Monday, July 13, 2020

வெண்முரசு என்னும் ராட்சச் பிரதி: திரு கார்த்திக்

நவீன தமிழ் வாசகனுக்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் வெண்முரசு. இருபத்தாறு நூல்கள் அவையெல்லாம் சேர்ந்து இருபத்தைந்தாயிரம் பக்கங்கள் என எண்ணிக்கை அளவிலான ஒரு சவால். தமிழ் இலக்கியச்சூழல் வெண்முரசை இன்னமும் நவீன இலக்கியமாக அணுகவில்லை. அதன் தாக்கத்தால் இது நாள் வரை வெண்முரசை திறப்பதில் எனக்கு ஒவ்வாமை இருந்தது உண்மை.

உலக திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து அலுப்பேறுவிட்ட போது வெகுசன திரைப்படங்களுக்கு நகர்வது போல், தொடர் வாசிப்பின் போக்கி தற்செயலாக வெண்முரசின் பக்கங்களை திறந்த எனக்கு அது ஒரு சுவாரசியமான சவால் என்றே தோன்றியது. அதன் பக்க அளவிலான சவாலை வாசிப்பின் வேகம் இயல்பாக கடந்துவிடுகிறது. நெடும்பிரதியை வாசிக்கப்போகிறேன் என்ற களைப்பின்றி அப்பிரதி நம்மை உட்கொண்டு நகர்த்திச்செல்கிறது.

மரபான காவியத்தை மீண்டும் எழுதும் போது நவீன செவ்வியல் இலக்கியங்கள் சாத்தியப்படுத்தியுள்ள அத்தனை கருவிகளையும் இதில் பயன்படுத்திக் கொள்கிறார் ஜெயமோகன். எளிமையான சொற்றொடர்கள், கவித்துவ மொழிநடை, விரிவான காட்சி சித்தரிப்பு, தொன்மங்களை பளபளக்கச் செய்யும் வர்ணனைகள் இவை எல்லாவற்றிற்கும் மேல் நவீன உளவியல் வழியாக கதைமாந்தர்களை அணுகுதல் என வேறோரு உலகை நாவல் நம்முன் விரிவடையச் செய்கிறது.

நாவல் எங்கும் வேத புராணங்கள் விரிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு கதைமாந்தர் மற்றும் அரசு பற்றிய அறிமுகத்திலும் அவர்களின் தோற்றத் தொன்மங்கள் பேசப்படுகின்றன. நாகர்களின் புராணம், நாகசூதர்களின் காலக்கணிப்பு என நாகர் உலகம் கதையெங்கும் சூழ்ந்துள்ளது. காலத்தை கணிக்கும் நிமிர்த்திகர்களும் நாகசூதர்களும் ஒவ்வொரு சிசு தறிக்கும்போதும் உதிர்க்கும் சொற்கள் இனிவரும் அத்தியாங்களை பெருங்கனவாக்குகின்றனர். இசையும் பாடலும் கொண்ட சூதர் இனக்கூட்டம் வாய்மொழியாக மக்களுக்கு வரலாற்றை கடத்தி தேசமெங்கும் பரந்துள்ளனர்.

வாய்மொழி செய்தி பரப்பும் ஊடகமான சூதர்கள் மன்னர்களின் வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன். அம்பை தீச்சொல்லிட்ட நகரை இனிநாங்கள் பாடமாட்டோம் என சூதர்கள் கிளம்புகிறார்கள். சூதர்கள் பாடாத நகர் அரசழிந்து பாழாகிறது. தீச்சொல்பட்ட பீஷ்மரை நகர மக்கள் அற்பமாக எண்ணி கடந்துச் செல்கின்றனர். பீஷ்மரும் நகரைத் துறந்து நெருங்காலம் காடுகளிலும் அயல்தேசங்களிலும் அழைகிறார். தீச்சொல்லும், வரமும் காப்பியத்திற்குள்ள தன்மையோடு கதைக்குள் அசாத்தியங்களை வழங்குகின்றன.

யமுனையில் சத்தியவதியின் உடலின் மணத்தால் கவரப்பட்ட சத்யவான். சத்தியவதிக் கொடுத்த யமுனை நதி முத்துக்களின் மணத்தில் சிந்தையிழந்தவாக காலமெல்லாம் இருந்த சித்திரங்கள் அலாதியானவை. அம்பையின் கோபமே உருவாய் பிறந்த சிகண்டி வரும் காட்சிகளின் அத்தியாயங்கள் திகைக்கச் செய்கிறது.

இத்தனைப் பெரிய காப்பியத்தின் மாந்தர்களை அதன் மரபான சாயலில் இருந்து துண்டிக்காமல் சமகால கதைமாந்தருக்கு தேவையான உளச்சித்தரிப்புகளுடன் விஸ்தரித்திருப்பதே இதன் நவீன தன்மை. மரபான காப்பியம் பேசாத பெண்களின் அகத்தை இந்நாவல் பேசுகிறது. வாசிக்கும் போது அக்கதையின் தொன்ம மாந்தர்கள் பற்றிய நம் முன்முடிவுகள் மெல்ல அழிந்து அம்மாந்தரின் அகமும் புறமுமாக வேறொரு ஆளாக நம்முள் பிரதி பாய்ச்சுகிறது.

குறிப்பாக பீஷ்மர், காந்தாரியை திருதராஷ்ட்ரனுக்கு மணமுடிக்க சகுனியின் ஒப்புதலை பெறுவதற்காக சந்திக்கிறார்.

… பேச்சு வார்த்தைகளின் போது எச்சரிக்கைக்காக கண்களில் சளிப்புற்று உள்வாங்கிய பாவனை ஒன்றை அணிந்துகொள்வதை பயின்றிருந்த சகுனி அவரது கண்களில் தன்னை கூர்ந்தறியும் முயற்சியே இல்லை என்பதை கண்டான். அது அவனை குழப்பியது. அவரது அந்த நோக்கு ஒரு தேர்ந்த பயிற்சியின் விளைவோ என்று அவன் எண்ணினான்…

பீஷ்மர் பேசத்துவங்குகிறார்.

… “எங்கள் மன்னன் விழியிழந்தவன். நானோ முதியவன். தாங்கள் வல்லவர். எங்களுக்கு படையும் செல்வமும் உறவும் கொண்ட காந்தாரம் போன்ற நாட்டின் மணம் பெரும் நன்மை பயக்கும். அதே போன்று காந்தாரத்திற்கும் அஸ்தினபுரி வலிமை சேர்க்கும்” என்றார். சகுனி மெல்ல அசைந்தான். அவனையறியாமலேயே வெளிப்பட்ட அவ்வசையின் மூலம் அவன் அகம் பீஷ்மருக்குத் தெரிந்தது என்பதை உடனே அவன் உணர்ந்துக் கொண்டான். விழியிழந்த மன்னன், முதிய தளபதி, நீ வல்லவன் என்னும் மூன்று சொற்சேர்க்கைகளையும் அவன் அகம் இணைந்து அறிந்துகொண்டது என அவர் அறிந்ததை அவன் உணர்ந்தான்….

பீஷ்மர் மற்றும் சகுனியின் உளபோக்கு அவர்களின் நுண்ணறிவுப் பற்றிய சித்தரிப்புகள் அனாயாசமாக உள்ளன.

அரசவை பீடத்திலிருந்து எழுந்திருக்காத தூர்தர்ஷன் பீஷ்மரை பார்த்து வளர்ந்த எனக்கு வெண்முரசின் பீஷ்மர் என்னை திகைக்கச் செய்கிறார்.

இதேபோல் மற்றுமொரு உரையாடல் விதுரனுக்கும் திருதராஷ்ட்ரனுக்கும் இடையில் நிகழ்வது.

திருதராஷ்ட்ரன்: “நீ காவியங்களையே படிக்கிறாய்?”

விதுரர்: காவியங்களில் தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன், அரசே. வெளியே உள்ளே உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக் குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பல நூறு முறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன். இடிந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.

திருதிராஷ்ட்ரர்: நீ ஏன் அதைச் செய்ய வேண்டும்? உன்முன் வாழ்க்கை கங்கை போலப் பெருகி ஓடுகிறதே.

விதுரர்: அரசே, ஒரு கனியை உண்ணும் போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத் தெரியாதவன் உணவை அறியாதவன்.

கதைமாந்தர்களுக்கு இடையிலான உரையாடலில் வழியே வெளிப்படும் ஆழம் கொண்ட வரிகள் அவ்வப்போது வாசிப்பில் திடுக்கிடச்செய்கிறது .

உதாரணமாக:

1. அம்பிகை விசித்திரவீரியனிடன் உரைப்பது, “பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு சேர்ந்து சிரிப்பதற்கு உரிமை இல்லை”

2. விசித்திரவீரியன் உரைப்பது, “ எல்லா மனிதர்களும் நெஞ்சுக்குள் ஒரு சிறு முலையையாவது வைத்திருக்கிறார்கள்”

3. வியாசர், சிவையிடம் உரைப்பது, “ஞானம் துயரத்துக்கு மருந்தல்ல என்று அறிந்தவனே கவிஞனாக முடியும்”

4. அம்பை சிகண்டியிடம் உரைப்பது, “ஒற்றை இலக்குக்காக வாழ்பவன் அதை அடைந்தாக வேண்டுமென்பது பெருநியதி. இப்போதே அக்காட்சியை பார்த்துவிட்டேன்.”

5. சிகண்டி அக்னிவேசரிடம் உரைப்பது, “ நான் எப்படி இருக்க வேண்டுமென நானே முடிவெடுத்தேன்.”

6. அக்னிவேசர் சிகண்டியிடம் உரைப்பது, “ ஒருவன் நன்கறிந்திருக்க வேண்டியது தன் எதிரியைப் பற்றித் தான். எதிரி நம்முடைய ஆடிப்பிம்பம் போல… தன் ஆடிப்பாவையிடம் மட்டுமே மனிதர்கள் தோற்கிறார்கள்”

7. பால்ஹிகர் சிகண்டியிடம் உரைப்பது, “முடிவற்றது ஆடியின் ஆழம்…ஆடிகளை நாம் உடைக்கமுடியாது. ஏனென்றால் நம்மை நாம் உடைக்க முடியாது”

8. ஆயிரம் பெண்களை ஒரு பெண்ணில் அடைபவனே காமத்தை அறிகிறான்.

9. மழைப்பாடலில் நகரம் பற்றிய குறிப்பு, “இப்புவியில் எத்தனையோ நகரங்கள் உள்ளன. ஒளிவிடும் காலக்குமிழிகள் வரலாறு, விரல் கொண்டு மீட்டும் சிறுபறைகள். எதிர்காலப்பறவை இங்கு அடைகாக்கும் சிறுமுட்டைகள். நகரம் மானுட இழிமைகளை அள்ளிவைத்த சிறு கிண்ணம். அழுக்கு ஒழுகும் நரம்புகளோடும் உடல்கொண்ட குருட்டு மிருகம். ஏணிகளின் சிரிப்பில் நாகங்களும் வாய்திறந்து நிற்கும் பரமபதக்களம்.”

10. திராவிட நாட்டு பாணனின் அருமையான இசை நிகழ்ச்சிக்கு பின், விதுரர் திருதராஷ்டரை நோக்கி, “இரவுக்குரிய இசை அண்ணா.” பதிலுக்கு திருதராஷ்ட்ரன் உரைப்பது “ஆம், ஆனால், நான் அந்த வேறுபாட்டுக்கு வெளியே இருக்கிறேன்”.

11. மல்லுத்தத்தில் திருதராஷ்ட்ரன் பீஷ்மரிடம் தோல்வியுற்ற பிறகு பலாஹாஸ்வர் உரைப்பது, “ யானைக்கு நிகரான வல்லமை மண்ணில் இல்லை. ஆனால், அதன் நெற்றிக் குழியில் நம் வெறுங்கையால் அறைந்து அதைக்கொல்ல முடியும். மனித உடலும் மனமும் எத்தனை ஆற்றல் கொண்டதானாலும் மிகமிக நொய்மையான சில இடங்கள் அவற்றில் உண்டு. நொய்ந்த இடங்களை வல்லமைமிக்க இடங்களைக் கொண்டு காத்துக் கொண்டவனே உடலையும் மனதையும் வெல்லமுடியும்.

இவ்வாறான எண்ணெற்ற வரிகளை நாம் வாசிக்க இயலும்.

மொத்த பாரததேசத்திலேயே மிகப்பெரிய நகரம் அஸ்தினாபுரி அவ்வாறிருக்க விசித்திரவீரியனுக்கு சிகிச்சை அளிக்க வந்த அகத்தியர் (பொதிகையில் இருந்து வருகிறார்), அஸ்தினாபுரி மதுரைக்கு ஒப்பான நகர் என வர்ணிகிறார். அதேபோல் தேவபாலபுரம், பாரததேசத்தில் மிகப்பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது. அதற்கு இணையான ஒரே துறைமுகம் தென்மதுரை மட்டுமே இதைவிடப்பெரியது என ஊர்ணர் பீஷ்மரிடம் குறிப்பிடுகிறார். இவ்வாறாக தமிழ்நிலம் பற்றிய பிரம்மாண்ட சித்தரிப்புகளை ஆங்காங்கே ஜெயமோகன் தூவியிருக்கிறார்.

அதேபோல், காந்தாரத்திற்கு செல்லும் வழியில் ஒரு கைவிடப்பட்ட தொல் நகரைப் (ஹரப்பா/மொகஞ்சதாரோ) ஆர்வமுடன் பீஷ்மர் பார்க்கிறார். அதனை ஆவிகளின் ஊர் என்கிறார் வழிகாட்டியான பிராமணன். தாழிகளில் வைத்து சவத்தை அடக்கம் செய்யும் முறையைப் பார்த்து இந்த முறை திருவிடநாட்டினரின் (திராவிட) முறை என்கிறார் பீஷ்மர். மேலும், காந்தார குடித்தோற்றம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது காந்தார மன்னர்களின் வழித்தோன்றல்தான் திருவிடநாட்டில் உள்ள மூவேந்தர்களும் என பீஷ்மர் குறிப்பிடுகிறார். கதையின் போக்கில் அக்கதைமாந்தர்கள் தமிழ் குடிகளை வியந்து பேசுகின்றன.

சூதப் பெண்ணிற்கும் வியாசருக்கு பிறந்த விதுரர் அஸ்தினாபுரியின் மதியூக்கம் பெற்ற தலைமைஅமைச்சராகிறார். இருப்பினும் அவர் சூதர் குலத்தவராகவே அறியப்பட்டு சத்திரிய குலச்சூழலில் மனநெருக்கடிக்குள்ளவதை வாசிக்கும் போது நமக்கும் தொற்றுகிறது. குறிப்பாக குந்தியின் சுயம்வரத்திற்கு சென்ற போது சூதரான தன்னை சுயம்வரப்பந்தலில் அனுமதிப்பார்களா என்று ஐயமுற்று யமுனைக் கரையில் உலவும் காட்சி.

மேய்ச்சல், வேளாண்மை, சுங்கம் போன்ற முதன்மை வருவாய் கொண்டிருக்கும் சத்திரிய அரசுகள் பெருநாவாய்கள் கொண்டு நிகழும் கடல்வாணிகம் என்ற புது வருவாயை கையகப்படுத்திக் கொள்ள நிகழும் அரசியல் சூழ்ச்சிகள் பற்றிய சித்தரிப்புகள் நாவலின் போக்கில் விரிவடைகின்றன.

அதேவேளையில் மேய்ச்சலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட யாதவர்கள் எழுச்சியும் அப்போது நிகழ்கிறது. கடல் வாணிகத்தை கைப்பற்றுவதுதான் பேரரசு நிலைத்திருப்பதற்கான வழியென காந்தார மணவுறவை ஏற்படுத்துகிறது அஸ்தினாபுரி அரசியல். மேலும், புதிதாத எழுச்சிபெரும் யாதவக் குலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என யாதவகுல சிற்றரசன் குந்திபோஜனின் அரசவாரிசான குந்தியை மணமுடிக்கிறார்கள்.

இவ்வாறாக வந்து சேர ஆயிரம் பக்கங்களை ஒரு வாசகன் கடக்க வேண்டியுள்ளது.

ஒரு வாசகனாக இப்பிரதி எவ்வாறு சவால் நிறைந்ததோ அதைவிட ஒரு திறனாய்வாளனுக்கு இப்பிரதி பெரும் சவால். தமிழ் திறனாய்வாளர்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இப்பிரதியை பார்க்கிறேன்.

மிக நீண்ட பக்கங்கள் கொண்ட பிரதியை எவ்வாறு திறனாய்வு செய்வது. முழுவதுமாக இருபத்தாறு நூல்களை (25,000 பக்கங்களை) படித்து முடித்தபின்னரா? இல்லை வாசிப்பின் போக்கிலேயே திறனாய்வு செய்வதா? இதனை மூலப்பிரதியுடன் ஒப்பீட்டுஆய்வு செய்வதா? நவீனநாவலாக மட்டும் கண்ணை சுருக்கிக் கொள்வதா? சமகால சமூகஅரசியல் சூழலுடன் பொறுத்தி வாசிப்பதா? இல்லை, ஏன் இந்த நூலை வாசிக்கக் கூடதென வாசித்தபின் கட்டுரை எழுதுவதா? இல்லை இந்த நூல் எழுதப்படவே இல்லை என்று எண்ணிக்கொள்வதா?

சமீபத்திய ஜெயமோகனின் காணோளி உரையாடலில் ‘நீலம்’ எழுதிய போது நிறைய கடிதங்கள் வந்ததை குறிப்பிட்டார். அதுவும் நிறைய பெண்கள் உணர்ச்சி பொங்க எழுதியது. அது எனக்கு நாட்டுப்புறக் கதைப்பாடல் நிகழ்வை நினைவுபடுத்தியது.

திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் தெய்வம் சார்ந்த நாடகத்திலும், வில்லுப்பாட்டு போன்ற கதைப்பாடல்களிலும் தெய்வத்தின் பிறப்பு பாடப்படும் போது ஊரே சாமியாடும் அது அந்நிகழ்வில் ஒரு உச்சநிலை.

அது போல நீலம் (கிருஷ்ணரின் பிறப்பு) எழுதப்பட்ட போது வாசகர்கள் துடியேறி கடிதம் எழுதியிருக்கிறார். ஒரு நவீனப்பிரதி எவ்வாறு இதனை நிகழ்த்தியது. வெண்முரசு ஒரு நவீனப்பிரதி என்றால் வாசகர்கள் அதனை நாட்டுப்புறப் பிரதியாக்குகிறார்களா? இவ்வாறான வெவ்வேறு திறனாய்விற்கான சாத்தியங்களுடனே வெண்முரசை வாசிக்க வேண்டும்.