அன்புள்ள ஜெ.,
குரு பூர்ணிமா தினத்தன்று நீங்கள் கலந்து கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்திப்பில் இரண்டிலுமே நான் 'யு ட்யூப்' மூலமாக கலந்து கொண்டேன். ஜா.ராஜகோபாலன், சந்தோஷ் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். மிக நீண்ட வாசகர் சந்திப்பு. பலரும் நேரடியாகக் கேள்விக்குப் போகாமல் 'வணக்கம் சார்' என்று சொல்லிவிட்டு பதில் வணக்கம் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆசிரியரோடு பேசும் இன்ப அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் முட்டி நின்றனர் சிலர். ஏதோ கேட்க நினைத்து வேறேதோ கேட்டனர் சிலர். சில நல்ல கேள்விகளும் இல்லாமலில்லை. ஆனால் உங்களைத் திணறச் செய்யும் எந்தக்கேள்வியும் இருந்தது போலத் தெரியவில்லை. நீங்கள் எதிர்பார்த்து கேட்கப்படாத கேள்விகள் எதுவும் இருந்தனவா?
மேலும் இப்படைப்பு சார்ந்து நீங்கள் கூறவேண்டிய அனைத்தையும் நீங்கள் கூறிவிட்டீர்களா? ஏனென்றால் ஜனமேஜயனுக்குப் பின் வருகிற வரலாற்றினை வரும் காலத்தில் பெருநாவலாசிரியர்கள் விரித்தெடுக்க சாத்தியம் நிறைய உள்ளது. பெரும் திரைப்படங்களுக்கு 'மேக்கிங் ஆப் தி மூவி' செய்வது போல இந்த மாபெரும் நாவல் தொகையை கட்டமைக்க, தரவுகளைத் திரட்ட நீங்கள் மேற்கொண்ட எத்தனங்களை விரிவாக எழுத்தில் பதிவு செய்தால் அது பெருங்காவியங்களை, பெருநாவல்களை மீட்டெழுத முயல்வோருக்கும், வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். செய்ய வாய்ப்புள்ளதா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன்
பொதுவாக ஒரு நாவல் முடிந்ததுமே அதை எப்படி எழுதினோம்
என்றெல்லாம் உரையாட நாம் விரும்புவதில்லை. அது ஒருவகையான சலிப்பையே அளிக்கிறது. அதிலிருந்து
விலகுவதே நம் மனநிலையாக உள்ளது. அந்நாவலை திரும்ப நினைவில் ஓட்டிக்கொள்வதேகூட உவப்பாக
இருப்பதில்லை. அதை உருவாக்கியதைப் பற்றியெல்லாம் பேச நீண்டநாட்களாகும். வாசகர்களைப்
பொறுத்தவரை அவர்கள் கேட்கவிரும்புவது அதை உருவாக்கியதைப் பற்றி அல்ல. அதை வாசிப்பதைப்பற்றி,
அதிலுள்ள சிக்கல்களைப் பற்றி மட்டுமே
ஜெ