Wednesday, July 29, 2020

கதைமாந்தர்அன்புள்ள ஜெ.


வெண்முரசு நிறைவு பெற்று விட்டது என்பது உருவாக்கும் வெறுமையின் தாக்கம் அதைத் தொடர்ந்து எழுதிய உங்களுக்கும் , அதைத் தொடர்ந்து படித்து வந்த எல்லோருக்கும் சில காலம் நீடிப்பதைத் தவிர்க்க முடியாது .

மஹாபாரதம் ஏற்கனவே படித்திருந்தாலும், புதிய கோணங்கள், பார்வைகள், தத்துவ விளக்கங்கள், விவரணைகள் பெரும் வீச்சுடைய அற்புதமான படைப்பை அளித்ததற்கு நன்றி.

ஏற்கனவே சில மின்னஞ்சல்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொண்டபடி, மற்ற மகாபாரதப்  படைப்புகளில் காணும் நம்ப முடியாத மாய மந்திரங்களைப்  பெருமளவில் தவிர்த்து, அதே சமயம் தேவையான குறியீடுகளை இழக்காமல் , சுவாரசியமும் குறையாமல் இதைப் படைத்தது பெரும் சாதனை.

பெரிய பாத்திரங்களைப் பற்றி நிறையப் பேசலாம். ஆனால் சிறிய மற்றும் துணைப் பாத்திரங்களின் முக்கியத்துவம் எங்கெங்கு தேவையோ அங்கே அவர்களே நாயகன் அல்லது நாயகியாக உலா வருவது  சிறப்பு. குறிப்பாகப் பல பெண் பாத்திரங்கள் தன்னம்பிக்கை, வீரம், அரசு சூழ்தல், மதியூகம் இவற்றுடன் திகழ்வது  குறிப்பிட வேண்டியது. ரோகிணி, துரியோதனன் மனைவி பானு, சம்வகை, கிருஷ்ணை சில உதாரணங்கள்.

நார்களம் ஆடுதல் இத்தனை சுவாரசியமாக வேறெதிலும் புனையப்பட்டிருக்குமா என்பது ஐயம்.
அதிலும்  கண்ணனும் சகுனியும் ஒரு அத்தியாயத்தில் ஆடும் நட்பு ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதி. சீட் நுனியில் உட்கார வைப்பது என்பார்களே, அது போன்ற சுவாரசியத்தைக் கொடுத்த அத்தியாயம் அது.

போர் சூழ்கை போன்ற பெரிய விஷயங்கள் பற்றி கேட்கவே வேண்டாம். அதை பற்றி நிறைய வாசகர்கள்  எழுத வாய்ப்பிருக்கிறது.  

நிறைய எழுதிக் கொண்டே போகலாம். ஒரு சார்பு நிலை என்பதாகவே தோன்றும் மற்ற மகாபாரதப் படைப்புகளிலோ, திரைப் படங்களிலோ காண முடியாத ஒரு சார்பில்லாத  நிலை வெண்முரசு முழுவதிலுமே நிறைந்துள்ளது. உதாரணமாக துரியோதனனை முழுக்க கெட்டவனாக சித்தரிப்பதுதான் பெரும்பாலான படைப்புகளிலும் காணப் படும். ஆனால் துரியோதனன் நமக்கு மிகவும் பிடித்தமானவனாக நாம் உணரும் பல தருணங்கள் வெண்  முரசில் நிறைந்து இருக்கின்றன..

நான் கவனித்த இன்னொரு முக்கியமான விஷயம். மற்ற படைப்புகளில், சினிமாக்களில் மகாபாரதத்தின் நேர்மறை (?) பாத்திரங்களான பாண்டவர்கள், கண்ணன் போன்றவர்களை முழு சைவப் பட்சிணிகளாக சித்தரித்திருப்பார்கள்.அது உண்மை அல்ல. அதை வெண்முரசு மொத்தமாக உடைத்தெறிந்து விட்டது.

இருந்தாலும் சமைப்பது, உண்பது பற்றிய அத்தியாயங்களை மொத்தமாகப் பார்க்கையில் எங்கும், எதிலும், எல்லோருக்கும் ஊன் உணவு (துறவு நிலைகள் உட்பட ) என்று இருப்பது போலவும், சைவ உணவு உட்கொள்பவர்கள் மிக அரிதாக இருந்தது போலவும் ஒரு சித்திரம் கிடைக்கிறது .
புராண காலத்திலிருந்து  தொடங்கி இன்றைய காலம் வரை நம் நாட்டின் உணவுப் பழக்கங்களின் பரிணாமம் விவாதத்திற்கும், ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும் உரியதாகத் தோன்றுகிறது.

இறுதியாக இந்த பெரும் படைப்பினை வாசகர்களுக்கு அளித்த உங்கள் தீவிர வாசிப்பிற்கும், கடின உழைப்புக்கும் மீண்டும் நன்றி.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்