமாற்றி எமக்களித்த விரல்களுக்கு என் அன்பு முத்தம்.கலைமகளின் பெருங்கருணையை ஈன்று அவைநிறைத்த அன்னை விசாலாட்சி அம்மையாரின் பாதங்களுக்கு வணக்கம்.
அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்,
திருவண்ணாமலை.