அன்புள்ள ஜெ
கல்பொருசிறுநுரை வாசிக்கும்போது துவராகையின் அழிவை மனம் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தது. அது ஏன் என்று யோசித்துப்பார்த்தேன். பலகாரணங்கள். ஆனால் முக்கியமானது, அந்த நகரம் நிலையற்றது என்று தொடர்ச்சியாக நாவல் சொல்லிக்கொண்டே இருந்தது. அங்கே எதுவுமே நிலையானவை அல்ல. அது உப்பு போன்றது. நுரை போன்றது. முகில்போன்றது. இப்படித்தான் வர்ணனைகள் வந்துகொண்டிருந்தன.
அந்த இயல்பை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். சத்யபாமை அங்கே வந்ததும் கண்மூடி திறந்தால்
அந்நகரம் காணாமலாகிவிடும் என்றுதான் நினைக்கிறாள். அந்த நிரந்தரமில்லாத தன்மைதான் அதன்
அழகு. மலர்களைப்போல. உடனே வாடிவிடும் என்பதனால்தானே மலர்கள் அழகாக இருக்கின்றன. துவாரகை
கடலோரம் பூத்த ஒரு பெரிய வெண்ணிறமான மலர்
சாரங்கன்